புதுடில்லி, மார்ச் 20- அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து, ஈரான் மீது போர் தொடுத்துள்ளன. இதன் காரணமாக ஹார்மூஸ் நீர் வழியை ஈரான் மூடியுள்ளது. இதனாலும், அமெரிக்காவின் நட்பு நாடுகளான அய்க்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உலக பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மத்திய கிழக்கு பிராந்தியம் கருதப்படுகிறது. அங்கு போர் மூண்டுள்ளதால், உலக பொருளாதாரம் தற்போது மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.
மத்திய கிழக்கு போர் காரணமாக, இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு முதல் வாகன உற்பத்தி பாதிப்பு வரை ஏராளமான பிரச்சினைகளை இந்தியா சந்திக்க தொடங்கியுள்ளது. இந்த வரிசையில் இந்தியா மற்றொரு மிக முக்கியமான பிரச்சினையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது இயக்கப்பட்டு வரும் அனைத்து பிஎஸ்6 டீசல் வர்த்தக வாகனங்களிலும் (லாரிகள் போன்ற வாகனங்கள்), பெரிய டீசல் பயணிகள் வாகனங்களிலும் (கார்கள் போன்ற வாகனங்கள்) கட்டாயமான ‘இன்ஜின் இன்டர்லாக் மெக்கானிசம்’ இடம் பெற்றுள்ளது. டிஇஎஃப் எனப்படும் டீசல் எக்ஸாஸ்ட் ஃப்ளூயிட் தீர்ந்து போனால், இந்த வாகனங்களை இயக்க முடியாது.
எனவே இந்த வாகனங்களை இயக்க டிஇஎஃப் மிகவும் முக்கியம். ஆனால் அதற்கு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. யூரியா தட்டுப்பாடுதான் இதற்கு காரணம். டிஇஎஃப்-ன் மிக முக்கியமான மூலப்பொருளாக யூரியா உள்ளது. அப்படிப்பட்ட யூரியாவிற்கு இந்தியாவில் தற்போது தட்டுப்பாடு உருவாகி வருகிறது.
இந்தியா தனது யூரியா தேவையில் சுமார் 50-60 சதவீதத்தை, அய்க்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதியின் மூலமாகதான் பூர்த்தி செய்து கொள்கிறது. ஆனால் மத்திய கிழக்கு பிராந்திய போர் காரணமாக யூரியா இந்தியாவிற்கு வருவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.
எனவேதான் டீசல் மூலமாக இயங்கும் லாரிகள், கார்கள் போன்ற வாகனங்களை இயக்க முடியாத சூழல் உருவாகி வருகிறது. இந்த பிரச்சனையை, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தற்போது ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்து எக்கானமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் எழுப்பியிருப்பது மிக முக்கியமான பிரச்சினை ஆகும். குறிப்பாக லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டால், சரக்கு போக்குவரத்து அடியோடு முடங்கும். இது பால், காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன், அவற்றின் விலை உயர்விற்கும் காரணமாக அமையும்.
அத்துடன் தொழில் துறைக்கு தேவையான மற்ற மிக முக்கியமான பொருட்களின் போக்குவரத்தும், இந்த பிரச்சினை காரணமாக முடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே ஒன்றிய அரசு இந்த பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து.
