திருக்குறள் பேரவைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சென்னை, மார்ச் 29 அறிவுச் சுதந்திரத்தைத் தாராளமாகக் கொடுக்கிற ஒரே நூல் திருக்குறள்தான். ‘‘இதை நம்பவேண்டும்; நம்பவில்லை என்றால், நரகத்திற்குப் போவீர்கள். நம்பவில்லை என்றால், உங்களுக்கு அடுத்த பிறவியில் வாழ்க்கை இருக்காது. நம்பித்தான் ஆக வேண்டும்’’ என்றெல்லாம் அச்சுறுத்தலோ அல்லது வேறு வகையான ஆசை காட்டலோ எதுவும் இல்லாத அளவிற்கு அறிவுக்கு முதன்மை கொடுத்த நூல் திருக்குறள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘திருக்குறள் பேரவை’’
22.3.2026 அன்று மாலை சென்னை குரோம் பேட்டையில், திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற மார்ச் மாதக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு ரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
நீதி நூல்கள், மத நூல்கள்
சொல்வது என்ன?
‘‘கேள்வி கேட்காதே, ஏன் என்று கேட்காதே, இது எப்படி நடந்தது என்றெல்லாம்கேட்காதே! நம்பு, சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.’’ இதுதான் மற்ற பெரிய நூல்கள், நீதி நூல்கள், மத நூல்கள் இவையெல்லாம் சொல்லும்.
ஆனால், திருக்குறளினுடைய தனிச் சிறப்பே என்ன வென்றால்,
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள் 423)
எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்ட வாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள் 355)
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமயங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.
அறிவுச் சுதந்திரத்தைத் தாராளமாகக் கொடுக்கிற ஒரே நூல் திருக்குறள்தான்!
எனவே, அறிவுச் சுதந்திரத்தைத் தாராளமாகக் கொடுக்கிற ஒரே நூல் திருக்குறள்தான். ‘‘இதை நம்பவேண்டும்; நம்பவில்லை என்றால், நரகத்திற்குப் போவீர்கள். நம்பவில்லை என்றால், உங்களுக்கு அடுத்த பிறவியில் வாழ்க்கை இருக்காது. நம்பித்தான் ஆக வேண்டும்’’ என்றெல்லாம் அச்சுறுத்தலோ அல்லது வேறு வகையான ஆசை காட்டலோ எதுவும் இல்லாத அளவிற்கு அறிவுக்கு முதன்மை கொடுத்த நூல் திருக்குறள்.
மனிதனுடைய வளர்ச்சி என்பது
அறிவியலை பொறுத்ததுதான்!
அறிவை முன்னிலைப்படுத்தி, அறிவுக்குச் சுதந்திரத்தைக் கொடுத்துச் சிந்தியுங்கள் என்று திருவள்ளுவர் சொல்வார். அப்படிப்பட்ட ஒரு நூலான திருக்குறள் தான் நம்முடைய நாட்டிலே நீண்ட காலமாக, இவ்வளவு பெரிய உலகத்துக்கே அறிவு வழங்கக்கூடியது. திருக்குறளில் எல்லா வகையான வாழ்வியலும் உள்ளது. அதில் அமைந்திருக்கக்கூடிய இந்தக் கருத்தில் முதலில், மனிதனுடைய வளர்ச்சி என்பது அறிவியலை பொறுத்தது என்பது தான். அந்த அறிவு அற்றங்காக்கும் கருவி. மூட நம்பிக்கைகளை எதிர்த்து நாம் நின்று, இன்றைக்கு வந்திருக்கிறோம். எண்ணிப் பாருங்களேன். இன்றைக்கு எவ்வளவு பெரிய அளவுக்கு வந்திருக்கின்றோம். இயற்கை அறிவைத் தாண்டி, இப்பொழுது நாம் எந்தக் காலகட்டத்தில் இருக்கிறோம் என்றால், செயற்கை அறிவுக்கு வந்தி ருக்கின்றோம். அதனால் ஒரு பக்கம் ஏற்படுகிற மிகப்பெரிய நன்மைகள் எவ்வளவு இருக்கிறதோ, அந்த அளவிற்குத் தீமையும் இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஒரு புதிய கண்டுபிடிப்புகள் வரும்போது, அத னால் எவ்வளவு நன்மைகள் வருகிறதோ, அதைப் பயன்படுத்துகிறவர்களைப் பொறுத்துத்தான் தீமை வருகிறது என்று சொல்வதும் இருக்கிறது. அது பயனைப் பொறுத்தது.
அறிவியல்வாதிகள்
என்ன செய்தார்கள்?
இண்டாவது உலகப் போர் நீடித்துக் கொண்டே இருந்தபோது, அப்போது அணுகுண்டைத் தயார் செய்தார்கள். அந்தக் காலத்தில் அது தேவைப்பட்ட ஒன்றாக இருந்திருக்கலாம், அவர்களுடைய கணக்கில். அப்பொழுது அணுகுண்டு போட்டதால், உலகத்தில் உள்ள மக்களுக்குப் மிகப்பெரிய கேடு ஏற்பட்டது. ஜப்பானில் நாகசாகி போன்ற நகரங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவிற்குப் பாதிக்கப்பட்டன. அது மிகப்பெரிய ஆபத்தாக போய்விட்டது என்பது ஒரு பக்கத்தில். ஆனால், அன்றைக்கு அது தேவைப்பட்டு இருக்கலாம். ஆனால், அதையே அறிவியல்வாதிகள் என்ன செய்தார்கள்? Atoms for Peace என்று சொன்னார்கள். ஆக்கப்பூர்வமாக Atomic Energy என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அதை மின்சாரத்திற்காகப் பயன்படுத்தினார்கள்.
எதை, எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் அறிவு. அறிவை ஆக்கத்துக்கும் பயன்படுத்தலாம்; அழிவுக்கும் பயன்படுத்தலாம்.
எனவே, ஆக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டிய அறிவு வளம் அழிவுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னால், அந்த அழிவு என்பதைப்பற்றிச் சொல்லும் போது நண்பர்களே, கட்டடத்தை மட்டும் நினைக்காதீர்கள்.
அறிவினால் தான் பயன் உண்டாகும்!
இப்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் மேற்கத்திய பகுதி நாடுகளில் ஏவுகணைகள், குண்டுகள்– அதற்கும் மதம்தான் அடிப்படையாக இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் மறைந்திருக்கக்கூடிய மதச் சண்டைகள் இருக்கின்றன. ஆதிக்கச் சண்டைகள் இருக்கின்றன. இவை அத்தனையும் ஒரு கொடுமைகளாக நடந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில், அறிவினால் தான் பயன் உண்டாகும்.
மனிதனுடைய ஆற்றல், ஆளுமை
எதற்குப் பயன்பட வேண்டும்?
ஆனால், அந்த அறிவுபற்றிக்கூட வள்ளுவர் சொன்ன அளவிற்கு இருக்கக்கூடிய அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாம் சில கருத்துக்களை உங்கள் முன்னால் எடுத்து வைத்திருக்கிறோம். அறிவைப்பற்றிச் சொல்லும்போது, வள்ளுவருடைய குறள், உங்க ளுக்குத் தெரியாதது அல்ல. இது அறிவார்ந்த அவை. எனவே, புதிதாக யாருக்கும் திருக்குறளை நாம் அறி முகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தந்தை பெரியாருடைய தொண்டன், பகுத்தறிவு வாதி என்ற முறையில் திருக்குறளை அணுகுகிற நேரத்தில், தொண்டு செய்வதற்கு இருக்கக்கூடிய வாய்ப்பு என்ன? மனிதனுடைய அறிவு எதற்குப் பயன்பட வேண்டும்? மனிதனுடைய ஆற்றல், ஆளுமை எதற்குப் பயன்பட வேண்டும்? தன் பெண்டு, தன்பிள்ளை, தன்வீடு என்ற சுயநலத்திற்கு மட்டுமே அதைப் பயன்படுத்தக்கூடாது.
சமுதாயத்தில் வாழக்கூடிய மக்களுக்கு நம்முடைய கடமை என்ன? இதைத்தான் எண்ணிப் பார்க்கும்போது, மிக முக்கியமான ஒரு கருத்து. பல திருக்குறள்களை நீங்கள் அறிவீர்கள். பெரிய அளவிற்கு விளக்கம் சொல்ல வேண்டியதில்லை. அறிவு இருக்கு; ஆனால், அந்த அறிவுக்கு என்ன வேலை? பெரிய அறிவாளி நான், அப்படிச் சொல்லிவிட்டு, ஆனால், சமுதாயத்துக்கு நான் பயன்பட மாட்டேன் என்று சொன்னால், அந்த அறிவினால், மனிதகுலத்திற்கு எந்த விதமான லாபமும் கிடையாது, வளர்ச்சியும் கிடையாது, முன்னேற்றமும் கிடையாது.
அதை திருக்குறளில் மிக அழகாகக் காணலாம்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை (குறள் 315)
(தொடரும்)
