ஓயா உழைப்பு – ஒப்பில்லா சாதனைகள் காரணமாக  மீண்டும் முதலமைச்சராக அமர்வார் மு.க.ஸ்டாலின் என்பது உறுதி!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அ.தி.மு.க. –

இப்போது டில்லியின் சொல்படி நடக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது!

தி.மு.க. கூட்டணியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பலர் முயற்சி தோல்வியே!

அ.தி.மு.க. – பா.ஜ.க. தனக்கென்று ஒரு கூட்டணியை அமைக்கவே தள்ளாடுகிறது! 

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

தி.மு.க. ஆட்சியை வீழ்த்த எத்தனையோ சூழ்ச்சிகளை மேற்கொண்டும், தமக்கென்று நம்பத் தகுந்த ஒரு கூட்டணியை அமைத்துக் கொள்ள முடியாமல் தள்ளாடுகிறது பா.ஜ.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தலைமை தாங்கப்பட்ட அ.தி.மு.க.வோ டில்லியின் கட்ட ளைக்கு அடங்கிவிட்டது. ஓயா உழைப்பாலும், ஆட்சியின் அரும்பெரும் சாதனைகளாலும் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டுக்கான தேர்தல் தேதி அறிவித்தாகிவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி அவர்களின் கட்சி யான அ.இ.அண்ணா தி.மு.க.வுடன், பல மாதங்க ளுக்கு முன்பே, டில்லிக்கு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடியாரை அழைத்து, அங்கேயே கூட்டணி அறிவிப்பினை செய்ய வைத்தார் உள்துறை அமைச்ச ரும், பா.ஜ.க.வினரால் ‘தேர்தல் வித்தகர்’ என்று அழைக்கப்படுபவருமான அமித்ஷா.

 வடக்கே பி.ஜே.பி. செய்த வித்தை
தமிழ்நாட்டில் எடுபடாது!

வடக்கே பல மாநிலங்களில் செய்த ‘‘வித்தைகளை’’, தமிழ்நாட்டிலும் செய்து, தி.மு.க. கூட்டணி சிதையும் என்ற நம்பிக்கையோடு, வழக்குகளில் ஏற்கெனவே சிக்கியுள்ள சில, உடைபட்ட கட்சிகளின் தலைவர்களை அழைத்தும், பிரதமர் மோடி அவர்கள் இதுவரை இரண்டு, மூன்று முறை தமிழ்நாட்டுத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்ததற்குப் பிறகும், எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை என்பதைவிட, அவர்களது கூட்டணியே – அவர்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்பது ஊரறிந்த செய்தியாகி விட்டது!

தேசிய ஜனநாயக  கூட்டணி (NDA) என்றுதான் அழைக்கப்படுகிறது; பெயரளவில் எடப்பாடி பழனி சாமி அவர்கள், அதற்குத் தலைவர் என்று கூறி விட்டு, அக்கூட்டணியில் சேரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எல்லாம் பா.ஜ.க.வின் வடநாட்டுத் தலைவர்கள்தான். (அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் முழு பலமில்லாத கட்சிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது).

அ.தி.மு.க.வோ, சிதறு தேங்காய்போல் ஆகிவிட்டது – தொடக்கத்திலிருந்தே – ஜெயலலிதா அவர்கள்    உடல்நலம் குன்றி, மருத்துவமனையிலிருந்த நாள்கள் முதல், வெங்கய்யா (நாயுடு) போன்றவர்கள் (அப்போதி ருந்த ஒரு ஒன்றிய அமைச்சர்) மருத்துவமனையிலேயே தங்கி, டில்லிக்கு – பா.ஜ.க.வுக்கு, கள நிலவரம்பற்றிக் கூறி, ஜெயலலிதா அவர்கள் மறைந்தவுடன், மோடி வந்து, உடலுக்கு மரியாதை, கட்சிக்காரர்களுக்கு ஆறுதல் சொல்லுவதுபோன்று, பலரது தலையில் ‘கை வைத்து’, ஆறுதல் கூறியதிலிருந்து, அக்கட்சி– அண்ணா தி.மு.க. – எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய வர்களுடைய கட்சி யாக இல்லாமல், டில்லியின் மத்தியஸ்தையே என்றும் கேட்டு, நடக்கும் கட்சியாக பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.

தி.மு.க. கூட்டணியை உடைக்கும் முயற்சி
வெற்றி பெறவில்லை!

கட்சியில் ‘பிளவு’, பிறகு ‘இணைப்பு’, பிறகு பற்பல அரசியல் நாடகங்கள், தங்கள் கையில் உள்ள திரிசூல மகிமை எல்லாம் இணைந்து, இன்று அக்கட்சியை ஒரு ‘டம்மி’ (Dummy) போல் ஆக்கி, வட மாநிலங்களில் கையாண்ட வித்தைகளையே இங்கும் கையாளலாம் என்று கனவு கண்டார்கள் – பா.ஜ.க.வும், அமித்ஷா போன்றவர்களும்!

மாற்றம் வரும்; தமிழ்நாட்டில் மாற்றம் வரும் என்று கூறிய பிரமதர் மோடி முதல், கடைசி பிரச்சாரகர் வரை போட்ட திட்டம் எதுவுமே அவர்களுக்குக் கைகூட வில்லை.

தி.மு.க. கூட்டணியை உடைக்கும் முயற்சியில் தோல்வி மட்டுமல்ல; அங்கே இருந்தவர்கள்கூட இப்போது, தி.மு.க.வில் இணைந்துள்ளனர்.

கடைசியாக ஒரே நம்பிக்கை டில்லிக்காரர்களுக்கு – புதுக்கட்சி ஆரம்பித்து, ‘நானே என் தலைமையில், ஆட்சி அமைப்பேன்’ என்று கட்டியம் கூறி, களத்தில் காட்சி கொடுக்கும் ஒரு நடிகரை, எப்படியாவது வளைத்துவிடலாம்; அதன்மூலம், அவரது ரசிகர் மன்றத்தினரின் வாக்குகளையும் வாரி விடலாம் என்ற முயற்சியில் நம்பிக்கை வைத்தனர்.

அதற்காக, இப்படியும் ஓர் அரசியல் கூட்டணி உருவாக்கமா? என்று நாகரிக அரசியலையே கண்டு பழக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் பலரும் முகம் சுளிக்கும் அளவில், ‘தினமலர்’ நாளேட்டிலேயே (அது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆதரவு – தி.மு.க. எதிர்ப்பு) வெளியிட்டுள்ள ஒரு செய்தி!

தரம் தாழ்ந்த கூட்டணி முயற்சி!

இறுதி ‘…….. கூறப்படுகிறது’ என்று முடிகிறது. அது உண்மையாக இருந்தால், அதைவிட தரம் தாழ்ந்த கூட்டணி அமைக்கும் முயற்சி அரசியலில் வேறு இருக்கவே முடியாது!

அந்த ஏட்டின் செய்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இதற்காக ஒரு நடிகை பரிந்துரைக்க கேட்டுக்கொள்ள மும்பை சென்றார்’’ என்றெல்லாம் செய்தி வந்ததே – பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக முன்னணிக்கோ பெருமை தரக்கூடியதா?

அதற்கு இன்றுவரை எந்தவித மறுப்பும் கூறாத நிலையும் தொடர்ந்தபோது, நடிகர் திடீர் அரசியல் பிரவேசக் கட்சியை, தங்கள் கூட்டணிக்கு இழுக்க, 90 தொகுதிகள் (234 இல்) இரண்டரை ஆண்டு முதலமைச்சர் பதவி என்றெல்லாம் பேரம் பேசப்பட்டது என்று அக்கட்சியின் பொறுப்பாளர் ஒருவராலேயே அம்பலப்படுத்தப்பட்டு விட்டது!

பெண்களை இழிவுபடுத்தும் அரசியல்வாதிகள்!

இறுதியாக, அந்த நடிகர், ‘‘என் தலைமையில்தான் ஆட்சி; யாருடனும் சேரமாட்டோம்’’ என்று கூறி, பா.ஜ.க. – அ.தி.மு.க. ஆசையை நிராசையாக்கி விட்டார்!

‘‘காக்கையின் வடையை எதிர்பார்த்த நரிகள் ஏமாந்த கதையாக’’ மாறி வருகின்றது!

அதோடு, தமிழ்நாட்டு அரசியல் தளத்தில், தேர்தல் களத்தில் – முன்பு எப்போதும் இல்லாத வகையில், மகளிர் மாண்பைக் குலைக்கும் வகையில், ஆபாச, அருவெறுக்கத்தக்க, அத்துமீறல் பேச்சுகள் அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியினர் பேசிய நிலையில், அத்தலைமை, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா?

அவர்களது வீட்டுப் பெண்கள்கூட அத்தகைய அசிங்கமான அவதூறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்களே!

தி.மு.க. கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது இயக்கத்தவரை, கூட்டணியினரையும் தாண்டி, தனது ஒப்பற்ற உழைப்பினாலும், உயரிய வரலாற்றுச் சாதனைகளாலும் தமிழ்நாட்டு மக்களின் – குறிப்பாக மகளிர், இளைஞர்கள் போன்ற பலதரப்பினரது இதயச் சிம்மாசனத்தில் அமர்ந்துவிட்டார் – புலம் பெயர்ந்து வாழும் மக்கள் உள்பட!

ஓயாது உழைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்
மீண்டும் ஆட்சி அமைவது உறுதி!

அவரே ஒருமுறை மனந்திறந்து கூறிய படி, அவரது ‘‘சக்திக்கு மீறி உழைக்கிறார்!’’ ஒற்றை என்ஜின் ஆட்சி, பல இரட்டை என்ஜின் ஆட்சிகளின் சாதனைகளை மிஞ்சியதாக – கல்வி, மருத்துவம், மகளிர் உரிமை, இளைஞர் நலன், விளையாட்டு, திறன் வளர்ச்சி போன்ற பல துறைகளில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கியுள்ள கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், பொருளாதார வளர்ச்சி 11.9 சதவிகித அளவிற்குத் தமிழ்நாட்டினை உயர்த்திய சாதனை வரலாறு காணாதது!

தி.மு.க. கூட்டணி என்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியான கொள்கைக் கூட்டணியை, என்.டி.ஏ. என்ற ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி யால் தோற்கடிக்க முடியாது; பிரதமர் மோடியும், அமித்ஷாக்களும், அவர்களது அடிமைகளும் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்து முயற்சித்தாலும் வெல்ல முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்ததால், கடைசி நேரத்தில் ஒரு முகபடாம், ஒப்பனை செய்ய முயற்சித்த னர் – ‘கோச்’ வண்டி குதிரையின் கூட்டு கிடைக்குமா? என்று எதிர்பார்த்து, ஏமாந்த நிலை எதைக் காட்டுகிறது? தி.மு.க. கூட்டணி வெற்றி பாதையில் செதுக்கப்பட்ட கல்வெட்டு என்பதைத்தானே!

‘ரேஸ் குதிரைகள் கூட்டணியை’  வெறும் ‘பொய்க்கால் குதிரை’, ‘ஜட்கா குதிரை’, ‘கோச் வண்டி அலங்கார குதிரை’கள் ஆகியவை அத்தனையும் சேர்ந்தாலும், தேர்தல் ரேசில் வெல்ல முடியாது என்ற புரிதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதைத்தான், கடந்த சில வார அரசியல் நடவடிக்கைகள் உலகுக்கு உணர்த்துகின்றன!

மிரட்டல், அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திடச்சித்தமுள்ள காரணத்தால், தமிழ்நாட்டை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் உள்ள கொள்கைக் கூட்டணியே வென்றெடுப்பது உறுதி! உறுதியிலும் உறுதி!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை   

19.3.2026  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *