புதுடில்லி, மார்ச் 22- மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை பன்னாட்டு எரிசக்தி முகமை (IEA) பரிந்துரைத்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கியப் பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் கவலைக்குரியதாக உள்ளன:
வினியோகப் பாதிப்பு
நாளொன்றுக்கு சராசரியாக 1.50 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் 50 லட்சம் பீப்பாய் இதர பொருட்கள் இந்தப் பாதை வழியாகவே கடக்கின்றன.
உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் 20% இந்தப் பாதையைச் சார்ந்துள்ளதால், தற்போதைய தடை முன்னெப்போதும் இல்லாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்வு
கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இதனால் டீசல், விமான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு, நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள எரிசக்தி முகமை (IEA)அறிவுறுத்தியுள்ளது.
பணிமுறை மாற்றம்!
முடிந்தவரை ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் வாகனப் போக்குவரத்தைக் குறைக்கலாம்.
நெடுஞ்சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது, வழக்கமான வேகத்தை விட மணிக்கு 10 கி.மீ. வேகத்தைக் குறைத்து ஓட்டுவது எரிபொருளைச் சேமிக்க உதவும்.
தனியார் வாகனங்களைத் தவிர்த்து பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல் மற்றும் ஒரு காரில் பலர் பயணிக்கும் (Car pooling) முறையை ஊக்குவித்தல்.
பெருநகரங்களில் தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதுடன், அவசியமற்ற விமானப் பயணங்களைத் தவிர்க்கலாம்.
இந்த இக்கட்டான சூழலில், எரிபொருள் சிக்கனமே பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான சிறந்த வழி என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
