ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கடந்த மார்ச்சு 17ஆம் தேதி என்ன பேசினார்? (‘ஒன் இந்தியா’ தமிழ் இணையம்)
“நாம் பின்பற்றும் மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்.. ஆனால் அடையப்போகும் இலக்கு ஒன்றுதான்
மேலும், வேறுபாடுகளை மய்யமாக வைத்து ஒருவருக் கொருவர் சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்த வேண்டும் – நம் மனதில் இருக்கும் வெறுப்புணர்வை வேரறுக்க வேண்டும்” என்று பேசினார்.
இதனிடையே, மோகன் பகவத்தின் இந்தப் பேச்சினை கடந்த காலங்களில் அவர் கூறிய சில கருத்துகளோடு ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் விமர்சனம் வேகப்பட்டு வருகிறது.
ஒன்றியத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதலாக, ஆர்.எஸ்.எஸ். அமைப் புக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக, தனது சித்தாந்தங்களை நாடு முழுவதும் பரப்பும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். முழுவீச்சில் இறங்கியது. அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் பல பொதுக் கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ஹிந்துத் துவா சித்தாந்தத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார். ஆரம்பத்தில், அவரது கருத்துகள் சர்ச்சையையும் உண்டாக்கின.
குறிப்பாக, படையெடுப்பாளர்களுடன் இந்தியாவுக்கு வந்ததுதான் இஸ்லாம் மதம்.. மற்றபடி இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள்தான் என மோகன் பகவத் ஒருமுறை பேசியது – முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், சில காலங்களுக்குப் பிறகு தனது அணுகுமுறையை மோகன் பகவத் மாற்றிக் கொண்டது போல் காட்டிக் கொண்டார். முஸ்லிம் தலைவர்களை சந்திப்பது, அவர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்துவது என மோகன் பகவத்தின் அணுகுமுறையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மேலும், முஸ்லிம் மதத்தினரும் நமது சகோதரர்கள்தான் என அண்மைக்காலமாக அவர் பேசியும் வந்தார். இதற்கு ஒருதரப்பில் வரவேற்பு இருந்தபோதிலும், மோகன் பகவத்தின் இந்த திடீர் மனமாற்றம் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் – பாவனை எனவும் அரசியல் நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், டில்லியில் (17.3.2023) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆர்எஸ்ஆஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “இந்தியாவில் சமீபகாலமாக மக்கள் மத்தியில் மதம் சார்ந்த வெறுப்புணர்வுகள் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இது மிகவும் தவறான விஷயம். மதங்கள் என்பது நம்மை ஒழுக்கப்படுத்தி, ஆன்மீகத்திற்குள் கொண்டு செல்லும் ஒரு கருவி என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு நாம் பல பெயர்களை வைத்திருக்கிறோம். அவ்வளவுதான்.
பல்வேறு மதங்களைப் பின்பற்றும் மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களுக்கென தனித்தனியாக வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. ஆனால், அனைத்து மதங்களுக் குமான இலக்கு ஒன்றுதான். இதைத்தான் இந்து மதமும் சொல்கிறது. வேறுபாட்டினை மய்யமாக வைத்து சண்டையிட்டுக் கொள்வது அறிவற்ற செயல் ஆகும். மற்ற நாடுகளுக்கு அன்பைப் போதிக்கும் நாமே இப்படி செய்வது சரியல்ல. நம் மனதில் இருக்கும் வெறுப்பை வேரறுக்க வேண்டும். ஒரு மிகப்பெரிய மலையின் மீது பலர் ஏறுகிறார்கள். ஒவ்வொரு வருக்கும் தாங்கள் தேர்ந்தெடுத்த பாதைதான் சரியானது எனத் தோன்றும். ஆனால், மலை உச்சியில் இருந்து பார்ப்பவருக்கே அவர்கள் அனைவரும் தன்னை நோக்கித்தான் வருகிறார்கள் எனத் தெரியும். அதுபோலதான் மதங்களும். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.” இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.
(- ‘ஒன் இந்தியா’ தமிழ் இணையம், 18.3.2023)
இப்படி மூன்று வாரங்களுக்கு முன் பேசிய அதே ஆர்.எஸ்.எஸ். தலைவர் இப்பொழுது இவ்வாறு பேசி இருக்கிறார்.
“கிறிஸ்தவ மிஷனரிகள் உலகம் முழுவதும் பள்ளிகள், மருத்துவமனைகளை நடத்தி வருகின்றனர். ஆனால் நாட்டின் தென் மாநிலங்களில் உள்ள ஹிந்து மத ஆன்மிகவாதிகள் மிஷனரிகளைவிட அதிகமாக சமூகத்துக்கு சேவை செய் திருக்கின்றனர்.
– மோகன் பாகவத்
தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,
(‘தினமலர்’ – 8.4.2023)
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் முரண்பாடான பேச்சு என்கிற வகையில் இதைக் கடந்து போக முடியாது.
“பேச நா இரண்டுடையாய் போற்றி!” என்று அறிஞர் அண்ணா அவர்கள் ‘ஆரிய மாயை’ நூலில் குறிப்பிடுவதைக் கவனத்தில் கொண்டால் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு எத்தகையது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ராமராஜ்ஜியம் அமைப்போம், ஹிந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்பவர்கள் சிறுபான்மை மக்களைத் தாஜா செய்ய முயற்சிப்பது என்பது 2024 மக்களவைத் தேர்தலை மனதிற் கொண்டுதான் – ஏமாற வேண்டாம்!