புதுடில்லி, மார்ச் 20- நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 73 பேர் குற்ற வழக்குகளை சந்தித்து வருகின்றனர். 31 பேர் தலா ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
பிரமாணப் பத்திரம் ஆய்வு
மாநிலங்களவை உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கலின்போது சமர்ப்பித்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து, ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 233 மாநிலங்களவை உறுப்பினர்களில், ஜார்கண்ட் மாநிலத்தில் மாநிலத்தில் ஓர் இடம் காலியாக உள்ளது. 3 உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்கள் கிடைக்கவில்லை. எனவே, மீதி உள்ள 229 உறுப்பினர்களின் பத்திரங்களை ஆய்வு செய்துள்ளது. இவர்களில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட 37 உறுப்பினர்களும் அடங்குவர்.
குற்ற வழக்குகள்
229 பேரில் 73 பேர் (32 சதவீதம்) தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர். அவர்களில் 36 பேர் (16 சதவீதம்) கடுமையான குற்ற வழக்குகளை சந்தித்து வருகின்றனர். ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், கொலை வழக்கை சந்தித்து வருகிறார்.
4 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் கொலை முயற்சி வழக்கையும், 3 பேர் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளையும் எதிர்நோக்கி உள்ளனர். கட்சிவாரியாக பார்த்தால், பா.ஜனதா-27 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள், காங்கிரஸ்-12. திரிணாமுல் காங்கிரஸ்-13, ஆம் ஆத்மி-4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பாரத் ராஷ்டிர சமிதி-தலா 3 என குற்ற வழக்குகளை சந்தித்து வருகிறார்கள்.
தலா ரூ.100 கோடி சொத்து
மேலும், 31 மாநிலங்களவை உறுப்பினர்கள் (14 சதவீதம்) தங்களுக்கு தலா ரூ.100 கோடிக்குமேல் சொத்துகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
பெரிய கட்சிகள் வாரியாக பார்த்தால், பா.ஜனதாவில் 6 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களும், காங்கிரசில் 5 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசில் 4 பேரும், ஆம் ஆத்மியில் 2 பேரும், பாரத் ராஷ்டிர சமிதியில் 2 பேரும், தேசியவாத காங்கிரசில் 3பேரும் தலா ரூ.100 கோடிக்கு மேல் சொத்துகள் வைத்துள்ளனர். ஒரு மாநிலங்களவை எம்.பி.யின் சராசரி சொத்து மதிப்பு ரூ.120 கோடி ஆகும்.
கட்சிவாரியாக பா.ஜனதாவில் ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.28 கோடியே 29 லட்சம் ஆகும். காங்கிரசில் ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.128 கோடியே 61 லட்சம். தி.மு.க.வில் ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.11 கோடியே 90 லட்சம். ஆம் ஆத்மியில் ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரிர்ன் சராசரி சொத்து மதிப்பு ரூ.574 கோடி ஆகும்.
பணக்கார, ஏழை நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அதிகபட்சமாக, பாரத் ராஷ்டிர சமிதி நாடாளுமன்ற உறுப்பினர் பண்டி பார்த்தசாரதி ரூ.5 ஆயிரத்து 300 கோடி சொத்து வைத்துள்ளார். ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிந்தர் குப்தா ரூ.5 ஆயிரத்து 53 கோடி சொத்துகளும், ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லா அயோத்யா ராமிரெட்டி ரூ.2 ஆயிரத்து 577 கோடி சொத்துகளும் வைத்துள்ளனர்.
அதே சமயத்தில், ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சந்த் பல்பீர்சிங், வெறும் ரூ.3 லட்சம் சொத்துகளுடன் கடைக்கோடியில் இருக்கிறார். மணிப்பூரை சேர்ந்த மகாராஜா சனஜேபா லெய்ஷெம்பா ரூ.5′ லட்சம் சொத்துகளும், திரிணாமுல் காங்கிரசின் பிரகாஷ் சிக்பரைக் ரூ.9 லட்சம் சொத்துகளும் வைத்துள்ளனர்.
