வதோதரா, மார்ச் 25 பழங்குடியின மக்களை ‘வனவாசி’ என அழைப்பது குறித்து ஆர்எஸ்எஸ், பாஜவை ராகுல் காந்தி கடுமையாக சாடினார்
வனவாசிகள்
குஜராத்தின் வதோதராவில் நடந்த பழங்குடியினர் உரிமை மற்றும் அரசியலமைப்பு மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது: ‘ஆதிவாசி’ என்பது இந்தியாவின் பூர்வீக உரிமையாளர்களைக் குறிக்கும் சொல். நீங்கள் 1,000, 2,000 அல்லது 5,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணிற்கு வந்திருந்தால், இந்த நிலத்தின் ஒவ்வொரு அங்குலமும் ஆதிவாசிகளின் கைகளிலேயே இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்போது, 21ஆம் நூற்றாண்டில், ஒரு புதிய சொல் உருவாகியுள்ளது. அது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.வால் உருவாக்கப்பட்ட ‘வனவாசி’ (காட்டில் வசிப்பவர்) என்ற சொல்.
‘வனவாசி’ என்ற சொல், நீங்கள் இந்த நிலத்தின் பூர்வீக உரிமையாளர்கள் அல்ல என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது. பழங்குடியினர் காடுகளுக்குள் தற்செயலாக குடியேறி வசிப்பவர்கள் மட்டுமே என்பதை சித்தரிப்பதாக இருக்கிறது. ‘ஆதிவாசி’களை ‘வனவாசி’கள் என்று அழைப்பது, அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், பழங்குடியினரால் பெரிதும் போற்றப்படும் தலைவரான பிர்சா முண்டா மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்.
இந்திய வரலாற்றில் எந்தவொரு பிரதமரும் இதற்கு முன் விவசாயத் துறையை வெளிநாட்டு வர்த்தகத்திற்காகத் திறந்துவிட்டதில்லை. ஆனால், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகளின் நலன்களை பிரதமர் மோடி சமரசம் செய்துள்ளார். அமெரிக்காவின் விளைபொருட்கள் நமது சந்தைகளில் வெள்ளமெனப் புகுந்தால், அது நமது விவசாயிகளை முழுமையாக அழித்துவிடும்.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பேசும்போதெல்லாம் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் என்னை கடுமையாக விமர்சிக்கின்றன. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது துல்லியமாக எதைக் குறிக்கிறது? நாட்டின் ஒட்டுமொத்த செல்வமும் உங்களிடமிருந்து திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு வருகிறது என்பதையே அது உணர்த்துகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஆதிவாசிகளின் உண்மையான மக்கள் தொகையை உறுதி செய்வதும், அரசு நிர்வாகம் மற்றும் பெருநிறுவனத் துறை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நிறுவனங்களில் அவர்களுக்குரிய விகிதாச்சாரப் பங்கைத் தீர்மானிப்பதும் ஆகும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
