புதிய பிரதமர் பதவியேற்ற நிலையில்… நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது!

2 Min Read

காத்மாண்டு, மார்ச் 29- நேபாளத்தில் இளைய தலைமுறையினருக்கு ‘டிக்-டாக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் அந்த நாட்டில் அரசியல் தலைவர்கள் கடுமையான ஊழலில் ஈடுபட்டு சொத்து குவித்ததாகக் கூறி ‘ஜென்-சி’ என்னும் இளைய தலைமுறையினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இந்த போராட்டத்தில் அந்த நாட்டின் பிரதமர் அலுவலகம், நாடாளுமன்ற கட்டடம் உள்ளிட்டவற்றுக்கு தீ வைக்கப்பட்டது.

நாட்டின் அப்போதைய பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டன. பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

அந்த நாட்டின் இடைக்காலப் பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றார். மேலும் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் தான் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதாக தலைநகர் காத்மாண்டுவின் முன்னாள் மேயரான பலேந்திரஷா அறிவித்தார். காத்மாண்டுவின் முதல் சுயேச்சை மேயரான இவர் முன்னாள் பாடகராவர்.

சமூக நீதி, ஏழ்மை, சமூக கருத்துகள் உள்ளிட்டவை குறித்து அவர் சிறுவயது முதல் பாடல்கள் பாடி வருகிறார். ரசிகர்களால் ‘பலேன்’ ஷா என அழைக்கப்படும் 35 வயதான இவர் ஜென்-சி போராட்டத்தின்போது ஆதரவாக செயல்பட்டார்.

அதன்படி மார்ச் 5ஆம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் ராஷ்ட்ரீய சுவந்த்ரா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து போட்டியிட்டார். முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை எதிர்த்து ஜாபா-5 தொகுதியில் போட்டியிட்டு 49 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப் பெற்றார். 275 இடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் பலேந்திரஷாவின் கட்சி 182 இடங்களை பெற்று வரலாற்று சாதனை படைத்தது. நேபாளி காங்கிரஸ் கட்சி 38 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 25 இடங்களும், கம்யூனிஸ்டு கட்சி 17 இடங்களும் மட்டுமே பெற்றன. இதனை தொடர்ந்து அந்த நாட்டின் 47ஆவது பிரதமராக பலேந்திரஷா நேற்று  முன்தினம் (27.3.2026) பதவியேற்றார்.

இந்நிலையில் புதிய பிரதமர் பதவியேற்ற நிலையில்.. நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த உயிரிழப்புகளை ஏற்படுத்திய ‘ஜென்-சி’ தலைமுறை போராட்டங்களில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவருடன் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக்கும் கைது செய்யப்பட்டார்.

இந்த சூழலில் புதிதாக நியமிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் சுதன் குருங் தனது எக்ஸ்வலைதளத்தில், “கொடுத்த வாக்கு, கொடுத்த வாக்குதான்.. சட்டத்திற்கு யாரும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி – பதவி விலகும் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் ஆகியோரை நாங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். இது யாருக்கும் எதிரான பழிவாங்கல் அல்ல. இது நீதியின் தொடக்கம் மட்டுமே. இனி நாடு ஒரு புதிய திசையை நோக்கிச் செல்லும் என்று நான் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *