கொல்கத்தா, மார்ச்.18 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் மம்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. அங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், ஆளும் திரிண மூல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) 291 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா கொல்கத்தாவில் நேற்று வெளியிட்டார். பின்னர் மம்தா செய்தியாளர்களிடம் கூறும்போது, ”மொத்தம் உள்ள 294 இடங்களில், திரிணமுல் காங்கிரஸ் 291 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 3 இடங்கள் டார்ஜி லிங் மலைப் பகுதியில் அனித் தாபா தலைமையிலான பிஜிபிஎம் (BGPM) கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்காத தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கட்சியில் உரிய இடமும் பொறுப்பும் வழங்கப்படும்.
இந்தத் தேர்தலில் பாஜகவின் பலம் குறையும். அவர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள். எங்கள் கட்சி 226-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும்” என்றார்.
291 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் 52 பெண்கள், 95 எஸ்சி, எஸ்டி பிரிவினர், 47 சிறுபான்மையினர் இடம் பெற்றுள்ளனர். முதலமைச்சர் மம்தா கடந்த முறை போட்டி யிட்ட பவானிபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜகவின் சுவேந்து அதிகாரி போட்டி யிடுகிறார். இதனால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.
கடந்த 2021இல் நடந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தாவை, பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி தோற்கடித்தார்.
