‘‘சிந்தனைக்கனி திரு.ஆலடி அருணா ஒரு முழுமையடையாத பயணம்’’ நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

15 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஹிந்தி எதிர்ப்பு பற்றி எழுதும் போதெல்லாம் நம்முடைய பெரியார் நூலக ஆய்வு மய்யத்திற்கு வருகை தந்து குறிப்புகள் எடுப்பார்!
ஆலடி அருணா எழுதிய பல புத்தகங்கள் இன்றும்
மாநில சுயாட்சி குறித்த செய்திகளுக்கு மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகின்றன

சென்னை, மார்ச் 23 ஆலடி அருணா அவர்கள் எழுதிய பல புத்தகங்கள் இன்றும் மாநில சுயாட்சி குறித்த செய்திகளுக்கு மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகின்றன. குறிப்பாக, ஹிந்தி எதிர்ப்பு பற்றி எழுதும் போதெல்லாம் நம்முடைய பெரியார் நூலக ஆய்வு மய்யத்திற்கு வருவார். அங்கு அமர்ந்து குறிப்புகள் எடுப்பார். ‘விடுதலை’ இதழ் மற்றும் பிற செய்திகளில் ஏதேனும் சந்தேகங்கள் வரும்போது, என்னிடத்தில் இயல்பாக வந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டுத்தான் வீட்டுக்குப் போவார். என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘சிந்தனைக்கனி திரு.ஆலடி அருணா

ஒரு முழுமையடையாத பயணம்’’

கடந்த 7.3.2026 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், ‘‘சிந்தனைக் கனி திரு.ஆலடி அருணா ஒரு முழுமையடையாத பயணம்’’  நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது சிறப்புரை வருமாறு:

அவரும் கல்லூரிக்கு வந்த உடனே, அவருடைய கொள்கையாளர்கள் யார் யார் என்று பார்த்தார்.  வரிசையாக இருக்கின்ற அறைகள் எல்லாம் மிகச் சிறியதாக இருந்தன. சில அறைகளைப் பார்த்தவுடன் அவர் ஆச்சரியப்பட்டுப் பேசினார். அதுமட்டுமல்ல, அவர் மாணவப் பருவத்திலேயே தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர். நாங்கள் தந்தை பெரியாரை அழைத்தபோது, அதற்கெல்லாம் அவர் துணையாக இருந்தார். அதிலிருந்தே எங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது.

‘அண்ணாச்சி’ என்று எங்களிடம் மிகவும் அன்பாகப் பேசுவார். அவர் அரசியலில் சில மாற்றுக் கருத்துகளை எடுத்த நேரத்தில்கூட, எங்கள் நட்பு குறைந்ததே கிடை யாது. அவர் அடிக்கடி இங்கே பெரியார் திடலுக்கு வருவார். அவர் திமுகவில் இருந்தபோதும் சரி, அதிமுகவில் எம்பியாக (MP) இருந்த நேரத்திலும் சரி, அந்தப் பழைய கல்லூரி காலப் பழக்கத்தையே கடைப்பிடித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டுப் பழகும் பண்பு கொண்டவர் அவர். இங்கே அய்யா அவர்கள் அந்த ஹிந்தித் திணிப்புப் புத்தகத்தைப்பற்றி  மிகச் சிறப்பாகச் சொன்னார்கள்.

நல்ல ஆழமாக எழுதுபவர் அவர். பொதுவாக நல்ல பேச்சாளராக இருப்பவர், சிறந்த எழுத்தாளராக இருக்க முடியாது; அல்லது பேச்சாளர், எழுத்தாளர் என இரண்டுமாகவும் இருந்துவிட்டு நல்ல கருத்தாளராக இருக்க முடியாது. நல்ல கருத்தாளராகவும், எழுத்தாள ராகவும் இருப்பவர், நல்ல மனிதராக இருக்க முடியாது என்று சொல்வார்கள். சில நேரங்களில் சில பல குறைபாடுகள் இருக்கலாம்.

தந்தை பெரியார் அவர்கள் மீது
மிகுந்த பற்று கொண்டவர்

ஆனால், அவரைப் பொறுத்தவரை எல்லா வகையிலும் தலைசிறந்த ஒரு மாமனிதராகத் திகழ்கிறார். அதுவே மிக முக்கியம். ஆரம்பத்திலிருந்தே தந்தை பெரியார் அவர்கள் மீது மிகுந்த பற்று கொண்டவர். சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு கண்ட இயக்கமாகும். இதில் அய்யா விஸ்வநாதன் அவர்கள் உள்ளிட்ட பல ஆளுமைகளைக் காண்கிறோம்.

சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் என்ன செய்தது என்று கேட்டால், ஒரு காலத்தில் எட்ட முடியாத நிலையில் இருந்தவர்களையெல்லாம் இன்று இணையற்ற வழக்குரைஞர்களாகவும், மருத்து வர்களாகவும் மாற்றிக் காட்டியதுதான் அதன் சாதனை. ஒரு காலத்தில் நமக்கு வழக்குரைஞர்களே கிடையாது.

நீங்கள் நீதிமன்றத்தில்
எதிர்த்து வாதாட மாட்டேன் என்கிறீர்கள்?

பெரியார் அவர்களிடம் ஒருமுறை கேட்டார்கள்: ‘அய்யா, ஏன் நீங்கள் நீதிமன்றத்தில் எதிர்த்து வாதாட மாட்டேன் என்கிறீர்கள்? எல்லா வழக்கிலும் உங்களைத் தண்டிக்கும்போது ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்?’ என்று. அதற்கு அய்யா இரண்டு காரணங்களைத் தெளிவாகச் சொன்னார். ‘ஒன்று, நீதிபதிகள் ஏற்கெ னவே ஒரு முடிவோடுதான் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது நான் ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? நான் சொல்வதை எழுதித் தருகிறேன், நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்’ என்று சொன்னார். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் அவர் இதையேதான் செய்தார்.

நம் மக்கள் எல்லாத் துறைகளிலும் தலைசிறந்து விளங்குகிறார்கள்

‘‘இன்னொரு காரணம் சொல்லட்டுமா?’’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார். அது என்னவென்றால், ‘நம்ம ஆட்களில் வக்கீலே கிடையாது, எந்த வக்கீலிடம் போவது?’ என்று கேட்டார். இப்படி ஒரு நிலை அன்று இருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல; நம் மக்கள் எல்லாத் துறைகளிலும் தலைசிறந்து விளங்குகிறார்கள்.

அவர் யார்? அவருடைய தந்தை யார்?

அவர் சொல்லும்போது, ‘‘நம்முடைய ஓர் எளிய கிராமத்தில் பிறந்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவர். ‘தகுதி, திறமை’ என்று நம்மவர்களைப் பார்ப்பனர்கள் தடுத்தது எவ்வளவு பெரிய மோசடி என்பதற்கு ஆலடியார் அவர்களே ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. அவர் யார்? அவருடைய தந்தை யார்? என்பதை இந்தப் புத்தகத்தில் மறைக்காமல் சொல்லியிருக்கிறார்கள்.

பொதுவாகச் சில பேர் பெரிய நிலைக்கு வந்தவுடன், தங்கள் பிறப்பையோ அல்லது பழைய வாழ்க்கையையோ மறைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், அதைச் சொல்வதில்தான் பெருமை இருக்கிறது; அதுதான் உண்மையான பெருமை. தங்களுடைய மோசமான நிலையிலிருந்து வந்தவர் அவர். ஒரு பூசாரியின் மகன்; அவருடைய தாத்தாவும் ஒரு பூசாரி. அங்கிருந்து சுயமரியாதை உணர்வு கிளம்புகிறது. முக்கியமாக, அவர் ஊரில் பேசியதற்குப் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

நம் ஆட்கள் மணி அடித்தால் ‘பூசாரி’– அவர்கள் மணி அடித்தால் ‘அர்ச்சகர்’!

அதில் கூட ஒரு நுணுக்கத்தைப் பார்க்கலாம்; நம் ஆட்கள் மணி அடித்தால் ‘பூசாரி’ என்பார்கள், அவர்கள் மணி அடித்தால் ‘அர்ச்சகர்’ என்பார்கள்.

நாங்கள் ‘மிசா’ சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த போது, அங்கிருந்த மருத்துவமனையில் எம்.ஆர். இராதா அவர்களும் இருந்தார். அவருக்குச் சிறையில் மருத்துவமனைப் பணி (Hospital Duty) ஒதுக்கப்பட்டி ருந்தது. வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணமாக அவருக்கு அதிக வேலை கொடுக்கப்படவில்லை. அவர் அங்கே அமர்ந்து சீட்டு (Prescription) எழுதிக் கொடுக்கும் பணியைச் செய்து வந்தார்.

மருத்துவமனையில் அவருக்குப் பெரிய வேலை ஏதுமில்லை என்பதால், மருத்துவர் அருகிலேயே அமர்ந்திருப்பார். அப்போது செய்யாறைச் சேர்ந்த ஓர் அய்யர், அய்.பி.சி 420 (IPC 420) மோசடி வழக்கில் கைதாகி அங்கே வந்தார். மருந்துகளைப் பெறுவதற்காகக் கைதிகள் வரிசையில் நின்றபோது, எம்.ஆர். இராதா அவர்கள் வேண்டுமென்றே – ‘நம் ஆட்கள் மட்டும்தான் குற்றவாளிகளாக வருகிறார்கள் என்பதில்லை, அவர்க ளும் (உயர்ஜாதி மக்கள்) வருகிறார்கள்’ என்பதைக் காட்டுவதற்காக – வேடிக்கையாகப் பேசினார்.

அவர் வேறொன்றும் செய்யமாட்டார்; நன்றாகச் சத்தம் போட்டுப் பேசுவார். கடைசியில் அமர்ந்திருக்கும் அவருடைய குரல் அனைவருக்கும் கேட்கும்.  ‘அய்யர்சாமி இங்க வாங்க… இங்க வாங்க…’ என்று. ‘‘இங்கேயும் ஓர் அய்யர்சாமி இருக்கிறாரா?’’ ‘‘ஆமாம், அவர் ஒன்றும் பெரிய குற்றம் செய்துவிடவில்லை. ஒரு அய்ந்நூறு, ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் வரை சாப்பிட்டிருப்பார் (பயன்படுத்தியிருப்பார்), அவ்வளவு தான்; அதற்காகத்தான் அவர் வந்திருக்கிறார்’’ என்பார்.

ஒரு காலத்தில் நம்மையெல்லாம் ‘குற்றப் பரம்பரை’ என்று சொன்னார்கள்; கையெழுத்து கூடப் போட முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால், இன்று அந்தப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் இவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள்.

தன்னுடைய உழைப்பாலும், சிந்தனையாலும் உயர்ந்து, சட்ட அமைச்சரானார்!

அவருடைய தந்தை பூசாரியாக இருந்தபோதிலும், தன் மகனும் அதே வேலைக்கு வரக்கூடாது, நன்றாகப் படிக்க வேண்டும் என்று கருதினார். அப்போதே அவருக்குக் கல்வியின் அவசியத்தைக் கற்றுக் கொடுத்தார். அதன் விளைவாக, மிக வேகமாக முன்னேறிய ஆலடி அருணா அவர்கள், தன்னுடைய உழைப்பாலும், சிந்தனையாலும் உயர்ந்து, சட்ட அமைச்சராகும் அளவிற்கு வளர்ந்தார். சட்டத்தைப் பற்றி நுணுக்கமாக எழுதக்கூடியவராகவும், நாடாளுமன்றத்தில் – குறிப்பாக மாநிலங்களவையில் – முத்திரை பதிக்கக்கூடிய அளவிற்கும் பல வாய்ப்புகளைப் பெற்றுச் சிறப்பாகச் செயல்பட்டார்.

மிகப்பெரிய அளவில் இது பெருமை அளிக்கிறது. இதில் பல செய்திகள் உள்ளன. எல்லாவற்றையும் விட, அவர் நேர்மை குறையாதவர் என்பதை இதில் குறிப்பிட்டிருக்கிறார். ‘பொது வாழ்க்கை என்றால் நேர்மை குறையாமல் இருப்பதே பொது வாழ்க்கை’ என்பதற்கு இணங்க அவர் வாழ்ந்திருக்கிறார். கட்சியிலிருந்து, தேர்தலுக்காகப் பணம் பெற்று வேலை செய்திருக்கிறார். அது குறித்துக் கலைஞர் எழுதியிருக்கிறார். அந்தத் தகவல் இதில் நிறைய உண்டு; நேரம் இன்மையால் அனைத்தையும் சொல்ல இயலவில்லை, புத்தகத்தை வாங்கிப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

தேர்தல் முடிந்தவுடன், பைசா கணக்கு மாறாமல் மிச்சப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துக் கணக்குக் காட்டியிருக்கிறார். பொதுவாகத் தேர்தலில் நிற்பவர்க ளுக்குத் தெரியும், அது ஒரு ‘ஒன்வே டிராபிக்’ (ஒருவழிப் பாதை) போன்றது; இருவழிப் பாதை கிடையாது. முக்கியமாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வார்களே தவிர, கணக்குச் சொல்லித் திருப்பிக் கொடுத்த அனுபவம் பலருக்கு இருக்காது. ஆனால், அவர்கள் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். எங்களைப் போன்றவர்கள் ஓட்டு கேட்கவேண்டிய அவசியம் இல்லாததால், இதை பகிரங்கமாகப் பேசுகிறோம். அவர்கள் இன்னும் ஓட்டு கேட்க வேண்டிய நிலையில் இருப்பதால், சில செய்திகளை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலும், அவர் மிக உயர்ந்த நாணயத்தோடு இருந்திருக்கிறார் என்பதைப் பல கோணங்களில் ஆசிரியர் எழுதி யிருக்கிறார்.

அவரிடம் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. அவர் எல்லாத் தலைவர்களுடனும் பழகிய விதம் மற்றும் குடும்பத்தில் அவர் எப்படி இருந்தார் என்பது பற்றிய செய்திகள் அதில் அடங்கியுள்ளன. ஒரு மகன் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதையும், பெற்றோர் மீதான நன்றியுணர்வையும் அவர் செயல்கள் காட்டுகின்றன.

பழைய காலத்தில் நம் வீட்டுப் பெரிய பாட்டிகள் முழுமையாக ரவிக்கை அணியும் பழக்கம் இல்லாத வர்களாக இருந்தனர்; அவர்களின் நகை அணியும் முறைகளும் வித்தியாசமாக இருந்தன. இது சாதார ணமான ஒரு பழக்கம் அல்ல, வருணாசிரம தர்மத்தின் அடிப்படையில் திணிக்கப்பட்ட ஒன்று என்பதைத் தந்தை பெரியார் சுட்டிக்காட்டுவார்.

தான் அமரும் அதே நாடாளுமன்ற இருக்கையில்
தன் தாயாரை அமர வைத்து அழகு பார்த்தார்!

இத்தகைய பின்னணியில் வளர்ந்த அவர், நாடாளு மன்ற உறுப்பினரான பிறகு தன் தாயாரை விமானத்தில் அழைத்துச் சென்றார். அதைவிடச் சிறப்பான ஒரு நிகழ்வு என்னவென்றால், நாடாளுமன்றம் இயங்காத காலகட்டத்தில், அனுமதி பெற்று, தான் அமரும் அதே நாடாளுமன்ற இருக்கையில் தன் தாயாரை அமர வைத்து அழகு பார்த்ததோடு, அதை ஓர் ஒளிப்படமாகவும் எடுத்து மகிழ்ந்துள்ளார்.

என்ன ஒரு உணர்வு பாருங்கள்! இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, பெண்கள் ரவிக்கை (Blouse) அணிந்தால் கூட அது வைதிகத்திற்கு விரோதம், சம்பிரதாயத்திற்கு விரோதம், சடங்குக்கு விரோதம் – நாங்கள் பழைமையைத்தான் கடைப்பிடிப்போம் என்று சொன்ன ஒரு சமுதாயம் இன்று எப்படி வளர்ந்திருக்கிறது பாருங்கள்!

‘இதோ பாருங்கள், நான் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறேன்’ என்று அவர் சொல்வது மட்டுமல்லாமல், இதற்குக் காரணம் பெரியார், அண்ணா, கலைஞர், திராவிட இயக்கம் மற்றும் சுயமரியாதை இயக்கம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஹிந்தி எதிர்ப்பு பற்றி எழுதும் போதெல்லாம் நம்முடைய பெரியார் நூலக ஆய்வு மய்யத்திற்கு வருவார்

அவர் எழுதிய பல புத்தகங்கள் இன்றும் மாநில சுயாட்சி குறித்த செய்திகளுக்கு மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகின்றன. குறிப்பாக, ஹிந்தி எதிர்ப்பு பற்றி எழுதும் போதெல்லாம் நம்முடைய பெரியார் நூலக ஆய்வு மய்யத்திற்கு வருவார். அங்கு அமர்ந்து குறிப்புகள் எடுப்பார். ‘விடுதலை’ இதழ் மற்றும் பிற செய்திகளில் ஏதேனும் சந்தேகங்கள் வரும்போது, என்னிடத்தில் இயல்பாக வந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டுத்தான் வீட்டுக்குப் போவார்.

