சென்னை, மார்ச் 19 தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நீடிக்கும். இன்று முதல் 24ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெயில் மற்றும் வெப்பம் நீடித்து வருகிறது. இருப்பினும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருந்தாலும் ஒருசில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்துள்ளது. இன்றும் அதேநிலை நீடிக்கும்.
இதற்கிடையே, மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கருநாடகா வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் தமிழ்நாட்டில் வறண்ட வானிலை காணப்படும். அதன் தொடர்ச்சியாக 24ஆம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரியிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும். மேலும், 20ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் படிப்படியாக குறையவும் வாய்ப்புள்ளது.
ஆசிரியர் பயிற்சி தேர்வு
தனித்தேர்வர்கள் 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தேர்வுத்துறை அறிவிப்பு
சென்னை, மார்ச் 19 ஆசிரியர் பயிற்சி படித்து தோல்வியடைந்த மாணவ, மாணவியருக்காக மே மாதம் நடத்தப்பட உள்ள தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், 26ஆம் தேதி முதல் விண்ணப் பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்று நிறுவனம் மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்து தேர்வு எழுதி தோல்வியடைந்த மாணவ, மாணவியர்கள் தற்போது மீண்டும் தேர்வு எழுத தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மே மற்றும் ஜூன் மாதங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் தோல்வியடைந்த மாணவ, மாணவியர் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.
www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அந்த விண்ணப்பங்களை நிறைவு செய்து, ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றுகளின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து, அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத உள்ள ஒவ்ெவாரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண் சான்று (முதலாம்ஆண்டு) ரூ.100, மதிப்பெண் சான்று (இரண்டாம் ஆண்டு ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, இணைய வழிப் பதிவுக் கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும்).
மேற்கண்ட தேர்வு கட்டணம் மற்றும் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறும் மாணவ, மாணவியர் சிறப்பு அனுமதி திட்டத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி மற்றும் 7ஆம் தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
