வாசிங்டன், மார்ச் 28- இதுவரை அமெரிக்க நிதித்துறை அமைச்சரும் அமெரிக்கப் பொருளாளரும் மட்டுமே நோட்டுகளில் கையெழுத்திடும் அதிகாரம் பெற்றிருந்தனர்.
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, அந்நாட்டின் டாலர் கரன்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெறவுள்ளதாக அமெரிக்க நிதித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு பதவியில் இருக்கும் அதிபரின் கையெழுத்து கரன்சி நோட்டுகளில் இடம்பெறும் முதல் நிகழ்வாகும்.
இதுவரை அமெரிக்க நிதித்துறை அமைச்சரும் அமெரிக்கப் பொருளாளரும் மட்டுமே நோட்டுகளில் கையெழுத்திடும் அதிகாரம் பெற்றிருந்தனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாற்றத்தின்படி, 1861-ஆம் ஆண்டு முதல் சுமார் 165 ஆண்டுகளாகத் தொடர்ந்து பின்பற்றி வந்த ‘பொருளாளரின் கையெழுத்து’ இடம்பெறும் முறை முடிவுக்கு வருகிறது.
புதிதாக வடிவமைக்கப் பட்டுள்ள 100 டாலர் நோட்டுகளில் அதிபர் டிரம்ப் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் ஆகியோரின் கையெழுத்துகள் இடம் பெறும்.
இந்த புதிய நோட்டு களின் அச்சுப்பணி வரும் ஜூன் மாதம் தொடங் கும் என்றும், அதன் பிறகு படிப்படியாக மற்ற மதிப்பிலான நோட்டு களிலும் இந்த மாற்றம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள முன்னாள் அதிபர் ஜோ பைடன் காலத்து நிதித்துறை அமைச்சர் ஜேனட் யெல்லன் மற்றும் பொருளாளர் லின் மலெர்பா ஆகியோரின் கையெழுத்து கொண்ட நோட்டுகளுக்குப் பதிலாக இவை மாற்றப்படும்.
லின் மலெர்பா தான் அமெரிக்க டாலரில் கையெழுத்திட்ட கடைசிப் பொருளாளர் என்ற அடையாளத்தைப் பெறுகிறார். அமெரிக்கச் சட்டப்படி, உயிருடன் இருக்கும் நபர்களின் உருவப்படங்களை நாணயங்களிலோ அல்லது நோட்டுகளிலோ அச்சிடத் தடை உள்ளது.
ஆனால், கரன்சி நோட்டுகளின் வடி வமைப்பை மாற்றுவதற்கும், கள்ள நோட்டுகளைத் தடுப் பதற்கும் நிதித் துறைக்கு விரிவான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, நோட்டின் ஒட்டுமொத்த வடி வமைப்பை மாற்றாமல், பொருளாளரின் கையெழுத்துக்குப் பதிலாக அதிபரின் கையெழுத்து சேர்க்கப்படுகிறது.
டிரம்ப்பின் இரண்டா வது பதவிக்காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளா தார வளர்ச்சி மற்றும் நாட்டின் வரலாற்றுச் சாத னைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பெசென்ட் தெரிவித்து உள்ளார்.
