ராணிகஞ்ச், மார்ச் 29- மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று மாநில முதலமைச்சர் மம்தா திட்டவட்டமாகத் தெரி வித்துள்ளார்.
ராணிகஞ்சில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யின் தலைவரும், மாநில முதலமைச் சருமான மம்தா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“மேற்கு வங்கத்தை பா.ஜ.க. ஒருபோதும் கைப்பற்ற முடியாது. ஒருவேளை அவர்கள் இங்கு ஆட்சிக்கு வந்தால், புல்டோசர்களைப் பயன்படுத்தி மக்களை வெளியேற்றும் அடாவடி செயல்களில் ஈடுபடுவார்கள். மேற்கு வங்கத்தை அழிக்க நினைப்பதன் மூலம், நாடு முழுவதும் பா.ஜ.க. தனது அதிகாரத்தை இழக்க நேரிடும்,” என்று எச்சரித்தார்.
பா.ஜ.க. வரம்புகளை மீறி செயல்படுகிறது
வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணியின்போது, பா.ஜ.க.வின் தூண்டுதலுக்கு இணங்கி தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும், அதன் மூலம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில், “அரசியல் செயல்பாட்டில் எல்லைக்கோடு இருக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க. அனைத்து வரம்புகளையும் மீறிச் செயல்படுகிறது. இந்த சிறப்புத் திருத்தப் பணி அவர்களுக்கு மரண மணியாக அமையும்,” என்று காட்டமாகத் தெரிவித்தார். தன்னுடைய அதிகாரங்கள் பறிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட மம்தா, “நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். ஆனால், அவர்கள் எனது அனைத்து அதிகாரங்களையும் பறித்துவிட்டனர்.
திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு, டில்லியில் ஆட்சியைப் பிடிக்க மற்ற அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பேன். மேலும், மாநிலத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் எவராக இருந்தாலும், அவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவேன்,” என்று உறுதியளித்தார்.
