[ அண்ணா தி.மு.க., அமித்ஷா தி.மு.க.வாகிவிட்டதே! [ நடிகர் கட்சியை வளைத்துப் பார்த்தும் பயனில்லை!
[ தேர்தலுக்குமுன் ஒரு கூட்டணி – தேர்தலுக்குப் பின் வேறொரு ‘அமித்ஷா பிராண்ட்’ கூட்டணி!
[ தேர்தலுக்குமுன் ஒரு கூட்டணி – தேர்தலுக்குப் பின் வேறொரு ‘அமித்ஷா பிராண்ட்’ கூட்டணி!
தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
எதிர்க்கட்சியாக செயல்படவேண்டிய அ.தி.மு.க. – அமித்ஷா தி.மு.க.வாக ஆகிவிட்டது. இது பெரியார் நாடு – பீகார் அல்ல; ‘அமித்ஷா பிராண்ட்’ கூட்டணி இங்கு எடுபடாது. தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
- [ அண்ணா தி.மு.க., அமித்ஷா தி.மு.க.வாகிவிட்டதே! [ நடிகர் கட்சியை வளைத்துப் பார்த்தும் பயனில்லை! [ தேர்தலுக்குமுன் ஒரு கூட்டணி – தேர்தலுக்குப் பின் வேறொரு ‘அமித்ஷா பிராண்ட்’ கூட்டணி!
- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
- அண்ணா தி.மு.க.வா – அமித்ஷா தி.மு.க.வா?
- அன்று இராமாபுரம், போயஸ் தோட்டம் – இன்று டில்லியா?
- நடிகர் கட்சியை இழுக்க முயற்சி!
- எத்தனை எத்தனை இடங்களில் பாய்ச்சல்கள்!
- ‘பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது!’
- பி.ஜே.பி.யின் ‘பி டீம்’தான் நடிகர் கட்சி!
- இது பீகார் அல்ல – பெரியார் நாடு!
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியல் களம் குறித்து, அன்றாடம் வெளிவரும் செய்திகளையும், தகவல்களை யும் கண்டு, பரிதாபப்படுவதா? வெட்கப்படுவதா? வேதனைப்படுவதா? என்பதை நினைத்து, வருந்தி, புரிந்து, ‘திராவிட மாடல்’ ஆட்சியை மீண்டும் இரண்டாவது முறையாக சென்னை கோட்டையில் ஆட்சிச் சிம்மாசனத்தில் அமர்த்திட, மக்கள் – வாக்காளர் பெருமக்கள் தெளிவான, உறுதியான முடிவுக்கு வந்துவிட்டனர்!
அண்ணா தி.மு.க.வா –
அமித்ஷா தி.மு.க.வா?
அமித்ஷா தி.மு.க.வா?
‘அ.தி.மு.க.தான் கூட்டணிக்குத் தலைமை’ என்று பெயரளவில் கூறிவிட்டு, இன்னொருபுறம், அமித்ஷா (அண்ணா) தி.மு.க.வாக அதனை டில்லி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.விடம் அடகு வைத்து, எல்லாவற்றிற்கும் டில்லிக்குக் காவடி தூக்கி, அதன் முகவரியை இழக்க வைத்துவிட்டார் பரிதாபத்திற்குரிய எதிர்க்கட்சித் தலைவரான பழனிசாமி.
அரசியல் வியூகத்தில் அவர் எவ்வளவு வினை தேர்ந்தவர் என்பதைப் புரிந்துகொள்ள, சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரே ஒரு நிகழ்வை நினைவுபடுத்திக் கொண்டாலே போதும்!
அவர் சென்றிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், நடிகரின் புதுக்கட்சிக் கொடியைச் சுட்டிக் காட்டியதைக் கண்டு, (யாரோ காட்டினர் என்பதை வைத்து) உடனே அந்த நடிகரின் கட்சி தனது தலைமையில் உள்ள கூட்டணியில் சேர்ந்து கொள்ள முடிவு செய்துவிட்டதாகவே யூகித்து, கூட்டணிக்கு இப்போதே ‘‘பிள்ளயைார் சுழி’’ போட்டாகி விட்டது என்று முக மலர்ச்சியுடனே முழக்கமிட்ட சோக நாடக வசனம் ஒன்றே போதாதா?
அன்று இராமாபுரம்,
போயஸ் தோட்டம் –
இன்று டில்லியா?
போயஸ் தோட்டம் –
இன்று டில்லியா?
மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் அ.தி.மு.க.வுக்குத் தலைமை தாங்கி நடத்திய காலகட்டத்தில், டில்லிதான், தமிழ்நாட்டிற்கு (இராமாபுரத்திற்கும், போயஸ் தோட்டத்திற்கும்) வந்து, பேசி கூட்டணி அமைத்தது.
இப்போதோ, அமித்ஷாக்கள் அக்கூட்டணியைத் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) என்று அழைப்பதோடு, எடப்பாடி பழனிசாமி அவர்களை ஏதோ பொம்மை போல வைத்துவிட்டு, அவர்களே செயலாற்றுகின்றனர்!
மூன்று முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு (மதுராந்தகம், மதுரை, திருச்சி) வந்தார், சென்றார். எந்தத் தாக்கமும் ஏற்படவே இல்லை.
நடிகர் கட்சியை இழுக்க முயற்சி!
அதனால், தங்கள் கூட்டணிக்குத் தோல்வி உறுதி என்பதை அரசியல் ரீதியாகக் கணித்து, நடிகர் கட்சியை எப்படியாவது வளைத்து, தமது கூட்டணியில் கொண்டு வந்து, தி.மு.க.வுக்குப் பலமான போட்டியை உருவாக்கலாம் என்று திட்டமிட்டு, அதற்குரிய ஆயுதங்களாக ஒருபுறம் சி.பி.அய்., மற்றொரு புறம் அவரது புதிய படமான ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளிவர முடியாத அளவிற்குத் தணிக்கைத் தடங்கல்களைத் தொடரும் வியூகம் இறுக்கியது.
எத்தனை எத்தனை இடங்களில் பாய்ச்சல்கள்!
இதுபற்றி டில்லியில் ஒரு களம் மட்டும் போதாது என்று கருதி, மும்பையிலும் பல்முனை அழுத்தங்களை அவருக்குத் தந்துள்ளனர் என்று 17.3.2026 அன்று ‘தினமலர்’ நாளேட்டில் வெளிவந்த செய்தியை அப்படியே எடுத்துப் போட்டு, சில விளக்கங்களை 19.3.2026 அன்று அறிக்கையில் எழுதினோம். அங்கு என்ன நடந்தது? என்று இன்றைக்கு அதே நாளேடு, இன்று (21.3.2026) சில செய்திகளையும் வெளியிட்டுள்ளது. டில்லிக்கு நடிகர் சென்றிருந்தபோது, உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா என்பவருக்கு நெருக்கமானவர்களை அங்கு சந்தித்ததாகவும், அங்கிருந்து சென்னை திரும்பிய பின்னர், மீண்டும் ‘வளைகாப்பு’க்காக என்று சொல்லி, மும்பைக்குத் தனி விமானத்தில் நடிகர் சென்றிருப்பதாகவும், அங்கும் சில தொழிலதிபர்களை சந்திக்கவிருப்பதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது. டில்லியிலும், மும்பையிலும் மாறி மாறி நடக்கும் சந்திப்புகள் குறித்த செய்திகளை – வரி பிளந்து ஆய்வு செய்தால், (Reading between lines) ஒன்று நன்றாகப் புரியும்!
‘பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது!’
‘‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’’ – இப்போது என்னால் முடியாது, ‘‘அடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்’’ என்று அந்த நடிகர் கூறியதாக ‘தினமலர்’ ஏட்டின் செய்தி முடிப்பு கூறுகிறது!
இதிலிருந்து பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.சை எதிர்ப்பதற்கு நடிகர் இயக்கம் தயாராக இல்லை. ஆனால், பா.ஜ.க.வை தனது ‘கொள்கை எதிரி’ என்று வசனத்தை மட்டுமே பேசுவார். தி.மு.க. ஆட்சியைத் தடுத்து, அதன்மீது ‘இல்லாத பொல்லாத’ குற்றச்சாட்டுகளை – அப்பாவி ரசிகர்கள் வாயிலாகப் பரப்பும் ஊடகங்களின் திட்டமிட்ட ஏற்பாடுகளை நம்பியே அவர் களம் இறங்கியுள்ளார் என்பது நாளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டே இருப்பது புரியவில்லையா?
தி.மு.க. அரசியல் எதிரியாம் –
பா.ஜ.க. கொள்கை எதிரியாம்!
இரண்டில் எது முதலில் எதிர்க்கப்படவேண்டிய ஒன்று என்பதை அரசியலில் ‘அனா, ஆவன்னா’ புரிந்த எவரும், எது ஆபத்து என்று சொல்வார்களே!
‘‘பிறகு பார்த்துக் கொள்ளலாம்’’ என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார் என்றால், அதற்கு என்ன அரசியல் அர்த்தம்?
பி.ஜே.பி.யின் ‘பி டீம்’தான் நடிகர் கட்சி!
தமிழ்நாட்டுத் தேர்தலுக்குப் பின், பல சித்து வேலைகளுக்கு, இப்போதே தயாராகிவிட்டார்; மற்றொரு ‘மும்பை – மராத்தி, அரியானா, பீகார் வேலைகள்’ கருக் கொள்ளத் தொடங்கி விட்டன என்பதுதானே!
இதை நன்கு முன்பே கணித்து ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சரும் தி.மு.க. கூட்டணியின் ஆற்றல்மிகு தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘நடிகர் கட்சி பி.ஜே.பி.யின் ‘பி டீம்’’’ என்று குறிப்பிட்டது எத்தகைய முன்னோக்கு – சரியான கணிப்பு என்பது புரிந்துவிட்டது!
எனவே, தமிழ்நாட்டிலும், மற்ற வடபுலத்து வித்தைகளை செய்து ‘‘தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி’’ அது முடிந்து முடிவு எப்படியானாலும் – அதற்குப் பிறகு ‘‘பா.ஜ.க. அமித்ஷா பிராண்ட் அரசியல் ஆட்சிக் கூட்டணி என்ற கட்சித் தாவலின் ‘புதிய அவதாரங்கள்’ உருவாக்கம்’’ என்று திட்டங்கள் ஓடுகின்றன போலும்!
இது பீகார் அல்ல – பெரியார் நாடு!
மறவாதீர், இது பெரியார் நாடு, பீகார் அல்ல; இங்கே தேர்தல் முடிவுகளே திட்டவட்டமான மாற்றமாக இருக்குமே தவிர, ஏமாற்றமாக, ‘குடுகுடுப்பைக்காரரின் ஒட்டுப் போட்ட பட்டுச்சட்டையாக’ ஒருபோதும் அமையாது என்பது உறுதி!
என்றாலும், அரசியல் எவ்வளவு மலிவான கீழிறக்கம்? தமிழ்நாட்டு அரசு, அரசியலைப்பற்றி யார் யாரெல்லாம் முடிவு செய்வது என்ற ஒரு விவஸ்தையே இல்லையா? விலா நோக சிரிப்பாய் சிரிக்கிறது!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.3.2026
