‘ஈரான் போரும், பிரதமர் மோடியின் தடுமாற்றமும்!’

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கட்டுரை

பேராசிரியர்
மு.நாகநாதன்
எம்.ஏ.,எம்.எல்.,பிஎச்.டி.,டி.லிட்.

தற்போது ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்த போரினால் உலகப் பொரு ளாதாரத்தில் தொடர் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. எப்போது போர் முடியும்? அமைதி திரும்பும் என்று கவலையோடு இந்தியாவில் மக்கள் உள்ளனர்.

இப்போரினால்; இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் பற்றாக்குறையும், எரிவாயு உருளைகள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப் ஏற்ெகனவே இந்திய அரசிற்குப் பல கட்டளைகளை இட்டு வருகிறார். ‘‘இரஷ்யாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை வாங்காதே’’ என்றார். இந்தியாவும் வாங்குவதைக் குறைத்தது. இப்போர் முடிவுறாத சூழலில் ‘‘வேண்டுமென்றால் இரஷ்யாவிடமிருந்து ஒரு மாதத்திற்கு மட்டும் கச்சா எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள்’’ என்று ஆணையிடுகிறார். டிரம்பின் கட்டளையை இந்தியா ஏற்றதனால் ‘இனிமேல் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு இரஷ்யா அளிக்காது’ என்றும் ‘சந்தை விலையில்தான் இந்தியா வாங்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

சரியும் இந்திய பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம் ஏற்ெகனவே சரிந்து வருகிறது. ஏற்றத்தாழ்வுகள், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோன்று பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு  இந்தியாவின் அனைத்து உற்பத்தித் துறைகளையும் தாக்கி வருகிறது. மூலதனச் சந்தையான பங்குச்சந்தையில் ஏற்ெகனவே ரூபாய் பத்து இலட்சம் கோடி அளவிற்கு முதலீட்டாளர்களுக்குக் கடந்த 15 நாட்களில்  இழப்பைத் தந்துள்ளது. இதைப் பற்றி எல்லாம் பிரதமர் நரேந்திரர் கவலை கொள்ளாமல் தேர்தல் பரப்புரையில் எதிர்கட்சிகள் மீது பல பொய் குண்டுகளை வீசி வருகிறார்.

நோபல் பரிசுப் பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிஷ், ஆய்வாளர் லிண்டா ஜே.பிலிம்சு ஆகியோர் இணைந்து 2003இல் அமெரிக்கா ஈராக் மீது நடத்திய போரின் ஓராண்டுச் செலவைக் கணக்கிட்டு ‘The Three Trillion Dollars War’  என்ற நூலை எழுதினர். அன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் அமெரிக்கா ஒரே ஆண்டில் 150 இலட்சம் கோடியை இப்போருக்காகச் செலவிட்டது. அந்நூலில், “அமெரிக்காவின் உயர் அதிகார நிலையில்  இருப்பவர்கள் அளித்த தவறான தகவல்களின் அடிப்படையில் இந்தப் போர் தொடுக்கப்பட்டது. அய்க்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு அவையின் ஒப்புதலைப் பெறாமல், பன்னாட்டுச் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்டது இப்போராகும். பள்ளி இறுதித் தேர்வு எழுதக்கூடிய நிலையில் உள்ள 18 வயதான இளைஞர்கள்  இப்போரில் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஹாலிபர்ட்டன், பிளாக் வாட்டர் செக்யூரிட்டி  (Halliburtonand  Black Water Security) என்ற இரண்டு தனியார் ஒப்பந்தக்காரர்கள் அதிகளவில் போர்ச் செலவை உயர்த்தி  இப்போரின் பயன்களைப் பெற்றுள்ளார்கள். நாற்பதாயிரம் அடி உயரத்தில் இருந்து மக்கள் மீது விமானங்கள் வழியாக எறிகுண்டுகள் வீசப்பட்டன. உலகளவில் இராணுவச் செலவிற்காகச் செய்யப்படுகின்ற செலவில் 47 விழுக்காட்டினை அமெரிக்கா மட்டுமே செய்தது” என்று இந்த அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அணி சேரா நாடுகளின் கொள்கை

இப்போரின்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அமெரிக்கா சென்றிருந்தபோது அன்றைய குடியரசுத் தலைவர் புஷ், இந்தியப் படைவீரர்களை அமெரிக்காவிற்கு ஆதரவாகப் போரிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் வாஜ்பாய் நேருக்கு நேரே ‘இந்தப் போரில் இந்தியா தலையிடாது’ என்று பதிலடி கொடுத்தார். இப்போரின் போது நேரு கடைப்பிடித்த அணி சேரா நாடுகளின் கொள்கையை ஏற்றுக்கொண்டு வாஜ்பாய் செயல்பட்டார்.

மத்திய தரைக்கடல் நாடுகளில் போர் என்பது புதிதல்ல. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சுயநலத்திற்காக, வணிகநோக்கிற்காக இப்பகுதிகளில் தனது இராணுவத்தைக் குவித்து வைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தித்தான், இஸ்ரேலுடன் இணைந்து மற்ற நாடுகளை இராணுவரீதியாக மிரட்டித் தனக்கு ஆதரவாகச் செயல்பட வைத்தது. இதன் காரணமாகத்தான் தற்போது ஈரான் மத்திய தரைக்கடல் நாடுகளின் கடல் எல்லைகளில் மீதுள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீதும், எண்ணெய் கிடங்குகள் மீதும் தனது வான்வழித் தாக்குதலை நடத்துகிறது.

காசா போரில் பலி 75 ஆயிரம்

கடந்த ஆண்டுகளில் இஸ்ரேல் – காசா போரில் 75 ஆயிரம் பொதுமக்கள் இறந்துவிட்டனர். அதில் பெரும்பான்மையினர் பெண்களும், குழந்தைகளும், நோயுற்றவர்களும் ஆவர். இப்போரினால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி அய்க்கிய நாடுகள் மன்றத்தின்  கண்ணிவெடி நடவடிக்கை ஆய்வுக்குழு (The UN Mine Action Service (UNMAS)), மத்திய கிழக்கு ஆசியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பால் பெரும் சீரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன என்பதைக் குறிப்பிட்டு, 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் 25,000 டன்களுக்கு அதிகமான வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது இரு அணுக்குண்டு வெடிப்புகளுக்குச் சமம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா, ஜப்பான் நாட்டு ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில் 15000 டன் அளவில் வீசப்பட்ட அணுக்குண்டுகளைவிட இந்த வெடிப்புகளின் அளவு மிக அதிகம் என்று மானுட உரிமைப் பாதுகாப்பு மய்யம் (Euro-Med Human Rights Monitor) குறிப்பிட்டுள்ளது.

போர் என்பது ஆண்களையும், பெண்களையும் கொன்று குவிப்பதாகும். அவர்களை முடமாக்கிச் செயலிழக்கச் செய்யும் கொடுஞ்செயலாகும். இதற்கான செலவுகள் துப்பாக்கியின் கடைசிக் குண்டு வெடித்த பிறகும் தொடர்ந்துகொண்டே இருக்கும். (War is about men and women brutally killing and maiming other men and women. The costs live on long after the last shot has been fired – Three Trillion Dollors War: The True Cost of the Iraq Conflict, Joseph Stiglitz and Linda Bilmes, 2008, Penguin Publications, P. 206)  என்று இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்ட கருத்தை இன்று ஈரான், அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் போர் உண்மையாக்கிவிட்டதல்லவா?

மரண ஓலங்களும், காயங்களும்

கடந்த காலத்தில் காசா போரின்போது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து செய்த தாக்குதல்களால், வன்கொடுமைகளால் ஏற்பட்ட மரண ஓலங்களும், காயங்களும் இன்னும் ஆறாத சூழ்நிலையில் மீண்டும் ஓர் போரை நடத்தும் அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் ஓர் இரக்கமற்றவனா? என்று உலக மக்கள் எண்ணுகின்றனர். வட அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகள் உட்பட பலநாடுகளில் மக்கள் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருகின்றனர்.

இச்சூழலில், நேரு காலத்தில் பின்பற்றப்பட்ட வெளியுறவுக் கொள்கைகள் பற்றி இன்றைய பிரதமரும் அவருக்குத் துணை நிற்கும் அதிகார எடுபிடிகளும் உணர்ந்துள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது.

1947இல் விடுதலை பெற்ற இந்தியா பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சந்தித்த போதிலும், வெளிநாட்டுக் கொள்கைகளில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு அடிபணியாத போக்கினையே பின் பற்றியது. இதற்கு முதன்மையான காரணமாகத் திகழ்ந்தவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.

லண்டன் ஆய்வாளரின் கட்டுரை

வியட்நாம் விடுதலை இயக்கத்திற்கும், கியூபா விடுதலை இயக்கத்திற்கும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் நேரு தனது ஆதரவினை அளித்தார். ஆதிக்க நாடுகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியவில்லை. சான்றாக, 1956இல்  எகிப்து நாடு  சூயஸ் கால்வாயை நாட்டுடைமையாக்கி தனது முழு அரசுரிமைக் கட்டுப்பாட்டிற்குள் அதிபர் நாசர் கொண்டு வந்தார். இதை இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துப் போருக்குக்கூட ஆயத்தமாயின. அக்காலக்கட்டத்தில் எகிப்து நாட்டிற்கு சூயஸ் கால்வாய் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குப் போதிய தொழில்நுட்பம் இல்லை. வல்லாதிக்க நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தாலும்  எகிப்து அதிபர் நாசர், தனது நாட்டினுடைய சுதந்திரத்தையும், அரசுரிமையையும் மற்ற நாடுகளுக்கு விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. அந்தச் சூழலில்தான்  நேரு அவர்கள் நாசர் அவர்களின்  நிலைப்பாட்டினை வெளிப்படையாக ஆதரித்தார். அன்றைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் அய்சுநோவர் அவர்களிடம் பேசி ஒரு அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தி ‘‘சூயஸ் கால்வாய் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வினைக் கண்டார். சூயஸ் கால்வாயைப் பாதுகாப்பதற்காக எந்த நாட்டினருடனும் எவ்விதப் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் போடவேண்டாம்’’ என்று நேரு வலியுறுத்தி வெற்றியும்  பெற்றார்.

2016ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஸ்வப்னாகோனா நாயுடு ஒரு கட்டுரையில், “எவ்வித ஒப்பந்தத்தையும் தவிர்த்து ஒரு சார்பற்ற நிலையை ஏற்கவேண்டும் என்று நேரு பரிந்துரைத்தார். இத்தகைய ஒத்துழைப்பு முறை மிகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டதால், யுகோஸ்லோவிய நாட்டின் அதிபர் டிடோவும், நாசரின் எகிப்தும், நேருவின் இந்தியாவும் இணைந்து எடுத்து முடிவு அய்ரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் முழுவதும் சுயசார்புக் கொள்கையின் ஒற்றுமையின் அடையாளமாக மாறியது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைதான் பிற்காலங்களில் அணிசேரா நாடுகளின் அமைப்பு வலிமை பெறுவதற்கும் வழிவகுத்தது.

தற்போது இந்தியா பின்பற்றி வரும் வெளியுறவுக் கொள்கை உள்நாட்டில் விலைவாசி உயர்வை, பொருளாதாரத் தேக்கநிலையை உருவாக்கி வருகிறது. ஏன் பிரதமர் நரேந்திரர் ஈரான் போர் தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் சென்றார். இந்தப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இந்தியா பின்பற்றிய அணிசேரா நாடுகள் கொள்கையை ஏன் காற்றில் பறக்கவிட்டார்? அமெரிக்காவின் டிரம்பைக் கண்டு ஏன் அஞ்சுகிறார்? இந்தியாவின் அரசுரிமையை அமெரிக்காவிடம் ஏன் அடகுவைத்துவிட்டார்? என்று கேள்விகள் மக்கள் மன்றத்தில் எழுப்பப்படுகின்றன.

யாருடைய கோப்புகளைப் பார்த்து இப்படி அஞ்சுகிறார்? தேர்தல் பரப்புரையிலாவது பிரதமர் பதிலளிப்பாரா என்று நாட்டு மக்களும் உலகமும் எதிர்பார்க்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *