கேரளத் தேர்தல் ஆணையம் தங்கள் அலுவலகத்தில் பா.ஜ.க. முத்திரை கடிதத்தைப் பயன்படுத்தி கட்சிகளுக்கு ஆலோசனை மற்றும் விதிமுறைகள் குறித்த தகவல் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான 23.3.2026 அன்று தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முத்திரை இடம் பெற்றிருந்தது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆண்டு கடிதம் ஒன்று சமீபத்தில் விநியோகிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில் பா.ஜ.க. கேரள மாநில பிரிவு லெட்டர் ஹெட்டில் பயன்படுத்தும் பாஜக முத்திரை இடம் பெற்றிருந்தது.
இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ‘எக்ஸ்’ (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் அந்தக் கடிதத்தைப் பகிர்ந்துள்ளது. “அரசு அலுவலகங்களில் முத்திரைகள் சாதாரணமாக மாற்றிக் கொள்ளப்படுகின்றனவா? அல்லது தேர்தல் ஆணையம் தனது நடுநிலையை முழுவதுமாக கைவிட்டுவிட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கேரளத் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் ஏதோ மழுப்பலான விளக்கம் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் கேரளத் தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான இடதுசாரிகளுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதலை உருவாக்கியுள்ளது.
எதுவாயினும், ‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்’ என்ற ஒரு பழமொழி வழக்கில் உண்டே. இது தேர்தல் ஆணையத்திற்கும் கட்டாயம் பொருந்தும்; பொருந்த வேண்டும்.
ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையமே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இல்லையே! தேர்தல் ஆணையத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய மூவர் குழு தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2023இல் ஒரு தீர்ப்பை வழங்கியது.
ஒன்றிய பிஜேபி அரசு என்ன செய்தது? 2023 டிசம்பரில் ‘தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம் – சேவை – நிபந்தனைகள்) சட்டம் 2023 என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. இது 2024 ஜனவரி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
இதன்படி தேடல் குழு (Search Committee) அடங்கிய குழு 5 தகுதியானவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கும்.
இந்தத் தேடல் குழுவில் யார் யார் அங்கம் வகிப்பார்கள் என்பதுதான் முக்கியமாகும்.
(1) பிரதமர்
(2) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
(3) பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஓர் ஒன்றிய அமைச்சர் (உறுப்பினர்).
உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறிய தலைமை நீதிபதி இக்குழுவிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஓர் ஒன்றிய அமைச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன் விளைவு என்ன? ஒன்றிய அரசுக்கு 2:1 என்ற பெரும்பான்மை கிடைக்க வழி செய்யப்பட்டு விட்டது.
இந்த மாற்றத்தை மோடி தலைமையிலான ஒன்றிய பிஜேபி அரசு ஏன் செய்ய வேண்டும் என்பதற்கு ஆராய்ச்சித் தேவைப்படாது. பிரதமர் மோடியின் ஆட்சி, கட்சியின் நடவடிக்கைகளை அறிந்தவர்களுக்கு எளிதாகவே புரியக் கூடியதுதான்.
இவற்றை எல்லாம் பார்க்கும்போது தேர்தல் நடைபெறவிருக்கும் கேரள மாநிலத்தின் தேர்தல் ஆணையத்தில் நடந்த விடயம் பெரிதாக ஆச்சரியப்பட வேண்டியதல்ல!
ஒன்றிய ஆட்சி மாற்றப்படும் வரை இது போன்ற ஒருசார்புத் தன்மை நடைபெறத்தான் செய்யும் – அத்தகைய சமூகத்திற்குக் கேடான ஆட்சியை அகற்ற தேவை மக்களிடம் விழிப்பும் – எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாடான ஒற்றுமையும்தான்!
