மதிப்புறு ‘கழுதை’யாரின் மகத்துவம் இதோ!
வீட்டு விலங்குகளிலேயே அதிகம் பயன் தரக் கூடியது கழுதைதான். அதிகமான வசவுக்குரிய வார்த்தைகளுக்கும் அதுதான் மனிதர்களுக்கு முன்னாலே நின்று கை கொடுக்கிறது!
இது ஒரு விசித்திர நகை முரண்பாடு! யாரையாவது கோபத்தில் இழிவுபடுத்த, வசைச்சொல் ‘டேய் கழுதை’, என்றுதான் ‘அர்ச்சனை’ தொடங்கும் எங்கும்!
மேல்நாட்டு வெள்ளைக்காரன் கழுதைக்கு ஒரு தனிப் பெருமையை தந்து உயர்த்தியுள்ளான்! பொறுமைக்கு கழுதையை ஒரு லட்சியச் சொல் லாகவே முன்னிறுத்தி (Ass in the Patience) ‘கழுதைப் பொறுமை’ என்று சொல்லி அதன் சிறப்பை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்திவிட்டான்!
பழமொழிகள் ஏராளம் கழுதையை முன்னிறுத் தியே பல காலமாக நாட்டில் உலா வந்து கொண்டிருக்கின்றன!
‘கழுதை அறியுமோ கற்பூர வாசனை?’
‘கழுதைகெட்டால் குட்டிச் சுவர்’
இப்படி ஏராளம் ஜன சமூகத்தில் வழங்கி வருவதும் கண்கூடு!
சகுனங்கள்? என்ற மூடநம்பிக்கையில் மூழ்கி யுள்ளவர்கள் பலரும் – ஒரு கழுதை உருவ அட்டையை தங்கள் கடைகளின் முகப்பில் மாட்டி வைத்து – ‘என்னால் உனக்கு, அதிருஷ்டம் வரும்’ என்று கழுதை சொல்வதுபோல், கீழே அச்சிட் டிருக்கிறார்கள்!
“என்னே வினோதம் பாரு
எவ்வளவு ஜோரு பாரு
பாரு, பாரு பகுத்தறிவு படும் பாட்டைப் பாரு”
அறிஞர் அண்ணா எழுதி, திரையில் வந்த முதல் திரைப்படம் “வேலைக்காரி”
அதில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமச் சந்திரன், வி.என். ஜானகி, எம்.வி. இராஜம்மா, டி.எஸ். பாலையா போன்ற அந்த நாளில் திரைப்படத் துறையில் ஜொலித்த திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் ‘சகுந்தலை’ படத்தில் – ‘அடிப்பியா… நான் வெள்ளிமூக்கு சிங்கண்டா’ என்று அழுது கொண்டே கூறுவார்.
அண்ணாவின் வசனங்களில் ஒன்று, ஆனந்தனாக நடிக்கும் கே.ஆர். இராமசாமியிடம் அவரது மனைவி வி.என். ஜானகி ‘நான்கூட மிகவும் அழகாகத்தான் இருந்தேன்’ என்பார்.
அதற்குப் பதிலளித்து லொள்ளு பிடித்த கணவ னான கே.ஆர்.ராமசாமி, ‘ஆமாண்டி கழுதைகூடத் தான் அழகாக இருக்கும் குட்டியாயிருக்கும்போது’ என்று நக்கலாக ஒரு வசனம் பேசுவார்!
கணவன் – மனைவி கோபத்திற்கும் எள்ளலுக்கும் கூட ‘கழுதை’ பேசு பொருளாகப் பயன்பட்டிருக்கிறது பார்த்தீர்களா?
சில ‘கணவன் – மனைவி’ – உறவில் (‘வாழ்வி ணையர்கள்’ உறவில் அல்ல) அன்புடன் கொஞ்சும்போது கழுதையை அன்புக் கொஞ்சல் சொல்லாக சொல்வதாக சில நண்பர்கள் என்னிடத்தில் சொன்னதுண்டு!
புராணத்தில் கழுதைகூட முனிவர்களைப் பெற்றுத் தள்ளியிருக்கிறது!
கர்த்தபவீர முனிவரை கர்த்தபமான கழுதைதான் பெற்றுக் கொடுத்திருக்கிறது!
அது ‘புராணக் கழுதை’யின் பெருமையை விளக்குவது!
கழுதையின் உழைப்பை புரட்சிக் கவிஞர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இன்னும் மலையேறும் பகுதிகள் உள்ள நாடுகளில் – மேடு பள்ளத்தாக்குகளைத் தாண்டிச் செல்ல கழுதைதானே மனிதர்களைச் சுமக்கிறது இல்லையா?
கோவேறு கழுதைகளின் சிறப்பை நவிலவும் வேண்டுமோ!
கடவுள் கடவுள் என்றெதற்கும்
கதறுகின்ற மனிதர்காள்!
கடவுள் என்ற நாமதேயம்
கழறிடாத நாளிலும்
உடமையாவும் பொதுமையாக
உலகுநன்று வாழ்ந்ததாம்;
‘கடையர்’ ‘செல்வர்’ என்ற தொல்லை
கடவுள்பேர் இழைத்ததே!
உடைசுமந்த கழுதைகொண்
டுழைத்ததோர் நிலைமையும்
உடமைமுற்றும் படையைஏவி
அடையும்மன்னர் நிலைமையும்
கடவுளாணையாயின் அந்த
உடைவெளுக்கும் தோழரைக்
கடவுள்தான் முன்னேற்றுமோ? தன்
கழுதைதான் முன்னேற்றுமோ?
என்ற வரிகளில் அதன் பெருமையை புரட்சிக் கவிஞர் கூறுகிறார்.
இன்று ஒரு செய்தித்தாளில் படித்தேன் – பார்த்தேன்.
தூத்துக்குடி அருகே கழுதைப் பால் லிட்டர் ஒன்றுக்கு 5,000 ரூபாய் – அய்யாயிரம்! நம்ப முடிகிறதா?
இனிமேல் யாரையும் ‘கழுதை மேய்க்கத்தான் நீ லாயக்கு’ என்று திட்டாதீர்கள்.
அதைச் செய்தால் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் கழுதைப்பால் விற்றாலே 10 ஆயிரம் ரூபாய் வந்துவிடும் – 3 லட்சம் ரூபாய் மாதத்திற்கு கிடைக்கும் போலிருக்கு!
சோம்பேறி மனிதனைவிட, பால்தரும் கழுதை ‘பயன் மிகு’ பிராணி அல்லவா?
கழுதைப் பாலுக்கு கிராக்கி ஏறினால் மேலும் விலை கூடி ஒரு தொழிலாக கழுதைப் பால் பண்ணை பெரு உரு எடுத்தாலும் அதிசயப் படாதீர்கள்!
பயன்மிகு கழுதைப் புராணம் இத்துடன் முற்றிற்று!