கோவை, மார்ச் 19 இணையவழி குற்றவாளிகள் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க ‘டிஜிட்டல் அரெஸ்ட்’என்ற புதிய உத்தியைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த 70 வயது ஓய்வுபெற்ற தாசில்தார் ஒருவர், இந்த மோசடி வலையில் சிக்கி ரூ40 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி
அடையாளம் தெரியாத நபர்கள் தொலைப்பேசி வாயிலாக அந்த ஓய்வுபெற்ற அதிகாரியைத் தொடர்பு கொண்டு, அவர் ஏதோ ஒரு சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி மிரட்டியுள்ளனர். தங்களை மத்திய விசாரணை முகமை அதிகாரிகள் என அடையாளப்படுத்திக் கொண்ட அந்த கும்பல், அவரை காணொலி அழைப்பின் மூலம் கண்காணிப்பதாகவும், வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் கூறி ‘டிஜிட்டல் முறையில் கைது’ செய்திருப்பதாக நம்ப வைத்துள்ளனர். இவர்களது மிரட்டலுக்குப் பயந்த அவர், வழக்கை முடிப்பதற்காக அவர்கள் கேட்ட 40 லட்சம் ரூபாயை வங்கி மூலம் அனுப்பியுள்ளார். பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புகார் அளித்துள்ளார்.
இது குறித்து கோவை மாநகர காவல்துறை சைபர் கிரைம் ஆய் வாளர் கவிதாலட்சுமி அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
“நமது நாட்டின் சட்ட நடை முறையில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற ஒன்றே கிடையாது. காவல்துறை அல்லது எந்த ஒரு ஒன்றிய விசாரணை அமைப்பும் தொலைபேசி மூலமாகவோ, காணொலி அழைப்பின் (வீடியோ கால்) மூலமாகவோ யாரையும் கைது செய்ய முடியாது. அதேபோல், பணத்தை அனுப்பினால் வழக்கை முடித்து விடுவோம் என்று எந்த அதிகாரியும் கூறமாட்டார்கள்.”
பொதுமக்களுக்கான தற்காப்பு ஆலோசனைகள்
சைபர் குற்றவாளிகளிடம் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கீழ்கண்ட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: வங்கி கணக்கு விவரங்கள், ஆதார் எண், ஏ.டி.எம். ரகசிய எண்கள் அல்லது ஓ.டி.பி. (OTP) ஆகியவற்றை யாருடனும் பகிரக்கூடாது.
காணொலி அழைப்பில் (வீடியோ காலில்) மிரட்டல் விடுத் தால் உடனடியாக இணைப்பைத் துண்டித்துவிட்டு, குடும்பத் தினரிடமோ அல்லது காவல் துறையினரிடமோ தெரிவிக்க வேண்டும். முன்பின் தெரியாத எண்களில் இருந்து வரும் மிரட்டல் அழைப்புகளை அலட்சியப் படுத்துங்கள்.
உதவிக்கு
இணையவழி மோசடியில் சிக்கினாலோ அல்லது அது போன்ற சந்தேகமான அழைப்புகள் வந்தாலோ உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
