மதுரை, மார்ச் 25- திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார். ஏற்கெனவே பல தோல்விகளைச் சந்தித்துள்ள எடப்பாடி பழனிசாமியை, வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பெரும் வெற்றி பெறுவதன் மூலம் “படுதோல்வி பழனிசாமி” யாக மாற்ற வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தமிழ் நாட்டிற்கு அடிக்கடி வந்தாலும் நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. தமிழ் நாட்டில் டில்லி அரசி யல் ஒருபோதும் எடு படாது என்றும், இது டில்லி அணிக்கும் தமிழ்நாட்டிற்குமான போட்டி என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சீசன் நேரத்தில் போலி நிறுவனங்கள் பொருட்களை அசெம்பிள் செய்து ஏமாற்றுவது போல, அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை ‘மேட் இன் டில்லி’ என்ற பெயரில் பா.ஜ.க. அசெம்பிள் செய்துள்ளது. தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க.வின் பியூஸை பா.ஜ.க. பிடுங்கிவிடும். பீகாரில் 10 முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமாரையே பா.ஜ.க. ஓரம் கட்டி விட்டது. அப்படி இருக்கையில் பழனிசாமி எம்மாத்திரம்? என கேள்வி எழுப்பினார்.
மதுரையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அங்கு பேசிய உதயநிதி ஸ்டாலின் பின்வரும் இலக்குகளை நிர்ணயித்தார்.
இந்தத் தேர்தல் தமக்கும் ஒரு பொதுத்தேர்வு போன் றது என்றும், இதில் ‘ஜஸ்ட் பாஸ்’ செய்யாமல் சாதனை வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார். இளைஞரணி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று கடந்த அய்ந்தாண்டுகளில் தி.மு.க. அரசு செய்த சாதனைகளை விளக்க வேண்டும். பழனிசாமி அ.தி.மு.க.வை டில்லியில் அடகு வைத்துவிட்டாலும், அங்குள்ள தொண்டர் களையும் சேர்த்துப் பாதுகாக்கும் ஒரே தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் “பருப்பு வேகாது” என்றும், எத்தனை ‘பி’ மற்றும் ‘சி’ டீம்களைக் கொண்டு வந்தாலும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தான் மீண்டும் சாம்பியனாக உருவெடுக்கும் என்றும் துணை முதலமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
