சென்னை, மார்ச் 24- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மேற்காசியப் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கப் பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்கேள்வியின் விவரம் வருமாறு:
“எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?”
மேற்காசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் ஒன்றிய அரசை நோக்கிக் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
யார் தயாராக இருக்க வேண்டும்?
“மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன், அவர்களைக் காக்க நீங்கள் (ஒன்றிய அரசு) தயாராக இருக்கிறீர்களா?” என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
மேற்காசியப் போரினால் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதாரச் சரிவில் இருந்து இந்தியப் பொதுமக்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள உருப்படியான நடவடிக்கைகள் என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசின் முன்மாதிரி செயல்பாடுகள்: ஒன்றிய அரசின் பதிலுக்காகக் காத்திராமல், தமிழ்நாடு அரசு ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்:
உணவு உற்பத்தித் தொழிற்கூடங் களுக்கு மின்சார மானியம் (யூனிட்டுக்கு ரூ. 2). சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) மின் சாதனங்கள் வாங்க மானியத்துடன் கூடிய கடன். உழவர் சந்தைகளில் விவசாயிகள் தடையின்றிப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி என தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
ஒன்றிய அரசின் மவுனம்: சிலிண்டர் விநியோகம், வளைகுடா வாழ் தமிழர்களை மீட்பது மற்றும் எரிவாயு விநியோகக் கட்டுப்பாடு குறித்து ஏற்கெனவே கடிதம் எழுதியும், ஒன்றிய அரசிடமிருந்து முறையான பதில் இல்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். “இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்; ‘எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?'” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.
