சென்னை, மார்ச் 28- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ. குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்.
சுவீதா (Suvidha) செயலி
பொதுக்கூட்டங்கள், பேரணிகள், தெருமுனைக் கூட்டங்கள், வாகனப் பிரசாரம், ஒலிப்பெருக்கி பயன்பாடு மற்றும் தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் போன்ற அனைத்து அனுமதிகளையும் ‘சுவீதா’ செயலி வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
காலக்கெடு
பிரச்சாரம் அல்லது நிகழ்வு தொடங்குவதற்கு குறைந்தது 48 மணிநேரத்திற்கு முன்பாக விண்ணப் பங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். சென்னை மாநகரக் காவல் ஆணையரால் பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கூட்டங்களை நடத்த அனுமதி உண்டு.
பொதுக்கூட்டங்கள்: 112 இடங்கள். தெருமுனைக் கூட்டங்கள்: 179 இடங்கள். மொத்த இடங்கள்: 291 இடங்கள். விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன், அவை காவல்துறை, போக்குவரத்து, பொதுப்பணித்துறை, மின்சார வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை ஆகிய துறைகளின் ஆய்வுக்கு அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து ‘தடையின்மைச் சான்று’ (NOC) மற்றும் கருத்துகள் பெறப்பட்ட பின்னரே, தேர்தல் நடத்தும் அலுவலர் இறுதி அனுமதியை வழங்குவார்.
விதிகளைப் பூர்த்தி செய்யாத அல்லது துறைகளிடம் இருந்து அனுமதி கிடைக்காத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் (அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்படும்) சென்னையிலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகளுக்காக இதுவரை 816 விண்ணப்பங்கள் சுவீதா செயலி மூலம் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
