நமது கூட்டணி – கொள்கைக் கூட்டணி! ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி!

2 Min Read

மே 5 ஆம் தேதி மீண்டும் நமது முதலமைச்சர் கோட்டையில் அமர்வார்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை

சென்னை, மார்ச் 31 நமது கூட்டணி – கொள்கைக் கூட்டணி! ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும், மே 5 ஆம் தேதி மீண்டும் நமது முதலமைச்சர் கோட்டையில் அமர்வார் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

நேற்று (30.3.2026) சென்னை அண்ணா அறிவால யத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களோடு, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துரையாடினார்.

அக்கலந்துரையாடலில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறார் முதலமைச்சர்!

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ரத்தினச் சுருக்கமாக இங்கே சொன்னார்கள்.  சுருக்கமாகச் சொன்னது மட்டுமல்ல, உருக்கமாகவும் சொன்னார்கள். இடையிலே பேச்சு வார்த்தைகள் எத்தனை இடங்கள்? என்பதெல்லாம் தீர்மானிக்கின்ற போது  சங்கடங்கள் எழுந்திருக்கலாம், அப்படி இருந்தால் அதை நீங்கள் பொறுத்திட வேண்டுமென்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொன்னது, எவ்வளவு பெருமைக்கும், பெருமிதத்திற்கும், நனிநாகரிகத்திற்கும் உரியது. திராவிட இயக்கத்திற்கே உரிய கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கும் அடையாளமாகத் திகழ்கிறார் என்பதைக் காட்டுகிறது.

நம்முடைய கூட்டணி,  கொள்கைக் கூட்டணியாகும். அந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிற அனைவருக்கும் பாராட்டுகள், அனைவருடைய ஒத்துழைப்புக்கும் பாராட்டு கள். இந்தக் கூட்டணி என்பது வெறும் இடங்களுக்காக அல்ல; இது  முழுக்க முழுக்க கொள்கைக்காக! இடம் இருக்கிறதா? இல்லையா என்பது முக்கியமல்ல! மக்கள் மனதில் நமக்கு இடம் இருக்கிறதா, இல்லையா? என்பதுதான் மிகவும் முக்கியம்.

மீண்டும் நம்முடைய அருமை முதலமைச்சர் கோட்டையில் அமர்வார்!

மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கின்றோம், மீண்டும் இது வளரக்கூடிய அளவிற்கு, கூட்டணியினுடைய எண்ணிக்கை எப்படி விரிந்திருக்கிறதோ, அதுபோல, தேர்தல் முடிவுகளின் எண்ணிக்கையும் விரிந்து, நாம் மகிழ்ச்சியாக மீண்டும் சந்திக்கக்கூடிய அளவிற்கு வரும். மீண்டும் நம்முடைய அருமை முதலமைச்சர் அவர்கள், கோட்டையில் அமர்வார்.

மே 5 ஆம் தேதியன்று, அந்த மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி, நாம் எல்லோரும் விரும்பியதைவிட இன்னும் மேலும் மகிழ்ச்சியைத் தரும்; தரவேண்டும். ஒத்துழைப்புத் தந்திருக்கின்ற அத்துணை பேருக்கும் நன்றி!

வாகை சூடுவோம், வெற்றி நமதே!

‘‘எல்லா தொகுதிகளும் நான் நிற்கின்ற தொகுதிதான்’’ என்ற  உணர்வோடு பணியாற்றவேண்டும் என்று நம்மு டைய முதலமைச்சர் கூறியிருக்கிறார். அதே உணர்வைக் கூட்டணியில் உள்ளவர்களும் சிறப்பாகச் செய்து, நாம் ஒரு குடும்பம், அந்தக் குடும்பம் விரியுமே தவிர, விரிசல் கிடையாது என்பதைத் தெளிவாகக் காட்டி, வாகை சூடுவோம், வெற்றி நமதே!

மீண்டும் சந்திப்போம், நன்றி வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *