மீன், முட்டை கூட சாப்பிடக் கூடாதா? அமித் ஷாவிற்கு மம்தா காட்டமான பதிலடி!

1 Min Read

கொல்கத்தா, மார்ச் 31–- மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் மம்தா கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஊடுருவல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மம்தா பாதிக்கப்பட்டவர் போல நடித்து மக்கள் மத்தியில் அனுதாபத்தைத் தேடுகிறார்,” என்று திரிணாமுல் காங்கிரஸ் அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மம்தாவின் பதிலடி

புருலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மம்தா இதற்குப் பதிலளித்துப் பேசியதாவது: அதிகாரப் பறிப்பு: “நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். ஆனால், ஒன்றிய அரசு எனது அதிகாரங்கள் அனைத்தையும் பறித்துவிட்டது. அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனது கைகளைக் கட்டிப்போட்டுவிட்டு என்னை எப்படிக் குறை சொல்ல முடியும்?”

வன்முறைக்கு யார் காரணம்?

“முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ராம நவமி அன்று நடந்த வன்முறைக்கு பாரதிய ஜனதா கட்சியே முழு காரணம். பழியை என் மீது சுமத்த வேண்டாம்.”

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். நீங்கள் மீன், மாமிசம், ஏன் முட்டை கூட சாப்பிட முடியாத நிலை ஏற்படும். தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் நிறுத்தப்படும்.”

“என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமித் ஷா கூறி வருகிறார். உண்மையில், அவரது கடந்த காலச் செயல்களுக்காக அவர் மீதுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்.

தேர்தல் நெருங்கும் வேளையில், மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *