அகமதாபாத், மார்ச் 25 குஜராத் அரசுசாரா அமைப்பின் சார்பில் ‘யோகா ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட சாமியார் பிரதீப் ஜோதங்கியா, சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் யோகாப் பயிற்சி அளிக்க ஒப்பந்தம் பெற்றிருந்த இவர், அதிகார முறைகேடு செய்து இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அரசு உயர்மட்ட அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகக் காட்டிக்கொண்ட பிரதீப் ஜோதங்கியா, தனது வாகனத்தில் அரசு முத்திரையைப் பதித்து வலம் வந்துள்ளார். இதனால், அவர் மீது யாருக்கும் சந்தேகம் எழவில்லை. இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு, வங்கிகளில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்று, அவற்றில் அசல் நோட்டுகளையும், கள்ள நோட்டுகளையும் கலந்து புழக்கத்தில் விட்டுள்ளார்.
மிகத் தத்ரூபமாகச் செய்யப்பட்ட இந்த மோசடியை, ஒரு சாதாரண நபர் வங்கியில் டெபாசிட் செய்யச் சென்ற போதுதான் வங்கி ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
பாதி அசல், பாதி போலி
ஒரு ரூபாய் நோட்டின் முன்பாதியை ஒரிஜினலாகவும், மீதிப் பாதியை கள்ள நோட்டாகவும் ஒட்டி மிகத் திறமையாக இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் படம்
ஒரு கட்டத்தில் கள்ள நோட்டுகளில் காந்தியாருக்குப் பதிலாக, ஹிந்தி நடிகர் அனுபம் கெர் ஒளிப்படம் அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது. அண்மையில் அகமதாபாத்தில் 1.6 கோடி ரூபாய் மதிப்பிலான இத்தகைய கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தந்திரமான மோசடியால், சாதாரண மக்கள் மட்டுமின்றி பெரும் தொழிலதிபர்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு அங்கீகாரம் பெற்ற நபர் என்பதால், மக்கள் இவரை முழுமையாக நம்பியதே இந்த மோசடி இவ்வளவு பெரிய அளவில் வளரக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது, இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட சாமியாரின் நடவடிக்கைகள் மற்றும் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரணை வளையம் விரிவடைந்துள்ளது.
