சென்னை, மார்ச் 21- தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகள் மற்றும் தொழில்நுட்ப முறைகேடுகளைத் தடுக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, வாக்காளர்களை திசைதிருப்பும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
அடையாளத் திருட்டிற்குத் தடை: ஒருவரின் அனுமதியின்றி அவரது குரல், தோற்றம் அல்லது அடையாளத்தை ஏஅய் மூலம் தவறாகச் சித்தரிக்கும் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை: ஏஅய் மூலம் உருவாக்கப்பட்ட அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட காட்சிப் பதிவுகளில், அது ‘செயற்கை உள்ளடக்கம்’ (Synthetic Content) என்கிற லேபிளைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
3 மணி நேர கெடு: அரசியல் கட்சிகளின் பக்கங்களில் சட்டவிரோத காட்சிப் பதிவுகள் கண்டறியப்பட்டால் அல்லது புகாரளிக்கப்பட்டால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் அவை நீக்கப்பட வேண்டும்.
முன் அனுமதி: சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் (எம்சிஎம்சி) 3 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டியது கட்டாயம். நகர்ப்புற வாக்காளர்களின் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், தேர்தல் ஆணையம் ஒரு முன்னோடி முயற்சியை எடுத்துள்ளது:
அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓட்டுச் சாவடிகள்
தமிழ்நாட்டில் முதன்முறையாக 14 உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டுவசதி சங்க வளாகங்களுக்குள்ளேயே ஓட்டுச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.
இடங்கள்: சென்னையில் 5, திருவள்ளூரில் 4, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் தலா 2, மதுரையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. 3. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான ஆண்டு ஊதியம் 6,000 ரூபாயி லிருந்து 12,000 ரூபாயாக இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது.
கூடுதலாக, எஸ்அய்ஆர் பணிக்கு 2,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 99.8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