நூலாசிரியர் எழில்வாணன்

அவர் தன் சந்தேகங்களைக் குறித்து வைத்துக்கொண்டு, ‘இந்த ஆண்டில் இது என்ன சொல்லு கிறது?’, ‘இதை எப்படிப் புரிந்துகொள்வது?’ என்று ஒவ்வொன்றைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொள்வார். நல்லூர் என்ற தன் ஊருக்கு அய்யாவை (பெரியாரை) அழைத்துச் சென்று வரவேற்பு அளித்து, அந்தப் பஞ்சாயத்திலேயே மிகப்பெரிய வாய்ப்புகளை உரு வாக்கி, இந்த இயக்கம் எப்படிப்பட்டது என்பதை நிலை நாட்டியதை எழில்வாணன் அவர்கள் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

இதில் இன்னொரு பெரிய சங்கடத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அது இங்கே அமர்ந்திருக்கும் எங்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. என்னவென்றால், ஒரு கல்லூரியை அவர்தான் நிர்மாணிக்கிறார்; அய்ன்ஸ்டீன் பொறி யியல் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்தப் பகுதியில் உள்ள பிள்ளைகளை யெல்லாம் பொறியாளர்களாக்கி, அவர்கள் இன்று வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள்.

நாங்களும் அதேபோல் பாதிக்கப்பட்டவர்கள் தான்!

அரசியல் காற்று மாறியபோதெல்லாம் அவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள், எவ்வளவு மன உளைச்ச லுக்கு ஆளானார்கள் என்பதை அவர் எழுதியிருக்கிறார். அதை எழுத்து மூலமாகப் படிக்கும்போது உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அதற்குச் சாட்சி யாக நாங்கள் இருவரும் இங்கே இருக்கிறோம்; நாங்களும் அதேபோல் பாதிக்கப்பட்டவர்கள் தான்.

மிக முக்கியமாக, அவர் பாதிக்கப்பட்டபோது மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கினார்; அதுவே ஒரு பெரிய மாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. அதேபோல், எங்களுடைய கல்லூரியும் இன்று பல்க லைக்கழகம் வரை வளர்ந்திருக்கிறது. சிக்கல்கள் வந்தபோதெல்லாம் அதற்குத் துணையாக நின்றது நீதிமன்றமும், சட்ட உதவிகளுமே ஆகும்.

பொது வாழ்க்கையில் இருக்கும்போது இதுதான் சிக்கல். நாம் ஒரு சரியான கொள்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம். அவ்வாறு தேர்ந்தெடுத்து இது போன்ற நிறுவனங்களை உருவாக்கும்போது, கொள்கை ரீதியாக நம்மை எதிர்கொள்ள முடியாதவர்கள் இத்தகைய தடைகளை உருவாக்குகிறார்கள்.

படமாக மட்டுமல்ல, பலருக்கும்
ஒரு பாடமாகவும் திகழ்கிறார்!

அவர்களுடைய பணிகள் என்னவோ அதைச் சரி யாகச் செய்து, அதில் கை வைத்தால் (தலையிட்டால்) உடனே சரணாகதி அடைந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி நின்று வென்று காட்டியவர்கள் தான் இங்கே இருக்கக்கூடியவர்கள். ஆலடி அருணா அவர்கள் வெறும் படமாக மட்டுமல்ல, பலருக்கும் ஒரு பாட மாகவும் திகழ்கிறார் என்பதுதான் மிக முக்கியம். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான நூலை எழில்வாணன் எழுதியிருக்கிறார்.

கடைசியாக ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். மற்றவர்கள் தகவல்களைத் திரட்டி எழுதுவது போல் அல்லாமல், எழில்வாணன் எழுதியிருக்கும் விதம் மிக முக்கியமானது. தோழர்களே, இது ஒரு சங்கடமான விஷயம். அவருடைய மரணம், அவருடைய முடிவு என்பது அநீதியானது; நியாயப்படுத்த முடியாதது. ‘இயற்கையினுடைய கோணல் புத்தி’ என்று பெரியார் ஒரு வார்த்தையைச் சொல்வார், அதுபோல ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்துவிட்டது. அவர் இன்னும் வாழ்ந்திருக்க வேண்டியவர். அதனால்தான் இந்த நூலுக்குத் தலைப்புக் கொடுக்கும்போது, ‘தோழர் ஆலடி அருணா அவர்களுடைய வாழ்க்கைப்பயணம் ஒரு முழுமையடையாத பயணம்’ என்று குறிப்பிடுகிறார்.

வாழ்க்கை என்பது வெறும் பயணம் மட்டுமல்ல, அது லட்சியம் நிறைந்த ஒரு தொடர் பயணம்.  சிறு பிள்ளையாக இருந்தபோது தந்தையின் கைப்பிடித்து வளர்ந்து, பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்தல்களில் நின்றபோதெல்லாம் அவருக்குத் துணை யாகப் பணியாற்றிய ஓர் இளைஞன், இன்று தன் எழுத்தாற்றலாலும், சிந்தனைத் திறத்தாலும் அந்த நினைவுகளைப் பதிவு செய்கிறார்.

ஆயிரம் முறை
பாராட்டத் தோன்றுகிறது!

தன்னுடைய சொந்தத் தந்தைக்கு ஏற்பட்ட அந்த மிகக்கொடூரமான முடிவைப் பற்றி எழுதும்போது, அந்த இளைஞர் எவ்வளவு மன வலியோடு எழுதியிருப்பார் என்பதை எண்ணிப் பார்க்கையில், அவரை ஆயிரம் முறை பாராட்டத் தோன்றுகிறது. யார் வேண்டுமானாலும் ஒரு வரலாற்றுச் சுருக்கத்தை எழுதிவிட முடியும். ஆனால், அதை இரத்தமும் சதையுமாக, தந்தைக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்த ஒரு பிள்ளை  எழுதும்போது அதன் கனமே தனி.

அந்தச் செய்தியைக் கேட்டுத் தாய் உள்ளே கதறு கிறாள். அந்த இக்கட்டான நேரத்தில் இவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆத்திரத்திலும், வேதனையிலும் எட்டி உதைத்ததில் கால் முறிந்து போகிறது. தந்தை உயிரற்ற உடலாக வரும்போது கூட, முறிந்த காலில் கட்டுப்போட்டுக் கொண்டு அவரால் எட்டிச் சென்று, இறுதிச் சடங்குகளைச் செய்ய முடிய வில்லையே என்று வாசிக்கும்போது என் மனம் மிகுந்த வேதனை அடைகிறது.

நானே அந்த அளவுக்குச் சங்கடப்பட்டேன். அந்த இடம் ரொம்ப உருக்கமாகவும், துன்பமாகவும், துயரமாகவும் இருந்தது. எனக்கு இன்னொரு வகையில் ஒரு பெரிய அதிர்ச்சி என்னவென்றால், அவருடைய தந்தையார் இறந்த அந்தச் செய்தி வந்த நேரம்தான். அதற்குச் சரியாக ஒரு வாரத்திற்கு முன்னால், ஒரு ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறேன்; ரஷ்ய கலாச்சார மண்டபத்தில் தோழர் கே.ஏ.மதியழகன் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று சொல்லி, அதில் நீதியரசர் கோகுலகிருஷ்ணன், நீதியரசர் மோகன், நான் மற்றும் மற்ற நண்பர்கள் கலந்துகொண்டோம்.

ஆலடி அருணா அவர்களும் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். நாங்கள், மற்றவர்கள் வருவதற்கு முன்பே விரைவாகச் சென்றுவிட்டோம். நீதியரசர்கள் வருவதற்கு முன்னரே அந்த அரங்கத்தில் போய் அமர்ந்திருந்தோம். மற்றவர்கள் வருவதற்குச் சற்றுத் தாமதமானது. நாங்கள் இருவரும்தான் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். மற்ற தலைவர்கள் வந்துகொண்டிருந்தனர். நிகழ்ச்சியில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன், அவர் அருகில் அமர்ந்திருக்கிறார். அப்போது எனக்கு ஒரு சீட்டு வந்தது; அதில் ‘‘அவசரமாக உங்கள் பேச்சை முடிக்கவும், காரணம் வெளியில் புயல் வீசுவது போல் இருக்கிறது, ஒன்றும் புரியவில்லை’’ என்று எழுதப்பட்டிருந்தது.

‘சுனாமி’ என்பதற்கு ‘ஆழிப்பேரலை’ என்று ‘விடுதலை’யில் வெளியிட்டோம்!

வெள்ளம் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது, ஆனால் அது ‘சுனாமி’ என்பது அப்போது யாருக்கும் தெரியாது. அதற்குப் பிறகுதான் அதற்குத் தமிழில் ஒரு பெயரை உருவாக்கினோம். ‘விடுதலை’ இதழில்தான் முதன்முதலில் ‘ஆழிப்பேரலை’ என்று அந்தப் பெயரினை வெளியிட்டோம். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அடுத்த ஆறு ஏழு நாட்களில் அவருடைய மறைவு குறித்த கொடுமையான செய்தி வந்தபோது, எங்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

‘‘நம்முடைய நீதிமன்றங்கள்
வெறும் சட்டக் கோர்ட்டுகள்தான்!’’

மிகப்பெரிய ஓர் அக்கிரமம், அநீதியான, நியா யப்படுத்த முடியாத ஒரு நிலை ஏற்பட்டதை எல்லாம் இதில் விவரித்திருக்கிறார்கள். ‘‘நம்முடைய நீதி மன்றங்கள் வெறும் சட்டக் கோர்ட்டுகள்தான்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் அன்று சொன்னது எவ்வளவு உண்மை என்பது இதிலிருந்து புரிகிறது.

நீதிமன்றத்தில் வாதிடும்போது அய்யா அவர்கள் பலமுறை ஒன்றைச் சுட்டிக்காட்டினார்: ‘இது சட்டத்திற்கான மன்றமே (Court of Law) தவிர, நீதிக்கான மன்றம் (Court of Justice) அல்ல; எனவே இங்கே நீதியை எதிர்பார்க்க முடியாது’ என்று அவர் வேதனையோடு குறிப்பிடுவார்.

முக்கியமாக, அப்படிப்பட்ட சூழலில் வாய்தாக்களும், வழக்குகளும் இழுத்தடிக்கப்பட்டபோது, அதை எவ்வளவு கடினமாகச் சகித்துக்கொண்டு அவர் பதிவு செய்திருக்கிறார் என்பதை வாசிக்கும்போது மனம் உருக்கமாக இருந்தது. எனவே, இந்தப் புத்தகம் வெறும் சாதாரணச் சம்பவங்களின் தொகுப்பு மட்டுமல்ல; உணர்ச்சிகளும், நிகழ்வுகளும் நிறைந்த, அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு பதிவு.

ஒருவரது மரணத்திற்குப் பிறகுதான் அவர்களுடைய லட்சியம் பேருருவெடுக்கும்!

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது போன்ற மரணங்கள் இயல்பானவை என்று ஓர் ஆறுதல் சொல்லலாம். ஆனால், அவர்களோடு எல்லாம் முடிந்துவிடுவதில்லை. அந்த மரணத்திற்குப் பிறகுதான் அவர்களுடைய லட்சியம் பேருருவெடுத்து, மக்களிடையே பரவும் என்பதற்கு அவருடைய அடை யாளமே சாட்சி.

இறுதியாக, எனது ஒரே ஒரு வேண்டுகோளோடு என் உரையை நிறைவு செய்கிறேன். அய்யா அவர்கள் ஒரு மிகச்சிறந்த பண்பான குடும்பத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார். அவர் உங்களை எல்லாம் படிக்க வைத்திருக்கிறார்; பெருமைப்படுத்தி இருக்கிறார். எல்லா வகையிலும், எல்லோரோடும் அந்த நல்உறவைத் தொடர்ந்து பேணி வருகிறார். ‘நீரடித்து நீர் விலகாது’ என்பார்களே, அதற்கேற்ப நீங்கள் அனைவரும் இன்னும் நெருக்கமானதொரு குடும்பமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று அனைவர் சார்பாகவும் உரிமையோடும், உறவோடும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

அந்த அன்போடு இந்தப் புத்தகத்தை வெளியிடு கிறோம், ஏற்றுக்கொள்கிறோம்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

ஓங்குக அருணாவின் புகழ்!

நன்றி, வணக்கம்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *