டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு இந்திய கம்யூ.க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* விமானங்களில் 60% இருக்கைகளுக்கு இருக்கைத் தேர்வு கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஒன்றிய அரசு உத்தரவு. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மூலம் அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. நியாயமான அணுகலை உறுதி செய்வதற்காக, எந்த ஒரு விமானத்திலும் குறைந்தபட்சம் 60% இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும். ஒரே பிஎன்ஆர்-இல் பயணிக்கும் பயணிகள் அருகருகே உள்ள இருக்கையில் அமர வைக்க முன்னுரிமை தரப்பட வேண்டும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘அரசியலமைப்பின் கூட்டாட்சி தன்மையை மீறுகிறது’: இந்தியாவின் உயர்கல்வி வரைபடத்தையே மாற்றியமைக்கக்கூடிய விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் (VBSA) மசோதா குறித்து நாடாளுமன்றக் குழுவில் காரசார விவாதம்.
* திராவிட மாடல் அரசின் காலை உணவுத் திட்டம் இந்தியா முழுக்க விரிவுபடுத்த பரிந்துரை: PM-POSHAN திட்டத்தின் கீழ் காலை உணவையும் வழங்குங்கள்; 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவு படுத்துங்கள்: நாடாளுமன்றக் குழு பரிந்துரை. மதிய உணவுத் திட்டத்தை, காலப்போக்கில் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு மேலும் பரிந்துரைத்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக வி.பி.ஜி.ராம்-ஜி திட்டத்தைக் கொண்டு வருவதை ஜார்கண்ட் சட்டமன்றம் எதிர்க்கிறது; இது தொடர்பான தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பு. இந்தச் சட்டம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு பொருத்தமானதல்ல என்றும், அம்மாநிலத்தின் குறிப்பிட்ட கிராமப்புறத் தேவைகளுக்கு இணக்கமானதாக இல்லை என்றும் இத்தீர்மானத்தை முன்மொழிந்த தீபிகா பாண்டே சிங், வாதிட்டார்.
தி இந்து:
* யு.ஜி.சி. மற்றும் ஏஅய்சிடிஇ-ல் உள்ள காலிப் பணியிட சூழல் ‘மிகவும் கவலைக்கிடமானது’ என நாடாளுமன்றக் குழு கருத்து. யு.ஜி.சி.-இல் அனுமதிக்கப்பட்ட 763 கற்பித்தல் சாராத பணியிடங்களில் 516 இடங்கள் காலியாக உள்ளன. ஏ.அய்.சி.டி.இ.-யை பொறுத்தவரை, “கடந்த ஆறு ஆண்டுகளில் வெறும் 20 பணியிடங்கள் மட்டுமே நிரந்தர அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், இடைநிலை மற்றும் உயர்நிலை நிர்வாகப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 63.6% காலியாக உள்ளது.
* ஒன்றிய அரசுத் திட்டங்களில் ஓபிசி பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீடு கோரும் பாஜக உறுப்பினர் பீம் சிங்: ஒன்றிய அரசுத் திட்டங்களில் ‘பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு’ (OBC) வழங்கப்படும் 27% இடஒதுக்கீட்டிற்குள், ‘உள் ஒதுக்கீடு’ (SUB-CATEGORISATION) முறையை அமல்படுத்த வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கையாகும். இது தொடர்பாக ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி குழுவின் அறிக்கை, ஏற்கனவே 2023-ஆம் ஆண்டிலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தி டெலிகிராப்:
* 2018 முதல் 63 ‘பக்கவாட்டு வழி நியமனங்கள்’ (LATERAL ENTRY) மேற்கொள்ளப்பட்டதாக ஒன்றிய அரசு மக்களவையில் தகவல்: ஒன்றிய அரசின் பல்வேறு உயர் பதவிகளுக்கு தனியார் துறை, கல்வியாளர்கள், மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து தகுதி பெற்றவர்களை சிவில் சர்வீஸ் தேர்வு இல்லாமலேயே நேரடியாக நியமிக்கும் முறை (LATERAL ENTRY) என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 63 பேர் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்தியாவில் 67% பட்டதாரிகளுக்கு வேலை இல்லை: பொருளாதார ஆய்வில் அதிர்ச்சித் தகவல்: கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 லட்சம் இளைஞர்கள் பட்டதாரிகளாக உருவெடுத்தனர். ஆனால், அவர்களில் சுமார் 28 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது.
. குடந்தை கருணா
