கிறித்தவ மதத்திற்கு மாறுவோரை பட்டியலினத்தவராக ஏற்க முடியாது!-உச்சநீதிமன்றம் மறுப்பு

2 Min Read

புதுடில்லி, மார்ச் 25 இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மட்டுமே பட்டி யல் சமூகத்தினரான இருக்க முடியும் என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்ற அமர்வு உறுதி செய்துள்ளது.

ஜாதி  ரீதியாக பாகுபாடு காட்டிய, துன்புறுத்திய நபர்கள் மீது எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பாதிரியார் ஒருவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஷ்ரா, நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (24.3.2026) தனது தீர்ப்பை அளித்தது.

அந்த தீர்ப்பில், ‘‘இந்த வழக்கில் மனுதாரர் கிறிஸ்தவத்தில் இருந்து தனது உண்மையான மதத்துக்கு மீண்டும் மதம் மாறியதாகவோ அல்லது மடிகா சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவோ வாதிடவில்லை. மேல்முறையீட்டாளர் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தில் உள்ள வீடுகளில் ஞாயிறுதோறும் பிரார்த்தனைகளை நடத்தி ஒரு போதகராகச் செயல்பட்டு வருகிறார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட சம்பவம் நடந்த நேரத்தில் அவர் அந்த வீட்டில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உண்மைகள், சம்பவம் நடந்த தேதியில் அவர் ஒரு கிறிஸ்தவராகவே இருந்தார் என்பதில் எந்த சந்தேகத்துக்கும் இட மளிக்கவில்லை.

இந்து, சீக்கிய, பவுத்த மதங்களைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் எந்த ஒரு நபரும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவராகக் கருதப்பட மாட்டார். வேறு ஏதேனும் ஒரு மதத்துக்கு மாறுவது பட்டியல் சமூக அடையாளத்தை இழக்க வழிவகுக்கும். வேறு மதத்துக்கு மாறிய ஒரு நபர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர தகுதி யற்றவர்’’ என உத்தரவிட்டனர்.

வழக்கின் பின்னணி

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிந்தடா ஆனந்த் என்ற பாதிரியார், தனது கிராமத்தில் ஞாயிறுதோறும் பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி வந்துள்ளார். அக்கலா ராமி ரெட்டி உள்ளிட்ட சில நபர்கள் தன்னை தாக்கியதாகவும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிந்தடா ஆனந்த்தின் மனுவை விசா ரித்த ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஹரிநாத், ‘‘புகார்தாரர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் மூலம் அவர் தனது பட்டியல் சமூக அடையாளத்தை இழந்துவிட்டார். எனவே, எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பைக் கோர அவருக்கு உரிமை இல்லை’’ என உத்தரவிட்டிருந்தார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது

இந்த உத்தரவை எதிர்த்து சிந்தடா ஆனந்த், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *