கவுகாத்தி, ஏப். 2 அசாமில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்று (1.4.2026) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது “இரட்டை அடிமை அரசு” பாஜகவினர் தங்கள் ஆட்சியை ‘இரட்டை என்ஜின் அரசு’ என்று அழைத்து வருகின்றனர். ஆனால், உண்மையில் இது ‘இரட்டை அடிமை அரசு’ ஆகும். பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அடிமைப்பட்டு இருக்கிறார். அதேபோல், அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா, பிரதமரின் அடிமையாகச் செயல்பட்டு வரு கிறார் என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி னார்.
அசாமின் வளங்கள் அனைத்தும் ஒரே குடும்பத்தால் கொள்ளையடிக்கப்படு வதாகவும், மாநிலத்தின் சுரங்கங்கள் மற்றும் நிலங்கள் பெரும் தொழிலதிபர்களுக்குத் தாரைவார்க்கப்படுவதாகவும் அவர் சாடினார்.
பாஜக தலைமையிலான அரசு அனைத்துத் துறைகளிலும் ஊழலில் ஈடு பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அரசுத் திட்டங்களின் பலன்களைப் பெறும் பெண்களை, தங்கள் பெயர்களை நீக்கிவிடுவோம் என்று மிரட்டி, பிரதமர் மற்றும் முதலமைச்சரின் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக் கட்டாயப்படுத்துவதாகவும் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.
தேர்தல் நெருங்கும் வேளையில், பிரியங்கா காந்தியின் இந்த அதிரடிப் பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
