கொல்கத்தா, மார்ச் 3–0 மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மம்தா தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 76 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப் பட்டுள்ளன.
தேர்தல் ஆணையமும் பா.ஜ.க.வும் சேர்ந்து மோசடி செய்வதாக மம்தா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மற்றும் நக்சல்பாரியில் நடந்த பேரணிகளில் மம்தா பானர்ஜி பேசிய கருத்துகள் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
பேரணியில், “வாக்குப்பதிவு நாட்களில் வாக்குச்சாவடிகளைப் பாதுகாக்க மேற்கு வங்கப் பெண்கள் ஒரு சிறப்பு முன்னெடுப்பை எடுக்க வேண்டும்.
அடுத்த அய்ந்து ஆண்டுகளுக்கு மேற்கு வங்கத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால், வாக்குப் பதிவு நாளன்று நீங்கள் வாக்குச் சாவ டிகளைப் பாதுகாத்து, வெளி யாட்கள் வாக்குப்பதிவு செயல்பாட்டில் தலையிடுவதைத் தடுக்க வேண்டும்.
வீட்டில் சமயலறையில் உங்களிடம் என்ன இருக்கிறதோ அதையெல்லாம் எடுத்துக்கொண்டு வாருங்கள்” என்று மம்தா பேசிய காட்சிப் பதிவு பரவலாகி வருகிறது.
இது வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள மத்திய ஆயுதக் காவல் படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகப் பெண்களை தூண்டிவிடும் முயற்சி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறிய கருத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.
அவர் சமர்ப்பிக்கும் அறிக்கைபடி, இதனை தேர்தல் நடத்தை விதி முறைகள் கீழ் விதிமீறலாக கருதி நட வடிக்கை எடுக்கலாமா என தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளது.
