புதுச்சேரி, மார்ச் 23 பொதுவாக அரசியல் கட்சிகளில் விருப்ப மனு அளித்தல், நேர்காணல், தகுதிப் பட்டியல் என நீண்ட நெறிமுறைகள் பின்பற்றப்படும். ஆனால், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இவையனைத்தும் கிடையாது. அங்கு வேட்பாளரைத் தீர்மானிப்பது ஒரு தெய்வீக நம்பிக்கையும், ‘‘அருள்வாக்கும்’’ மட்டுமே.
அப்பா பைத்தியம் சுவாமி கோவில்: தேர்தல் மய்யப்புள்ளி
வேட்பாளராக விரும்புபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களுடன் கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் தவம் கிடக்கின்றனர். முதலமைச்சர் ரங்கசாமி இக்கோவிலில் நடத்தும் சிறப்பு பூஜைகளே வேட்பாளர் தேர்வின் தொடக்கப்புள்ளி.
ரங்கசாமி தாமே கருவறைக்குள் சென்று சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து, நைவேத்தியத்தை சுவாமிக்கு ஊட்டி விடுவார். பூஜையின் முடிவில் சுவாமியிடம் ரங்கசாமி தனியாகப் பேசி உத்தரவுக்காகக் காத்திருப்பார்.
சுவாமி உத்தரவு கிடைத்ததும் கரு வறையில் இருந்து வெளியே வரும் ரங்கசாமி, அங்கிருக்கும் நபர்களில் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ, அவருக்கு விபூதி பூசி எலுமிச்சம் பழத்தை வழங்குவார்.
ரங்கசாமி, யாரிடம் எலுமிச்சம் பழத்தைக் கொடுக்கிறாரோ, அவரே அந்தத் தொகுதியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்.
கட்சி தொடங்கப்பட்ட 2011 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வரு கிறது. நேர்காணல், தகுதி போன்ற அரசியல் அளவுகோல்களை விட, ஆன்மிக உத்தரவே வேட்பாளர் தேர்வில் இறுதி முடிவாக இருக்கிறது. நடப்புத் தேர்தலிலும் இதே ‘‘ஆன்மிகப் பாணியிலேயே’’ வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
