புதுடில்லி, மார்ச் 27 இந்தியா வில் நடைபெறவுள்ள 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் குறித்து, இந்தியப் பதிவாளர் ஜெனரல் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கணக்கெடுப்புப் பணி யில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தண்டனை விவரம்
மக்கள்தொகைக் கணக் கெடுப்பின் போது, பொது மக்கள் சங்கடப்படும் வகை யிலோ அல்லது சட்டத் திற்குப் புறம்பாகவோ ஆட்சே பனைக்குரிய மற்றும் முறையற்ற கேள்விகளை வேண்டுமென்றே கேட்கும் அதிகாரிகளுக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும், பின்வரும் செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளும் அதே அளவிலான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்:
தங்கள் கடமையைச் செய்வதில் முறையான கவனத்தைச் செலுத்தத் தவறுதல்.அரசின் உத்தரவுகளை மீறிச் செயல்படுதல்.மற்றொரு அதிகாரி தனது கடமையைச் செய்வதைத் தடுத்தல் அல்லது இடையூறு விளைவித்தல்.
மக்கள்தொகைக் கணக்கெடுப் பின் போது கேட்கப்பட வேண்டிய கேள்விகள் மற்றும் அதிகாரிகளுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து இந்தச் சுற்றறிக்கை விரிவாகப் பேசினாலும், மிக முக்கியமான ஒரு விசயத்தில் மவுனம் காக்கிறது. ஜாதி மற்றும் மதம் தொடர்பான கேள்விகள் கணக்கெடுப்பில் இடம்பெறுமா அல்லது அது குறித்த நடைமுறைகள் என்ன என்பது பற்றி இந்தச் சுற்றறிக்கையில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. கணக்கெடுப்புப் பணிகள் நெருங்கி வரும் வேளையில், ஜாதி வாரியான கணக்கெடுப்பு குறித்த கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இது குறித்த தெளிவற்ற சூழல் நீடிக்கிறது.
