
முனைவர்
சுந்தர் கணேசன்
தொல்லியல் ஆய்வாளரான ‘சர் ஜான் மார்ஷல்’, இலண்டனில் உள்ள கர்சன் பார்க் பகுதியின் எவர்டன் ஹவுஸில் 1876 மார்ச் 19 அன்று பிறந்தார். டல்விச் கல்லூரியிலும் கிங்ஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகச் சேர்ந்தார் (1894). செவ்வியல் இலக்கியமும் தொல்லியலும் (1898-1900) பயின்றார். பிறகு, ப்ரெண்டர்காஸ்ட் கிரேக்க ஆய்வாளராக (Prendergast Greek fellow-1900), க்ரேவன் தொல்லியல் மாணவராகத் (Craven archaeology student-1901) திகழ்ந்தார். 1898 முதல் 1901 வரை ஏதென்ஸில் உள்ள பிரிட்டிஷ் கல்வியியல் கழகத்தில் இருந்தார். அதன்மூலம் கிரீட், கிரீஸ், தெற்கு துருக்கி முதலியவற்றில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளிலும் ஆய்வுகளிலும் பங்கேற்பும் பங்களிப்பும் செய்தார், மினோவன் (Minoan) நாகரிகத்தை வெளிக்கொணர்ந்த ஆர்தர் ஈவான்சுவிடம் (Arthur Evans) தொல்லியல் சார்ந்த பயிற்சிபெற்றார். கவர்னர் கர்சன் முன்னெடுப்பால் 1902ஆம் ஆண்டில், அவர் இந்தியாவில் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்பாக, அறுவை சிகிச்சை-பல் மருத்துவரான சர் ஹென்றி பெல் லாங்வார்ஸ்டின் (Sir Henry Bell Longhurst) மகள் ஃப்ளோரன்ஸை (Florence). மணந்தார். அவர் 1902 பிப்ரவரி 22 அன்று தனது பணியில் சேர்ந்தார். இந்தியத் துணைக்கண்டம் குறித்து எதுவுமே தெரியாமல் இந்தியாவிற்கு வரும்போது அவருக்கு வயது 26. தனது வாழ்நாளில் பெரும்பகுதியை இந்தியத் துணைக்கண்டத் தொல்லியல் வளர்ச்சிக்கு அர்ப்பணித்தார்.

சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பழங்காலக் கட்டமைப்புகள், தொல்பொருள்கள். சிற்பங்கள். ஓவியங்கள் முதலியவை கவனிப் பாரற்றுக் கிடந்த காலகட்டத்தில் மார்ஷல் இந்தியாவிற்கு வந்தார். அவர் வந்தபின்பு, முதலில் பண்டைய தொல்லியல் தளங்களைப் பாதுகாத்தல், அவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்தல், தேவைப்பட்டால் சீரமைத்தல் என்ற செயல்பாடுகளை மேற்கொண்டார். இத்துடன் அவர், இந்தியத் துணைக்கண்டத்தில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகளை மேற்பார்வையிட்டார். மேலும் தொல்பொருள்களைப் பாதுகாத்தல், சீரமைத்தல் போன்ற செயல்பாடுகளையும் மேற்கொண்டார். மேலும், ஒவ்வொரு மாகாணத்திலும் தேவைப்படும் சிறப்புத் தேவைகளைக் கண்டறிந்து, அவற்றிற்கு உதவியும், ஆலோசனைகளும் வழங்கினார். நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல், அருங்காட்சியத்தை உருவாக்குதல் முதலியவற்றில் சிறப்புக்கவனம் செலுத்தினார்.
மத்திய இந்தியாவில் உள்ள சாஞ்சி பவுத்த தலத்தை சீரமைத்தார். அதன்வழி புதிய ஆராய்ச்சி களுக்கு வழியமைத்தார். 1913இல் தட்சசீலத்தில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்ட அவர், 1918இல் அங்கே கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருள்களைக் கொண்டு ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கினார். அதன் ஆராய்ச்சிகள் 1951இல் வெளிவந்தன. அவர் மேற்கொண்ட ஒட்டுமொத்த செயல்பாடுகளில் தட்சசீலம், சிந்துவெளி ஆகிய இரண்டு அகழாய்வுகள் சிறந்த பங்களிப்புகளாகும். முகலாய காலத்தைச் சேர்ந்த கல்லறைகள், அரண்மனைகள், அவற்றின் இன்றியமையாத அம்சமாக உருவாக்கப்பட்ட தோட்டங்கள் முதலியவற்றை மீட்டெடுத்ததில் அவர் பங்கு முக்கியமானது. அவர் மேற்கொண்ட பணிகள் ஒரு முன்மாதிரிச் செயல்பாடாக, பின்னால் வந்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர் பல தொல்லியலாளர்களுக்குப் பயிற்சியும் அளித்தார்.
ஜான் மார்ஷல் இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைவராக இருந்த காலகட்டத்தில் (1902-1928) சிந்துவெளிப் பண்பாடு குறித்து உலகிற்கு அறிவிக்கப்பட்டது. தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள ஹரப்பா பகுதியில் தயாராம் சாஹ்னி (Dayaram Sahni) 1921-1922ஆம் ஆண்டில் அகழாய்வு மேற்கொண்டார். இக்குறிப்பிட்ட ஆண்டில் ராக்கல்தாஸ் பானர்ஜி (RahulDos Banerji), மொகஞ்சதாரோ பகுதியில் அகழாய்வு மேற்கொண்டார். இந்த அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருள்கள், முத்திரைகள் இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமையகமாக இருந்த சிம்லாவுக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இரு இடங்களுக்கும் இடையிலான தூரம் 700 கி.மீ. ஆனால் இந்த இரண்டு இடங்களிலும் கிடைத்த முத்திரைகளிலும் தொல்லியல் பொருள்களிலும் மிகத் துல்லியமான ஒற்றுமைகள் காணப்பட்டன. இந்த ஒற்றுமைகளை ஆராய்ந்து உலகிற்கு அறிவித்தவர் ஜான் மார்ஷல்,
1924 செப்டம்பர் மாதம், ‘தி இல்லுஸ்ட்ரேடட் லண்டன் நியூஸ்’ (The Illustrated London News) என்ற இதழில், ஜான் மார்ஷல் சிந்துவெளிப் பண்பாட்டை உலகிற்கு அறிவித்தார். மார்ஷலின் அறிவிப்பு இரண்டு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலில் வரலாற்றெழுத்தியலில் ஒரு முக்கியமான திருப்பத்தைக் கொண்டுவந்தது. இரண்டாவது, இருவேறு இடங்களில் கிடைத்த தொல்பொருள்களை ஒரு சேர ஒப்பிட்டுப் பார்த்தல் என்ற முறையியலைக் கொண்டுவந்து, அதன்வழி ஒரு முக்கியமான கருத்தியல் வெளி யிட்டது. சிந்துவெளிப் பண்பாடு முதன்முதலாக அறிவிக்கப்பட்ட போதே அதன் தோற்றத்தோடும், தொன்மையோடும் தொடர்புடையவர்கள் ‘திராவிடர்கள்’ என்று கூறப்பட்டது. அதிலும் முதன்மையானவர் ஜான் மார்ஷல். அவரைத் தொடர்ந்து சுனிதி குமார் சாட்டர்ஜி, பியெரோ மெரிஜி, ஹென்றி ஹீராஸ், யூதி கொநொரொசோவ், கமில் சுவலபில், அஸ்கோ பர்போலா, அய்ராவதம் மகாதேவன், ஃபிரான்க் சவுத்வொர்த், டேவிட் மெக்கால்பின், வால்ட்டர் ஃபேர்சர்விஸ் எனப்பல அறிஞர்கள் திராவிடக் கருதுகோளை முன்னெடுத்துள்ளனர். அவ்வகையில் சிந்துவெளியில் திராவிடக் கருதுகோளுக்கு வித்திட்டவர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல்.
மார்ஷல் தனது தொடக்கக் காலத்திலிருந்தே தொடர்ந்து முக்கியமான தொல்லியல் வெளியீடு களை வெளிக்கொண்டு வருவதில் ஆர்வத்துடன் செயல்பட்டார். தொல்லியல் ஆண்டறிக்கைகளையும் (1903-1904 முதல் 1920-1921 வரை) எழுதியுள்ளார்.
1902-1903 முதல் 1915-1916 வரை, 1923-1924, 1926-1927 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் கழகத்தின் ஆண்டறிக்கைகளுக்கு அறிமுகம், தொகுப்புப் பணிகளையும் செய்துள்ளார்.
இத்துடன் இந்தியத் தொல்லியல் கழகத்தின் ஆண்டறிக்கைகளில் 7 ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘தி இல்லுஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ்’ (The Illustrated London News) இதழில் 5 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். வேறுசில இதழ்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். இத்துடன் தான் மேற்கொண்ட அகழாய்வுகளுக்கான அறிக்கைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
தொல்லியல் சின்னங்களான கோயில்கள், அரண்மனைகள், கோட்டைகள், கட்டடங்கள், சிலைகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கவும் புனரமைக்கவும் 1923ஆம் ஆண்டு சர் ஜான் எழுதி வெளியிட்ட CONSERVATION MANUAL: A handbook for the use of Archeological officers and others entrusted with the care of ancient monuments என்கிற கையேடுதான் இன்றுவரையும் நடைமுறையில் இருந்துவருகிறது. தொல்லியல் அலுவலர்கள் முதல் ஆர்வலர்கள் வரை தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க விழையும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. ஜான் மார்ஷல் செய்த குறிப்பிடத்தக்க பணிகளில் இந்தச் சிறு கையேட்டின் பங்கு அதிமுக்கியமானது.
ஜான் மார்ஷல் தனது காலத்தில் எடுத்த புகைப்படங்களில் பெரும்பாலானவை தர்காம் (Durham) பல்கலைக்கழகத்தில் உள்ளன. அப்புகைப்படங்களின் வழியாக, முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது அவற்றின் நிலை, பாதுகாக்கப்பட்டு சீரமைக்கப்பட்ட பிறகான நிலை குறித்து நுணுக்கமான செய்திகளை வழங்குகிறது.
ஜான் மார்ஷல் 19இல் ‘கம்பெனியன் ஆஃப் தி ஆர்டர் ஆப் தி இந்தியன் எம்பயர்’ (Companion of the Order of the Indien Enre) ஆக நியமிக்கப்பட்டார். 1914இல் Knight பட்டம் பெற்றார். 1921இல் கொல்கத்தா பல்கலைக்கழகம் கவுரவ முனைவர் பட்டம் வழங்கியது. 1927இல் ஆண்டு மதிப்புறு விரிவுரையாளராக கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியில் நியமிக்கப்பட்டார். 1936இல் ஃபெல்லோ ஆஃப் தி பிரிட்டிஷ் அகாடமி (Fellow of the British Academy) ஆக நியமிக்கப்பட்டார். இவை தவிர இன்னும் பல விருதுகளையும், பட்டங்களையும் தனது ஆய்வுப்புலமைக்காகப் பெற்றார். 1958 ஆகஸ்ட் 17 அன்று அவோண்டேலில் உள்ள தனது இல்லத்தில் இறந்தார்.
சர் ஜான் மார்ஷல் அவர்களின் பணிகளையும் சேவைகளையும் நினைவுகூரும் விதமாக, எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அவருக்குச் சிலை அமைக்கப்படும் என 2025 ஜனவரி மாதம் நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். அதன்படி அரசு முதன்மைச் செயலரும் தொல்லியல் துறை ஆணையருமான திரு. த. உதயசந்திரன் அய்.ஏ.எஸ். உள்ளிட்டோர் மேற்பார்வையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட சிலையை, ஜான் மார்ஷலின் 119ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மார்ச் 19 அன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.
துணை நூற்பட்டியல்
- Chakrabarti, Dilip K. A History of Indian Archaeology from the Beginning to 1947. New Delhi: Munshiram Manoharlal, 1988.
- Guha, Sudeshna, ed. The Marshall Albums: Photography and Archaeology. Ahmedabad: Mapin Publishing, 2010.
- Lahiri, Nayanjou. “John Marshall’s Appointment as Director-General of the Archaeological Survey of India: A Survey of the Papers Pertaining to His Appointment” South Asian Studies 13 (1997): 127-139.
- Lahiri, Nayanot. “Coming to Grips with the Indian Past: John Marshall’s Early Years as Lord Curzon’s Director-General of Archaeology in India, Part I. “South Asian Studies 14 (1998): 1-23.
- Wheeler, Mortimer. “Marshall, Sir John Hubert (1876-1958). “Oxford Dictionary of National Biography, 2004.
முனைவர் சுந்தர் கணேசன் ஓர் ஆவணக் காப்பாளர். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநரான இவர், தமிழ்நாடு அரசு உருவாக்கிய மாநில நூலகக் குழுவின் துணைத்தலைவராகப் பணியாற்றி வருகிறார். ‘The Tall Man: Biju Patnaik’ என்ற நூலை எழுதியுள்ளார். புகழ்பெற்ற மெக்காலே அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பல்வேறு கட்டுரைகளை முன்னணி இதழ்களில் வெளியிட்டுள்ளார். இவரின் முனைவர் பட்ட ஆராய்ச்சியானது காலனிய காலக் கல்வி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. [email protected].
– நன்றி: ‘தொல் தடம்’,
செப்டம்பர்-டிசம்பர் 2025
வெளியீடு: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
