கைப்பேசியால் பள்ளி மாணவர்களின் கவனம் சிதறுகிறது உலகில் 58 சதவீத நாடுகளில் பள்ளிகளில் கைப்பேசி பயன்படுத்தத் தடை! யுனெஸ்கோ தகவல்

உலகில் 58 சதவீதம் நாடுகளில் உள்ள பள்ளிகளில் கைப்பேசிகளை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக யுனெஸ்கோவின் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

யுனெஸ்கோவின் கல்விக்குழு

கைப்பேசி அருகில் இருந்தாலே பள்ளி மாணவர்களின் கவனம் சிதறுகிறது. ஒரு முறை அவர்களின் கவனம் சிதறினால் மீண்டும் பாடத்தில் முழுமையாக ஈடுபாட்டை கொண்டுவர 20 நிமிடங்கள் வரை ஆகிறது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுதவிர கைப்பேசி, தொலைக்காட்சிகளில் அதிக நேரத்தை செலவிடும் மாணவர்களின் உணர்ச்சி நிலைத்தன்மையை அது குறைப்பதாகவும், சமூக வலைதளங்களின் தாக்கம் சிறுமிகளின் உடல்நலம் மற்றும் மனநலத்தை பாதிப்பதாகவும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இப்படியாக கைப்பேசி பயன்பாடு பள்ளி மாணவ-மாணவிகளின் உடல்நலம், கல்வி நலன் உள்ளிட்ட அனைத்து விதங்களிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை யாரும் மறுக்க முடியாத நிலை உரு வாகி விட்டது. வகுப்பறைகளில் குறைந்து வரும் கவனிப்புத்திறன் மற்றும் இணையவழி துன்புறுத்தல் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் பாதிக்கும் மேற் பட்ட நாடுகள் பள்ளிகளில் கைப்பேசியை பயன்படுத்த தடை விதித்திருப்பதாக யுனெஸ்கோவின் உலகளாவிய கல்வி கண்காணிப்புக்குழு (ஜெம்) தெரிவித்துள்ளது.

சமூக ஊடக பயன்பாட்டால் ஏற் படும் உணவு உண்ணும் பிரச்சினைகளால் சிறுவர்களைவிட சிறுமிகள் 2 மடங்கு பாதிக்கப்படுவதாகவும் அந்த குழு கண்டறிந்துள்ளது.

58 சதவீத நாடுகள்

மேலும் யுனெஸ்கோவின் உலகளாவிய கல்வி கண்காணிப்புக்குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில், சமீபத்திய உலகளாவிய கண்காணிப்பின்படி, 114 கல்வி அமைப்புகள் தற்போது பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டுக்கு தேசிய அளவில் தடை விதித்திருக்கின்றன. இது உலக நாடுகளின் எண்ணிக்கையில் 58 சதவீதம் ஆகும். இந்த வளர்ச்சி மிக வேகமானது. 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முதல்முறை கண்காணிக்கப்பட்டபோது, 24 சதவீத நாடுகள் மட்டுமே கைப்பேசிகளுக்கு பள்ளிகளில் தடை விதித்திருந்தன. இது 2025 தொடக்கத்தில் 40 சதவீதமாக உயர்ந்து, தற்போது (மார்ச் 2026-ல்) மேலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது’ என்றார்.

இந்த தடைகள் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. அதாவது பள்ளி நேரத்திலோ அல்லது வகுப்பறையிலோ கைப்பேசிகளை முழுமையாக பயன்படுத்த தடை, கல்வித் தேவைகளுக்காக அல்லது உடல்நலக்குறைபாடு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் அனுமதித்தல், கொலம்பியா, எஸ்டோனியா, லிதுவேனியா, செர்பியா போன்ற நாடுகள் தேசிய அளவில் கடுமையான தடையை விதிக்காமல், பள்ளிகளே தகுந்த கட்டுப்பாடுகளை வகுத்துக்கொள்ள அனுமதித்தல், அமெரிக்கா போன்ற நாடுகளில் தேசியத்தடை இல்லை என்றாலும், 39 மாநிலங்கள் பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்களை கொண்டு வருதல் என தடை இருக்கின்றன என்பது குறித்தும் யுனெஸ்கோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் நிலை என்ன?

கல்வி வெற்றிக்கு மனநலம் மிக முக்கியமானது என்றும் யுனெஸ்கோவின் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. குறிப்பாக 10 வயதில் சமூக ஊடகங் களுடன் அதிக தொடர்பு கொண்ட சிறுமிகளுக்கு, வளர வளர சமூக-உணர்ச்சிரீதியான சிக்கல்கள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக ஆஸ்திரேலியா, பிரான்சு, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் குழந்தைகளுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து சட்டங்களை இயற்றியும் அல்லது அதுதொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் இந்தியாவை பொறுத்தவரையில்,தேசிய அளவில் பள்ளிகளில் கைப்பேசி பயன்படுத்த ஒட்டுமொத்த தடை விதிக்கவில்லை. இருப்பினும், மாநில அளவிலும், நீதிமன்றங்கள் மூலமாகவும் இதற்கான கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இமாசலப்பிரதேசத்தில் பள்ளிகளில் கைப்பேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.கருநாடக மாநிலத்தில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கைப்பேசி மற்றும் சமூக ஊடக பயன்பாட்டை தடை செய்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மொத்தத்தில் இந்தியாவில் பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டுக்கு முழுவதுமாக தடை என்ற நிலையை எடுக்காமல், கட்டுப்பாடுடன் கூடிய பயன்பாடு என்ற பாதையில் செல்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *