ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குத் தடைவிதிக்க பன்னாட்டு ஆணையம் பரிந்துரை பதறித் துடிக்கும் சங் பரிவாரின் பரிவாரங்கள்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நியூயார்க், மார்ச் 22 பன்னாட்டு மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் அண்மையில் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், அமெரிக்காவிலிருக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடையவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை செய்துள்ளது. அமெ ரிக்காவில் உள்ள பன்னாட்டு மதச் சுதந்திர அமைப்பின் இந்த அறிக்கை இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டத்தைப் பெரு மளவுக்குப் பதற்றம் கொள்ள வைத்துள்ளது.

பன்னாட்டு மதச் சுதந்திர ஆணையம் பரிந்துரை

ஆர்.எஸ்.எஸ்.சின் நேரடிச் செயல்பாடுகள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மிக மோசமான மதக் கலவரங்களையும், பாகுபாட்டையும், அச்சுறுத்தலையும் உருவாக்கியுள்ள நிலையில், பன்னாட்டு அளவில் ஆர்.எஸ்.எஸ்.சின் கிளைகளாக விஷ்வ ஹிந்து பரிசத், எச்.எஸ்.எஸ். போன்ற பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவை அமெரிக்காவில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ்.சின் செயல்பாடுகள் நடைபெறுவதற்கு நிதி உதவி வழங்கி வருவதாக ஏற்கெனவே ஆதா ரங்களுடன் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தான், அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ். சார்பு செயல்பாடுகளை நிறுத்த பன்னாட்டு மதச் சுதந்திர ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அந்தப் பதற்றத்தின் காரணமாகப் பல்வேறு முயற்சிகளை ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 25 முன்னாள் நீதிபதிகள், 119 ஓய்வுபெற்ற அதிகாரிகள், 131 முன்னாள் ராணுவ அதிகாரிகள் உள்பட சுமார் 275 பேர் கையெழுத்திட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர். பன்னாட்டு மதச் சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை முற்றிலும் உள்நோக்கம் கொண்டது என்றும், இந்திய மக்களுடனான அமெரிக்காவின் உறவை சீர்குலைக்கும் வகையில் அறிக்கை உள்ளது என்று அந்தக் கண்டன அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாம்.

ஆர்.எஸ்.எஸ். இவ்வளவு பதறுவது ஏன்?

பன்னாட்டு மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அல்லது USCIRF – என்பது அமெ ரிக்காவின் இரு முக்கிய அரசியல் கட்சிகளான குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சிகளின் பிரதி நிதிகளைக் கொண்ட ஒரு சுதந்திரமான ஆணைய மாகவும் அரசு அமைப்பாகவும் செயல்படுகிறது.

பன்னாட்டு மதச் சுதந்திரச் சட்டத்தின் கீழ் 1998 ஆம் ஆண்டில் இந்த ஆணையம் நிறுவப்பட்டது. இது அமெரிக்க வெளியுறவுத் துறையிலிருந்து தனித்து இயங்கும் ஒரு சுதந்திரமான அமைப்பு. ஒவ்வோர் ஆண்டும், பன்னாட்டு மதச் சுதந்தி ரத்திற்கான அமெரிக்க ஆணையம் தனது ஆண்டு அறிக்கையை வெளியிடுகிறது.

பன்னாட்டளவில் மதச் சுதந்திரத்தை மேம்படுத்த அமெரிக்க  அதிபருக்கும், வெளியுறவுத் துறைக்கும் நாடாளுமன்றத்திற்கும் கொள்கை ரீதியான பரிந்துரைகளை வழங்குகிறது.

மதச் சுதந்திரம் தொடர்பான மீறல்கள் தொடர்ச்சி யாகவும், மோசமாகவும், திட்டமிட்ட வகையிலும் நடைபெறும் நாடுகளை இந்த ஆணையம் கண்டறியும்.

இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அத்தகைய நாடுகளை ‘குறிப்பிட்ட கவலைக்குரிய நாடுகள்’ (Countries of particular Concern) மற்றும் ‘சிறப்பு கண்காணிப்புப் பட்டியல்’ (Special Watch List) என வகைப்படுத்துகிறது. இந்தியா ஏற்கெனவே  டிசம்பர் 29, 2023 அன்று வெளியிடப்பட்ட முந்தைய சிபிசி பட்டியலிலும், 2025 ஆம் ஆண்டின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

இந்த அறிக்கையில் இந்தியா தவிர, மியான்மர், கியூபா, சீனா, எரித்ரியா, இரான், நிகரகுவா, நைஜீரியா, வடகொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவுதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளை சிபிசி பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மூலம் நைஜீரியா மீண்டும் சிபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்தியா குறித்த
ஆணையத்தின் கருத்து

2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்ந்து சீர்குலைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. எனவே, இந்தியாவை சிபிசி பட்டியலில் சேர்க்க அது பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் தேசிய மற்றும் மாநில அளவிலான சட்டங்கள் சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தை இலக்கு வைத்து இயற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

இந்திய அரசு அகதிகளை வெளியேற்றி வருவதாகவும், ஹிந்துத்துவா அமைப்புகளாலும், தேசியவாத அமைப்புகளாலும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும், இந்தி யாவில் உள்ள ஹிந்துத்துவா குழுக்கள் சட்டத்திற்கு அஞ்சாமல் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

‘‘ஆண்டு முழுவதும், பல மாநிலங்களில் இந்து தேசியவாத கும்பல்கள் தண்டனைக்கு அஞ்சாமல் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக துன்புறுத்தல், தூண்டுதல் மற்றும் வன்முறையை நிகழ்த்தியுள்ளன’’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘‘மார்ச் 2025 இல், 17 ஆம் நூற்றாண்டின் முகலாய ஆட்சியாளர் அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று தீவிர ஹிந்து தேசியவாத அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) கோரியதை அடுத்து மகாராட்டிராவில் வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பலர் காயமடைந்தனர் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது’’ என்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

ஒடிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையைக் குறிப்பிட்டு, ‘‘ஜூன் 2025 இல், ஒடிசாவில் ஹிந்து மதத்திற்கு மாற மறுத்ததால் 20 கிறிஸ்தவ குடும்பங்களை ஹிந்து தேசியவாத கும்பல் ஒன்று தாக்கியது. இந்தத் தாக்குதல்களின் போது காவல்துறை தலையிடவில்லை. எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்’’ என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்தியர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் குறிப்பிடும் இந்த அறிக்கை, ‘‘அந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு தீவிரமடைந்தது’’ என்று கூறுகிறது.

‘‘உத்தரப்பிரதேசத்தில், காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்குப் பழிவாங்கப் போவதாக சபதம் ஏற்ற ஹிந்து தேசியவாத குழுவின் உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள், இஸ்லாமிய உணவக ஊழியர் ஒருவரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. மே 2025 இல், இந்திய அதிகாரிகள் 15 கிறிஸ்தவர்கள் உட்பட 40 ரோஹிங்கியா அகதிகளைத் தடுத்து வைத்து, அவர்களை பன்னாட்டு கடற்பகுதிக்குக் கொண்டு சென்று, உயிர் காக்கும் அங்கிகளை மட்டுமே கொடுத்து பர்மா கடற்கரைக்கு நீந்திச் செல்லும்படி கட்டாயப்படுத்தினர்.

ஜூலை 202 இல், அசாமில் இருந்து வங்காள மொழி பேசும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்திய குடிமக்களாக இருந்தபோதிலும் அவர்களை இந்திய அதிகாரிகள் வங்கதேசத்திற்கு நாடு கடத்தினர்.

குறிப்பாக வக்ஃப் சட்டம் மற்றும் உத்தர காண்டின் மாநில சிறுபான்மையினர் கல்வி அதி காரச் சட்டம் (யூஎஸ்ஏஎம்ஈ) ஆகியவற்றை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

புதிய வக்ஃப் சட்டம், வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களைச் சேர்க்க அனுமதிக்கிறது. இதற்கிடையில், புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே உத்தரகாண்டில் உள்ள மதரஸா வாரியம் கலைக்கப்பட்டது.

இந்த புதிய சட்டத்தின் மூலம், இஸ்லாமி யர்களின் மதரஸாக்களுடன், மாநிலத்தில் உள்ள சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகளின் கல்வி நிறுவனங்களும் அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரும்” என்று கடந்த ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசால் இந்தி யாவில் நடைபெற்ற மத வன்முறைகள், சட்ட மீறல்கள், புதிய சட்டரீதியான நெருக்கடிகளைப் பட்டியலிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். மீது
தடை
விதிக்க வேண்டும்

இந்தியாவின் உளவுத்துறை அமைப்பான ‘ரா’ மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் ஆகியவற்றுக்கு எதிராக மதச் சுதந்திர மீறல்கள் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளைப் பன்னாட்டு மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் முன்வைத்துள்ளதுடன், இந்திய உளவுத்துறை மற்றும் ஆர்எஸ்எஸ் மீது அமெரிக்கா தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

உளவுத்துறை மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்றும், அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் பன்னாட்டு மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தனது பரிந்துரைகளில் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான பாதுகாப்பு உதவி மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மதச் சுதந்திர சீர்தி ருத்தங்களுடன் அமெரிக்கா இணைக்க வேண்டும் என்றும், ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.சின் தொடர் ஆபத்தான செயல்பாடுகளை உலகம் உற்று நோக்கிக் கொண்டி ருப்பதுடன் அதுகுறித்து எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.சைக் கலக்கம் கொள்ளச் செய்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்தியாவில் மத சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேலும் வலுவிழந்துள்ளன. மத சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலான சட்டங்களை ஒன்றிய, மாநில அரசுகள் இயற்றின. மதமாற்றம், ஹிஜாப் அணிதல், பசுவதை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டங்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரைப் பாதித்துள்ளது.

அரசுக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்பட்டன

மதச் சிறுபான்மையினரின் குரலைத் தொடர்ந்து ஒடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. சிறுபான்மையினரின் சொத்துகளை இடித்துத் தள்ளுதல், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தல், அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்மீது வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றின் மூலமாக அர சுக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்பட்டன.

மத சுதந்திர நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இந்திய அரசின் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டும். இருதரப்பு பேச்சு வார்த்தையின்போது இந்த விவகாரத்தை இந்தியா விடம் அமெரிக்கா எழுப்ப வேண்டும். மேலும், மத சுதந்திர விவகாரத்தில் இந்தியாவை ‘அதிதீவிர பாதிப்புக்குரிய பகுதி’ என அறிவிக்க வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவில் மத சுதந்திர நிலைமைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன, ஒன்றிய மற்றும் பல்வேறு மாநில அரசுகள் மத சிறுபான்மையினருக்கு எதிரான பரவலான துன்புறுத்தல் மற்றும் வன்முறையை பொறுத்துக் கொள்கின்றன. பாஜக தலைமையிலான அரசாங்கம் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தை (CAA) இயற்றியது, இது ஏற்கெனவே இந்தியாவில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாத குடியேறிகளுக்கு மட்டுமே இந்திய குடியுரிமையை விரைவாக வழங்க வகை செய்கிறது. அரசாங்கம் திட்டமிட்டுள்ள நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேட்டை முடிக்கும்போது, மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் தடுப்புக்காவல், நாடு கடத்தல் மற்றும் நாடற்ற நிலைக்கு ஆளாக நேரிடும்” என்று தெரிவித்திருப்பதுடன், பிரதமர் மோடியே சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளைப் பேசுவதாகவும், பல்வேறு ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தது.

சங் பரிவாரத்தைக் கலங்கடித்துள்ளது

தொடர்ந்து இந்தியாவில் மதச் சுதந்திரம் ஆபத்தில் இருப்பதை வெளிப்படுத்திவரும் இவ் வமைப்புக்கு ஆண்டு தவறாமல் இந்திய ஒன்றிய வெளியுறவுத் துறையும் சம்பிரதாயமான எதிர்ப்பையும், மறுப்பையும் பதிவுசெய்யும். ஆனால், இம்முறை குறிப்பிட்டு ஆர்.எஸ்.எஸ்.சின் செயல்பாடுகளைத் தடுக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது தான் சங் பரிவாரத்தைக் கலங்க டித்துள்ளது.

யுஎஸ்சிஅய்ஆர்எஃப் வழங்கும் பரிந்துரைகளை ஏற்க வேண்டிய கட்டாயம் அமெரிக்க நாடாளுமன்றத் துக்கோ, வெளியுறவு அமைச்சகத்துக்கோ இல்லை என்றாலும், தொடர்ந்து இதே நிலை தொடர்வதை அந்த ஆணையம் சுட்டிக்காட்டி வருவதன் மூலம் குறைந்தபட்சம் அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நெருக்கடி எழும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஆணையத்தின் பரிந்துரைக்கு மதச்சார்பற்ற செயல்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து ஆதரவு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் வரவேற்பு

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘‘அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்க்கும் மற்றும் மனுஸ்மிருதியின் படி நாட்டை நடத்தத் துடிக்கும் ஓர் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், இந்த தேசத்தின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் விஷம் போன்றது. காந்தியார் படுகொலை செய்யப்பட்ட பிறகு, சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதித்தார். தற்போது அமெரிக்க ஆணையமும் இந்த அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளது. எனவே, ஆர்.எஸ்.எஸ்க்குத் தடை விதிக்கப்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *