| ஜ |
வுளி கொள்முதலை விடவும் அதிகமாக நிகழ்ந்தது புத்தி கொள்முதல், அனுபவக் கொள்முதல், அவமானங்களின் கொள்முதல்.
மும்பைக்கான முதல் பயணத்தில் எவ்வளவு மகிழ்ச்சியாக பயணம் செய்து போய் இறங்கினோமோ அதே அளவு அதிர்ச்சிகள் எங்களுக்கு காத்திருந்தன.
36 பேர்கள் கொண்ட ஒரு குழுவாக எங்களுக்குத் தெரிந்த சில வணிகர்கள் அப்போது தமிழ்நாட்டில் இயங்கி வந்தார்கள். அவர்களுடைய ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. அவர்களைத் தாண்டி யாரும் மும்பையில் கொள்முதல் செய்து விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள்.
அப்போது ‘மஹாராஜா’ நிறுவனங்களை அதிகமாக யாருக்கும் தெரியாது. மிக முக்கிய வணிகர்கள் எல்லாம் அங்கு கொள்முதல் செய்து கொண்டிருந்தார்கள். அந்த நிறுவனங்களுக்கு நாங்கள் போனால் முதலில் ஏற இறங்க பார்ப்பார்கள். பிறகு விசிட்டிங் கார்டு வாங்கிப் பார்ப்பார்கள். ‘மஹாராஜா’ என்ற பெயரைப் பார்த்ததுமே உள்ளே எங்களை விடாமல் வாசலோடு திருப்பி அனுப்பி விடுவார்கள்.
சென்ற இடங்களில் எல்லாம் இந்த அவமானம் தொடர்ந்தது. அந்த அவமானம் தொடரத் தொடர, ஜெயித்துக் காட்ட வேண்டும் என்கிற வெறி வளர்ந்தது.
அப்போதெல்லாம் ஜவுளித்துறைக்கு இப்போது இருப்பது போல் ஒருங்கிணைந்த தொழிற்பேட்டைகள் கிடையாது. இப்போதும் மும்பைக்கு சென்றால் ஜவுளி உற்பத்தியாளர்களின் தொழிற்பேட்டைகள் வந்துவிட்டன. ஒரே இடத்தில் 500 உற்பத்தியாளர்கள் தங்கள் கடைகளை போட்டு இருப்பார்கள். ஜவுளி ரகங்களை பார்த்து தேர்ந்தெடுத்து ஆர்டர் கொடுத்து விட்டு வந்து விடலாம். அப்போதெல்லாம் மும்பை பகுதியில் மூலை முடுக்குகளை தேடிப் போக வேண்டும்.
மிகவும் பின் தங்கிய பகுதிகள் அழுக்கும் மாசும் கால் வைக்க முடியாத அளவு அசிங்கங்களும் நிரம்பியவையாக காணப்படும்.
அங்கெல்லாம் ஒரு சராசரி மனிதர் உள்ளே நுழைய முடியும் என்பதே பெரிய சவால்.
ஏனென்றால், 1980-களின் தொடக்கத்தில் நடந்த மிகப்பெரிய ஜவுளி ஆலை வேலை நிறுத்தத்தில் இருந்து மும்பை அப்போதுதான் மெல்ல மீண்டு கொண்டு இருந்தது. 1982 ஜனவரி 18 ஆம் நாள் ஏறக்குறைய இரண்டரை லட்சம் ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் கடும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். 1983 ஜூலை 18-ஆம் தேதி ஏறக்குறைய 18 மாதங்களுக்கு இந்த வேலை நிறுத்தம் நீடித்தது. 65 ஆலைகளில் இருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றார்கள்.
எனவே ஜவுளி உற்பத்தியாளர்களும் அந்த காலகட்டங்களில் ஓரளவு பின்தங்கிய நிலையில் இருந்தார்கள்.
பருத்தி விளைச்சலுக்கு உகந்த பருவ நிலை இருந்ததால் ஒரு காலத்தில் 13-க்கும் அதிகமான ஜவுளி ஆலைகள் அங்கே இருந்தன.
அதன் பிறகு உற்பத்தி நிலை குறைந்தாலும் வணிகத்துக்கு மிக முக்கியமான களமாக மும்பை மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருந்தது. இந்த காலக்கட்டத்தில் ‘எங்களை நிராகரித்தவர்கள் முன்னால் வென்று காட்ட வேண்டும்’ என்கிற வேகம் எங்களுக்கு வளர்ந்தது. அப்போதுதான் திரு. கேத்தன் என்ற ஒரு முகவர் எங்களுக்கு கிடைத்தார். அவரும் எங்களைப் போலவே இளைஞர். அவருக்கும் எனக்கும் இருந்த ஒற்றுமை என்னவென்றால் இருவருக்குமே அனுபவங்கள் இல்லை. ஆனால் அளவு கடந்த ஆர்வம் இருந்தது.
மும்பையில் கொள்முதல் பயணங்கள் தொடர்ந்தன. ஒவ்வொரு பயணத்திலும் புதிய புதிய போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இதற்கிடையில் 1989இல் என்னுடைய திருமணமும் நடைபெற்றது. என் முயற்சிகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் ஒரு முதுகெலும்பாக வந்து வாய்த்தவர் தான் என்னுடைய மனைவி பாத்திமா பேகம். குடும்பத்தில் மட்டுமில்லாமல், தொழிலிலும் பல ஆலோசனைகளை தருவார். பல ஆண்டுகளாக ஒரே மாதிரி செய்து கொண்டிருக்கும் வணிகத்தில் புதிய கோணத்தில் – புதிய பார்வையில் அவர் தரக்கூடிய யோசனைகள் எனக்கு பெரிதும் பயன்பட்டன. அவருடைய இத்தகைய பங்களிப்புகள் மட்டும் இல்லாமல் எனக்காக அவர் தொடர்ந்து மேற்கொள்ளும் பிரார்த்தனைகள் என்னுடைய அனைத்து விதமான வளர்ச்சிகளுக்கும் அடித்தளம்.
இளைஞனாய், கணவனாய் இருந்த எனக்கு தந்தை என்கிற அந்தஸ்தை முதன் முதலில் பெற்றுக் கொடுத்தார் என் மூத்த மகன் அர்ஷத் அஹமத். ‘தனக்கு முதல் மகன் பிறந்தநாள் தான் திரைப்படத்தில் தான் முதல் பாடல் எழுதிய நாள்’ என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் குறிப்பிடுவார். தொழிலில் பல போராட்டங்களுக்கு பின்னர் மெல்ல மெல்ல வெற்றியை நான் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் என் முதல் மகன் பிறந்தார்.
எதிர்காலத்தில் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் அவர் பெயர் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என விரும்பினேன். அதற்கு முதலடியாக வருகைப்பதிவேட்டிலும் அவர் பெயர் முதலாவதாக வரவேண்டும் என்பதால் அகரத்தில் தொடங்கும் விதமாக அவருக்கு பெயர் வைத்தேன். மூன்றாம் வகுப்பில் அவரை ஏற்காட்டில் மான் போர்ட் பள்ளியில் சேர்த்தேன். எங்கள் குடும்பத்திலேயே உறைவிடப் பள்ளியில் போய் தங்கி படித்த முதல் குழந்தை அவர்தான். ஆனால் அவரை பிரிந்து இருக்க முடியாமல் என்னுடைய தாய் தவித்துப் போனார். அதனால் அவரை மீண்டும் அழைத்து வந்து தஞ்சையிலேயே பள்ளியில் சேர்த்தேன்.
எட்டாம் வகுப்பில் அவர் பள்ளி படிப்பில் தோற்றார் என்றதும் அவருக்கு சூழல் மாற்றம் முதல் தேவை என்பதை உணர்ந்தேன். அதே பள்ளியில் அதே வகுப்பில் மீண்டும் படித்தால் தன்னுடைய முன்னாள் வகுப்பு தோழர்களை பார்த்து அவருக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடக்கூடாது என்று யோசித்தேன். அதன் விளைவாக எட்டாம் வகுப்பில் சென்னையில் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் அவரை சேர்த்தேன்.
இந்த மாற்றம் அவருடைய மன மாற்றத்திற்கும், திறமை வெளிப்படுவதற்கும் வாய்ப்பு தந்தது. எண்பது சதவிகித மதிப்பெண்களோடு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் 11-12 வகுப்புகளுக்கு மீண்டும் ஏற்காடு மான்போர்ட் பள்ளியில் சேர்த்தோம்.12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சேலம் மாவட்டத்திலேயே முதல் இடம் பிடித்தார்.
குழந்தை வளர்ப்பின் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப உடனடி முடிவுகள் எடுக்கவும் அவர் வளர்ந்து வந்த வயதில் நான் கற்றுக் கொண்டேன்.
இதற்கிடையே ஆடைகள் கொள்முதலுக்காக மும்பை பயணங்கள் தொடர்ந்தன. பயணங்கள் முடிவதில்லை என்பது மட்டுமல்ல, பொறுமையுடன் உறுதியுடன் உழைத்தால் அவமானங்கள் தொடர்வதில்லை என்பதையும் நான் அறிந்து கொண்ட காலகட்டம் அது….தொடர் முயற்சி, விடாத உழைப்பு கொள்முதலிலும் பண விஷயங்களிலும் நாங்கள் காட்டிய நேர்த்தி, ஒழுக்கம் ஆகியவற்றின் விளைவாக ‘மஹாராஜா’ செயல்பாடுகள் பற்றிய மும்பை வணிகர்களின் மதிப்பீடுகள் மாறத் தொடங்கின. எங்கெல்லாம் உள்ளே நுழைய எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோ அங்கெல்லாம் ராஜமரியாதையுடன் உள்ளே நுழையும் விதமாக காலம் மாறியது.
எங்கெல்லாம் நாங்கள் ஒதுக்கப்பட்டோமோ, எங்கெல்லாம் நாங்கள் அவமானப்பட்டோமோ, எங்கெல்லாம் நாங்கள் தடுக்கப்பட்டோமோ அங்கெல்லாம் எங்கள் வருகையை எதிர்பார்த்து வாசல்கள் திறந்தன. வணிகத்தில் வெற்றிகரமான புதிய உறவுகள் பிறந்தன.
அவமானங்கள் ஏற்படும் போது அதுவே முடிந்த முடிவான விதி என்று கருதாமல் “தடைகள் தற்காலிகமானவை” என்பதை உணர்ந்து நம் மேல் நம்பிக்கை வைத்து உற்சாகமாக உழைக்கும் போது நிரந்தரமான வெற்றிகள் நிகழ்கின்றன.
