‘நவில்தொறும் நூல் நயம் போலும்’ என்பதுதான் எத்தகைய அறிவார்ந்த அனுபவம் என்பதை, ஏற்கெனவே படித்துச் சுவைத்த சிறந்த நூல்களை மீண்டும் எடுத்து பலமுறை மறுவாசிப்புக்கள் செய்யும் போதுதான் எத்தனை எத்தனை இன்பம்! அருமையான ‘இளைப்பாறுதல்’ கிடைக்கிறது!
அப்படிப்பட்ட ஓர் அருமை யான, பொது வாழ்விற்கு – பொதுத் தொண்டுக்கு, கொள்கை மாறா, தடம் பிறழா நிலையில், எதிர்நீச்சலை அடித்து, இராணுவக் கட்டுப் பாட்டுடன் – வறுமைத்தீ தன் வாழ்வை எரித்த நேரத்தில் கூட – வளமையைத் துறந்து, வலிமையோடு, இறுதி மூச்சடங்கும் வண்ணம் வாழ்ந்து காட்டிய ஒப்புயர்வு மிக்க தந்தை பெரியாரின் அனுக்கத் தொண்டர் ‘தோழர்’ என்று பெரியாரைப் பாசமும் பரிவும் பொங்க, தனது வெண்கல நாதக் குரலில் ஓங்கி முழங்கிய, சுயமரியாதை இயக்கம் – அதன் தோற்றுவாய்த் தொண்டர் – நாயகன், தளபதியே அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள்.
சுயமரியாதை இயக்கம் 1926 முதல் பல அரிய தொண்டர்களையும், தோழர்களையும் தொடர்ந்து பெற்றது. அதன் ஆரம்ப காலத் தோழர் பட்டாளத்தில் பணிபுரிந்து, பழைய உலகப் போர் பட்டாளத்தில் பணியாற்றி, பிறகு தந்தை பெரியாரின் தனி மனித இராணுவத்தின் ‘தகத்தகாய தளபதியாய்’ அவ்வியக்க வரலாற்றில் அழியாத நிரந்தர இடம் – ஏன் முதலிடம் என்று கூடச் சொல்லலாம், அப்பேர்ப்பட்ட ஆற்றல்மிகு பிரச்சார பீரங்கி முழக்கப் பேச்சாளர், தனது வீரம் கொப்பளிக்கும் பதிலுரைகளை, கல்லெறிந்தவர்களையும் பிறகு தனது களப்பணியாளர்களாக்கிய – வசீகர – காந்தச் சொற்பொழி வாளரே பட்டுக் கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி அவர்கள்!
அவரது கம்பீரம் தொனிக்கும் களப் போர் உரைகளில், ஒன்று, திருவண்ணாமலையில் அவர் தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து 1946இல் ஆற்றிய உரை ஒரு பகுத்தறிவுப் பிரச்சாரப் பாட நூல் போன்றது!
‘இதோ பெரியாரில் பெரியார்’ என்ற தலைப்பில், எத்தனை முறைத் தின்றாலும் தெவிட்டாத கரும்பாக அது இருக்கும்!
நானே அதை குறைந்த பட்சம் பத்து முறையாவது படித்துப் படித்து என்னுள்ளே உரமேற்றி மகிழ்ந்த நூல் அது!
எனது பொது வாழ்க்கை இப்போது 83 ஆண்டுகள் என்றே நினைத்து மகிழ்வதற்கு ஒரு முக்கிய காரணம், பல அரிய திராவிட, தேசிய இயக்கத்தவர்களை (வடபுலம் உட்பட) தலைவர்களை, சமூக சிகிச்சை செய்பவர்களை – சமூக புரட்சியாளர்களை நேரில் கண்டும், அவர்தம் பேருரைகளை ஒரு முறை கேட்டு ஒரு இளைஞனாக, மாணவனாக, இருந்தபோதே காட்சி இன்பத்தையும், கருத்து இன்பத்தையும் ஒருசேரப் பெற்று, மூடத்தனத்திலிருந்து, மீட்சி இன்பத்தை இன்றளவும் பெற்று வரும் பேறு பெற்று மகிழ்பவன் இந்த தொண்டர்க்குத் தொண்டர்!
தந்தை பெரியாரை
அறிஞர் அண்ணாவை
கலைஞரை
புரட்சிக் கவிஞரை
தளபதி அஞ்சா நெஞ்சன்
அழகிரிசாமி அவர்களை
காமராசரை
வடநாட்டுப் பெருந்தலைவர்கள்
பலரை நான் பார்த்து மகிழ்ந்தது
என்பதோடு, அவர்களுக்கு அறிமுகம்
ஆன எளியவன் என்பதுதான்
யான் பெற்ற பெறற்கரிய வாய்ப்பு!
அவர்களில் அறிந்து
அவர்களிடம் பெற்றுக்கொண்ட
பாடமும், கற்றுக்கொண்ட
அனுபவமும், அறிவும், ஆளுமை
வாய்ப்பும் ஓரளவு உண்டு.
அண்ணன் அழகிரி,
தோழர் பட்டுக்கோட்டை அழகிரி,
அஞ்சாநெஞ்சன் அழகிரி,
தளபதி அழகிரி
– இவ்வாறு இயக்கத்தின் பல்வேறு படிநிலைத் தோழர்கள் அவரை அழைத்தாலும், அவர் பேச்சைக் கேட்கவும், சுவைத்து எனது ‘திராவிட மழலைப் பேச்சை’ – சிற்சில வாய்ப்புகளின் போது கேட்டு – யாரையும் ஊக்கப்படுத்துவதில் அவர் எப்படிப்பட்ட தாராள வள்ளல் என்பதற்கு எடுத்துக்காட்டு – எனக்கே அவர் முதுகில் தட்டிப் பாராட்டிய பெரும் வாய்ப்பை, அதுவும் நமது கலைஞர் புதுச்சேரி கெப்ளே தியேட்டரில் அவர் எழுதி, நடத்திய நாடகக் காட்சி ஒன்றில் சுயமரியாதைத் திருமணக் காட்சியில் நானே தலைமை தாங்கி, முழுக்கால் உடை அணிந்து திருமணத்தை விளக்கிப் பேசி நடத்தியபோது திரைக்குப் பக்கத்திலிருந்து தளபதி அழகிரி என் முதுகில் தட்டிக் கொடுத்து, உற்சாகப்படுத்தியதைவிட வேற என்ன பெரிய விருது உண்டு?
(தொடரும்)
