(வைக்கம் பயணக் கட்டுரை)
கி.தளபதிராஜ்
சமூகநீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் பிரச்சாரப் பயணப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் 2023 மார்ச் 7 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது 50ஆவது கூட்டம் என்பதால் தோழர்கள் மிகுந்த உற்சாகத்தோடு சிறப்பாக நடத்திட பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் தமிழர் தலைவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்படுகிறது என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். ஓரிரு நாட்களிலேயே நலம் பெற்று தன் பணிகளை தொடங்கினார் தலைவர்.
மயிலாடுதுறையில் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சி மார்ச் 30 ஆம் தேதி நடைபெறும் என விடுதலையில் செய்தி கண்டு பின்னர் பெரு மகிழ்ச்சி அடைந்தோம். “பழம் நழுவி பாலில்” என்று சொல்லப்படுவது போல மயிலாடுதுறை பொதுக்கூட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 30ஆம் தேதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வைக்கம் போராட்டம் தொடங்கப்பட்ட நாள். குறிப்பாக இந்த ஆண்டு மார்ச் 30 வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தொடக்க நாள் என்பதால் மிகுந்த உற்சாகத்திற்கு ஆளானோம்.
இதற்கிடையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்கவிழா வைக்கத்தில் கேரள அரசு சார்பாக ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறும் என்றும் கேரள முதலமைச்சர் பிரனாய் விஜயன் அவர்களும், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. உடனே மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரனைத் தொடர்பு கொண்டு வைக்கம் செல்ல முடிவெடுத்தோம்.
மார்ச் 30ஆம் தேதி நிகழ்ச்சியையொட்டி நகர் முழுவதும் சுவரெழுத்து விளம்பரப் பணியை விரிவு படுத்தினோம். பொதுக்கூட்டம் நடைபெற இருந்த இடம் மின் விளக்குகளில் மிளிர கழகக் கொடிகள் பட்டொளி வீசி பறந்தன. மேடையின் அருகில் தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டதை சித்தரிக்கும் ஓவியம் பிளக்ஸ் போர்டில் இணைக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்தது. வைக்கம் நூற்றாண்டை நினைவு கூரும் வகையில் தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்து மேடைக்கு வருகைதந்தார். அரை மணி நேரம் உரையாற்றி சிதம்பரத்தில் நடைபெற இருந்த அடுத்தப் பொதுக்கூட்டத்திற்கு செல்ல இருந்த தலைவரின் சிறப்புரை ஒரு மணி நேரத்தையும் தாண்டியது. வைக்கம் போராட்டம் தொடர்பான செய்திகளை அடுக்கடுக்காக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டு அசதியில் அடுத்த நாள் வைக்கம் செல்ல இயலுமா? என சற்று மனத்தடங்கலில் இருந்த எங்களுக்கு தலைவரின் உரை உற்சாகத்தைக் கூட்ட வைக்கம் பயணத்தை உறுதி செய்தோம். ஒன்றியத் தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவனும், மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள்தாசும் எங்களோடு பயணமானார்கள்.
வைக்கம்
மார்ச் 31 ஆம் நாள் மயிலாடுதுறையிலிருந்து தொடர் வண்டியில் புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைந்தோம். வைக்கம் விழாவில் ‘வைக்கம் போராட்டம்‘ புத்தகம் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுவதையொட்டி அந்நூலின் ஆசிரியர் பழ.அதியமானும் டாக்டர் சங்கர சரவணனும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தார்கள் . காலை 8 மணியளவில் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட தோழர் அதியமான் 10 மணிக்கு வைக்கம் வந்துவிடுங்கள் அங்கு சந்திப்போம் என்றார். எர்ணாகுளம் ரயில்வே சந்திப்பு அருகிலேயே அறை எடுத்து தங்கியிருந்த நாங்கள் சிற்றுண்டி முடித்து பேருந்தில் வைக்கம் புறப்பட்டோம்.
காந்தி அருங்காட்சியகம்
வைக்கம் சத்தியாகிரக காந்தி அருங்காட்சியகத்தில் தோழர்களைச் சந்தித்தோம். அரங்கின் நுழைவாயிலில் 1924 மார்ச் 30ஆம் தேதி வைக்கம் சத்தியாகிரக போராட்ட முதல்நாள், போராட்டத்தில் கலந்து கொண்டு புலையர் சமூகத்தைச் சார்ந்த குஞ்சப்பா, ஈழவச் சமூகத்தைச் சார்ந்த பாகூலயன், நாயர் சமூகத்தைச் சார்ந்த கோவிந்த பணிக்கர் ஆகிய மூவரும் தடைப் பலகையை தாண்டிய காட்சி சிலை வடிவில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு எங்களை வரவேற்றது. வைக்கம் போராட்டத்தை விளக்கும் வரலாற்றின் ஒலி-ஒளி காட்சி ஒரு பக்கம் தனி அறையில் ஓடிக்கொண்டிருந்தது.
அங்கு வைக்கப்பட்டிருந்த படங்களையும், வரலாற்றுச் செய்திகளையும் தோழர் பழ.அதியமான் ஒவ்வொன்றாக விளக்க அதை ஒளிப்பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டோம். போராட்டத்தில் பெரியார் பங்கு பெற்ற சில படங்கள் ஓவியமாக தீட்டப்பட்டு செய்திக் குறிப்புடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அன்னை நாகம்மையார், கண்ணம்மாள் பற்றிய குறிப்புகளும், பெரியாருக்கு ஆறு மாத காலம் சிறைத் தண்டனை அளித்து மாவட்ட நீதிபதி அளித்த ஆணையையும் வைத்திருந்தார்கள். காந்தியாருக்காக ஏற்படுத்தப்பட்ட மியூசியம் என்பதாலோ என்னவோ வைக்கம் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்காமல், போராட்ட இறுதியில் மகாராணியோடு பேச்சு வார்த்தையில் மட்டும் கலந்து கொண்ட காந்தியாரின் படங்கள் நிறைந்திருந்த அந்த அரங்கில், போராட்டக் களத்திலும் சிறையிலுமாக 174 நாட்கள் பங்கெடுத்த பெரியார் பற்றிய குறிப்புகளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
வைக்கம் படகுத்துறை
மியூசியத்தைச் சுற்றி வந்த பின் வைக்கம் ஜெட்டி என்று சொல்லப்படுகிற படகுத் துறைக்கு நடந்து சென்றோம். படகுத்துறைக்கு அருகில் இருந்த பெரிய மைதானத்தில்தான் மாலை விழாவிற்கான மிகப் பிரம்மாண்டமான மேடையும் பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. 50,000 பேர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய வகையில் நிறுவப்பட்டிருந்தது அந்த விழா பந்தல். காந்தி மியூசியத்திலிருந்து மேடைக்குச் செல்லும் சாலைகளின் இருபுறமும் போராட்டத்தில் பங்குபெற்றவர்களின் படங்களை இடைவெளியின்றி வரிசையாக வைத்திருந்தார்கள். அவற்றைப் பார்த்து பிரமித்தபடியே படகுத் துறையில் நுழைந்தோம்.
வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்ள, ஈரோட்டிலிருந்து கேரளம் சென்ற பெரியார் ஆறுக்குட்டியிருந்து படகு மூலம் இந்தப் படகுத்துறையில் தான் வந்திறங்கினார். மகாராணியோடு பேச்சு வார்த்தை நடத்தச் சென்ற காந்தியும் இந்த வழியாகத்தான் சென்றார். காந்தியார் வருகையை நினைவு படுத்தும் வகையில் வைக்கம் ஜெட்டி நுழைவாயிலில் காந்தியார், ராஜாஜி, மகாதேவ தேசாய், ராமதாஸ் காந்தி ஆகிய தலைவர்கள் படகிலிருந்து இறங்கி நடந்து வருவது போல் தற்காலிக சிலைகள் விழா ஏற்பாட்டாளர்களால் அமைக்கப்பட்டிருந்தது. விழாவிற்கு வந்தவர்கள் அந்த சிலைகள் அருகே நின்று ஒளிப்படம் எடுத்துக் கொண்டார்கள்.நாங்களும் தான்.
இந்தன்துருத்தில் நம்பூதிரி இல்லம்
காந்தியார் வைக்கம் சென்ற போது, சத்தியாகிரகத்திற்கு எதிராக செயல்பட்ட இந்தன்துருத்தில் நம்பூதிரி இல்லத்திற்கு சென்றார். அங்கு காந்தியார் வீட்டிற்குள் அழைக்கப்படாமல் அவர் வீட்டுத் திண்ணையிலேயே அமர வைத்துப் பேசப்பட்டார். காந்தியார் உள்ளே அனுமதிக்கப்படாத அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தோம். வீட்டின் மய்யப்பகுதிக்குச் சென்று அங்கிருந்த தாழ்வாரத்தில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து படம் எடுத்துக் கொண்டோம். கால்மேல் கால்போட்டு அமர்ந்த அந்த வேளையில் எம் பெரியார் நெஞ்சில் சிம்மாசனமிட்டு குடிகொண்டார். நம்பூதிரியின் அந்த வீடு தற்போது கம்யூனிஸ்டு கட்சியால் விலைக்கு வாங்கப்பட்டு அவர்களின் அலுவலகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கிருந்த தோழர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் இதை ‘நகைமுரண்’ என வர்ணித்தார் தோழர் அதியமான்.
வைக்கம் காவல் நிலையம்
பெரியார் இரண்டாம் முறையாக கைது செய்யப்பட்டு ஆறுமாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு. வைக்கத்திலிருந்து திருவனந்தபுரம் மத்திய சிறைக்கு படகில் அழைத்துச்செல்ல முற்பட்டபோது கடுமையான மழையும் காற்றும் வீசியதால் ஒருவார காலம் வைக்கம் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார். அதையும் பார்த்துவிட வேண்டி நம்பூதிரி இல்லத்திலிருந்து வைக்கம் காவல் நிலையம்சென்றோம். அந்த இடம் தற்போது சிறையாக இல்லை. ஆனாலும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் அதைப் படம் பிடிக்க காவல் துறை அனுமதி பெற சிறிது நேரம் பிடித்தது. பின் அங்கிருந்தபடியே சத்தியாகிரக ஆசிரமம் செயல்பட்ட இடத்திற்கு சென்றோம். இது நாராயண குருவிற்கு சொந்தமான இடம். இப்போது பள்ளிக்கூடமாக விளங்குகிறது. இந்த ஆசிரமத்தில் தங்கிதான் சத்தியாகிரகிகள் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள். பெரியாரோடு வைக்கம் சென்ற மயிலாடுதுறை காங்கிரஸ் தலைவரும், பெரியாரின் நெருங்கிய நண்பருமான எஸ்.ராமநாதன் இந்த ஆசிரமத்தின் தலைவராக இருந்து செயல்பட்டபோது ஸ்தாபனம் பல வகைகளில் வளர்ச்சி அடைந்ததாக சுதேசமித்திரன் எழுதியது. பஞ்சாபிலிருந்து வந்த அகாலியர் (சீக்கியர் சங்கம்) இலவசமாக சத்யாகிரகிகளுக்கு உணவு அளித்ததை, “தினமும் இருநூறு முந்நூறு பேருக்கு தடபுடலான சமையல், காய்கறி, தேங்காய்,அரிசி,பருப்பு என மூட்டை மூட்டையாய் குவிந்து கிடந்த காட்சி திருமண வீடுபோல் காட்சி தந்தது” என பெரியார் வர்ணித்த இடமும் இதுதான். சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்காக பாரம்பரியமாக இப்படிப்பட்ட இலவச உணவுச் சாலைகளை அவர்கள் நடத்திக் கொண்டிருந்தனர். சீக்கியர்கள் உதவி செய்வதை அறிந்த காந்தியார், மாற்று மதத்தவர்களுக்கு அங்கு வேலை இல்லை எனச் சொல்லி அவர்களை வெளியேறச் சொன்னதும் அப்போது நினைவில் வந்தது. சத்தியாகிரக ஆசிரமத்தைச் சுற்றிப்பார்த்து முடித்தபோது மதியம் மணி இரண்டாகியிருந்தது.
வைக்கம் நூற்றாண்டு தொடக்க விழா
சிறப்பு அழைப்பாளர்கள் இரண்டு மணி நேரம் முன்னதாக மேடை முன்னால் வருகைதர வேண்டும் என பழ.அதியமான் மற்றும் டாக்டர் சங்கரசரவணன் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததால் குறுகிய நேரத்தில் உணவருந்தி விழா நிகழும் இடத்திற்குப் புறப்பட்டோம். வழியெங்கும் சாரை சாரையாய் மனிதத்தலைகள். கூட்டத்தில் ஊடுருவி நிகழ்விடத்திற்குச் செல்வதே பெரும்பாடாய் இருந்தது. அவர்கள் மேடை முன்பு ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்குச் செல்ல, உடன் வந்த கழகப் பொறுப்பாளர்களை பார்வையாளர்கள் பகுதியில் அமர்த்திவிட்டு பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் நுழைந்தேன்.
பெரும் வரவேற்பு இசையோடு பலத்த கரவொலியும் கலந்து வரவேற்க குறித்த நேரத்தில் கேரள முதலமைச்சரும், தமிழ்நாடு முதலமைச்சரும் பார்வையாளர்களைப் பார்த்து வணக்கம் செலுத்தியபடி அரங்கில் நுழைந்து மேடை ஏறினர். சிறப்புரையாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் பெயர் சொல்லி அழைக்கப்பட்டதும் மீண்டும் பலத்த கரவோசை விண்ணைப் பிளந்தது! வைக்கத்தில் சென்ற இடமெல்லாம் பெரியாரைத் தேடித்தேடிப் பார்த்து மகிழ்ந்த எங்களுக்கு முதலமைச்சரின் உரை முழுதும் அமுதகானமாய் ஒலித்தது. பெரியார் தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் அவர் உலகளாவிய கருத்துகளைத் தந்தவர். உலகத் தலைவர் என்று சொல்லி அவரது கொள்கைகளை எடுத்துரைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மிகச் சிறப்பான உரை. அதனைத் தொடர்ந்து கேரள முதலமைச்சர் உரையாற்றிய பின், ‘வைக்கம் போராட்டம்‘ நூலின் மலையாள மொழியாக்கம் வெளியிடப்பட்ட போது தோழர்கள் பழ.அதியமானும் டாக்டர் சங்கரசரவணனும் மேடைக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
பெரியார் நினைவிடம்
நிகழ்ச்சி நிறைவுற்றபோது இருள் கவ்வத் தொடங்கி விட்டது. அவசர அவசரமாக அங்கிருந்து பெரியார் நினைவிடத்திற்குப் புறப்பட்டோம். பெரியார் நினைவிடம் முழுவதும் வண்ண வண்ண மின்னொளியில் மின்னியது. பெரியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியார் படம் வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்குப் போகும் முன்னர் கேரள முதலமைச்சரும், தமிழ்நாடு முதலமைச்சரும் இங்கு வந்து மலர் தூவி மரியாதை செய்துவிட்டுச் சென்ற சுவடு தெரிந்தது. நினைவிடத்தின் முன்னால் சாலையின் எதிர்ப்புறம் பெரிய ரவுண்டானாவில் டி.கே.மாதவன் சிலை. மாதவன் சிலைக்கு இடது புறம் மன்னத்து பத்மநாபன் சிலை. இரண்டும் மிகப் பெரிய சிலைகள். பெரியார் நினைவிடத்திற்கும் மன்னத்து பத்மநாபன் சிலைக்கும் நடுவே உள்ள சாலையின் மய்யப்பகுதியில் காந்தியாரின் மார்பளவு தற்காலிக சிலை வைக்கப்பட்டிருந்தது. டி.கே.மாதவன் சிலையைப் பார்த்தபடி சத்தியாகிரகிகளின் தற்காலிக சிலைகளை வைத்திருந்தார்கள். பெரியார் சிலைக்கு முன்னால் நின்று படம் எடுத்துக்கொண்டு நினைவிடம் சென்று வருகைப் பதிவேட்டில் பதிவு செய்தோம். காலை 7 மணிக்கு தோழர் அதியமான் அவர்களுக்கு விமானப் பயணம் என்பதால் இரவு சிற்றுண்டி முடித்து அவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சேர்வதாகக் கூறி விடைபெற்றனர்.
இரவு விடுதிக்குச் சென்றதும் காலையிலிருந்து கண்ட காட்சிகளைப் பற்றியும், மறுநாள் பயணத்தை ஒழுங்கு படுத்தவும் வெகுநேரம் கலந்துரையாடினோம். பெரியார் நினைவிடம் சென்றபோது இரவாகிவிட்டதல்லவா? எனவே மீண்டும் பகலில் காண வேண்டும் என்ற ஆசை எல்லோரிடமும் இருந்தது. அதே போல் பெரியார் முதல்முறை சிறை வைக்கப்பட்ட ஆறுக்குட்டி சிறையைப் பார்த்துவிட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம்.
வைக்கம் சிவன் கோயில்
அடுத்த நாள் ஏப்ரல் 2 ஆம் தேதி காலை மீண்டும் பெரியார் நினைவிடம் சென்று ஆசை தீர கண்டு களித்தோம். பின் அங்கிருந்து வைக்கம் கோயிலுக்குச் சென்று அங்கு கோயிலைச் சுற்றிச் சுற்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடப்பதற்கே உரிமை மறுக்கப்பட்ட நான்கு வீதிகளையும் காலாறச் சுற்றிவந்தோம். மூன்று வீதிகள் தடை விலக்கப் பட்டும் கோயில் குளம் தீட்டுப் பட்டுவிடும் என்பதாகச் சொல்லி, தடை விலக்க மறுக்கப்பட்ட, அந்தக்குளம் இருந்த கிழக்கு வீதிக்குச் சென்று குளத்தில் இறங்கி கால் நனைத்தோம். குளத்து நீர் பட்டு மெய் சிலிர்த்தது.
ஆறுக்குட்டி (அருவிக்குத்தி) சிறைச்சாலை
அங்கிருந்து வைக்கம் படகுத் துறையை அடைந்த போது நண்பகல் 12 மணி. பெரியார் வைக்கத்தில் கைது செய்யப்பட்டு ஆறுக்குட்டி சிறைக்கு படகில் அழைத்துச் செல்லப்பட்டார் அல்லவா? அதே தடத்தில் படகில் நாங்களும் பயணமானோம். தற்போது படகுப் போக்குவரத்து ஆறுக்குட்டிக்கு இல்லை. வைக்கத்திலிருந்து சில மணித்துளிகள் படகில் பயணம் செய்து தவணக்கடவு படகுத்துறையையை அடைந்தோம். அங்கு நாங்கள் இறங்கிய இடத்தில் வைக்கம் விழாவை ஒட்டி பெரியார் படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து பேருந்தில் ஆறுக்குட்டிக்கு ஒரு மணி நேர பயணம். ஆறுக்குட்டியில் இறங்கி சிறை பற்றி விசாரிக்க மொழி சற்று தடையாக இருந்தது. மெல்ல விசாரித்து சிறை இருந்த பகுதி நோக்கி நடை போட்டோம். பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஆறுக்குட்டி படகுத்துறை கரையிலேயே இருந்தது அந்த இடம். பாழடைந்த காவலர் குடியிருப்புகளும் அதனை ஒட்டி செடிகொடிகள் மண்டிய புதர்களுமாய் காட்சியளிக்க அந்தப் புதர்களுக்கு இடையில் சிதிலமடைந்து பாழடைந்த நிலையில் இன்றோ நாளைக்கோ என சரிய நேரம் பார்த்துக் கொண்டிருந்த அந்த குட்டிச் சுவரைக் காட்டி, “இது தான் ஆறுக்குட்டி சிறைச்சாலை. பெரிதாக இருந்த இந்த கட்டடம் காலப்போக்கில் சேதமடைந்து தற்போது மிஞ்சியுள்ளது இதுதான்!” என தன் தந்தையார் சொன்னதை நினைவுகூர்ந்தார் ஓர் இஸ்லாமிய இளைஞர் . பெரியார் இதை காவல் நிலையம் என்று சொல்கிறார். முதல்முறை கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்பட்டபோது வெளியிலிருந்து உணவு வரவழைக்கப்பட்டதாகச் சொல்கிறார். திருவிதாங்கூர் அரசாங்கம் பெரியாரை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்தாலே போதும் என்று அப்போது நினைத்திருக்கக் கூடும்.
ஆறுக்குட்டி கோயில்
அங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் மஹாராஜாவிற்கு சொந்தமான மாளிகை ஒன்றும் அதை ஒட்டி அவர் வழிபட ஒரு கோயிலும் இருந்ததாகச் சொல்லி ஒரு பெரியவர் எங்களை அழைத்துச்சென்றார். அதுவும் அந்த ஆற்றுக்கரை தான். கோயில் மட்டும் இருந்தது. கோயிலின் பின்புறம் ஆற்றை ஒட்டி ஒரு சிறிய குளம் வெட்டப்பட்டிருந்தது. மஹாராஜாவின் மாளிகை இல்லை. குளத்தில் இறங்கிய அந்தப் பெரியவர் “ஆற்று நீர் உப்பு நீர் என்ற போதிலும் இந்தக் குளத்து நீரில் சிறிதளவும் உப்பு இருக்காது. இது ராஜா குளிப்பதற்காக வெட்டப்பட்ட குளம்!” என்று சொல்லிகொண்டே ஒரு கையில் குளத்து நீரை அள்ளிப் பருகி பெருமிதத்தோடு எங்களைப் பார்த்தார். ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் அந்தப் பரிசோதனையில் நாங்கள் இறங்கவில்லை. பெரியார் இந்தக் குளத்தில்தான் குளித்தார் என்று ஒரு வேளை அந்தப் பெரியவர் சொல்லியிருந்தால் நாங்களும் இறங்கிப் பார்த்திருப்போம்.
ஆறுக்குட்டியிலிருந்து எர்ணாகுளம் சென்ற போது மீண்டும் இருட்டத் தொடங்கியிருந்தது. மாலை 6 மணி. விடுதிக்குச் சென்று ஒரு மணி நேரம் நல்ல தூக்கம். இரவு தொடர்வண்டியில் மயிலாடுதுறை திரும்பினோம். வைக்கத்திலிருந்து விடை பெற்றுவிட்டோம். வைக்கம் போராட்ட நினைவுகள் விடை கொடுக்க மறுக்கிறது.