சென்னை, மார்ச் 24– தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுடன் இணைத்தே உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஜனவரியுடன் முடிவடைந்தது. இந்தச் சூழலில், திருவள்ளூரைச் சேர்ந்த வழக்குரைஞர் சிவகுமரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “சட்டமன்றத் தேர்தலுடன் உள்ளாட்சித் தேர்தலையும் சேர்த்து நடத்தினால் அரசுக்கான செலவு குறையும், பொதுமக்களின் நேரமும் மிச்சமாகும். எனவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கனவே சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டினர்.
இதற்கு மனுதாரர் தரப்பில், எதிர்காலத்திலாவது இத்திட்டத்தை அமல்படுத்தலாம் எனத் தெரிவிக்கப் பட்டது. ஆனால், “அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. இது தொடர்பாக மனுதாரர் தேர்தல் ஆணையத்தையே அணுகலாம்” என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தலை அடுத்து, மனுதாரர் தனது வழக்கை திரும்பப் பெற்றார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சட்டமன்றத் தேர்தலுடன் உள்ளாட்சித் தேர்தலா? சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!
Leave a Comment
