புதுடில்லி, மார்ச் 18- சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்க தலைமைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அடுத்தடுத்து மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 5 மாநில தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் 15.3.2026 அன்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலராக இருந்த நந்தினி சக்கரவர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் துஷ்யந்த் நரியாலா அப்பதவியில் நியமிக்கப்பட்டார். இதுபோல உள் துறை செயலராக இருந்த ஜெகதிஷ் பிரசாத் மீனாவும் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார் மேலும் சங்கமித்ரா கோஷை உள்துறை முதன்மைச் செயலராக நியமிக்குமாறு மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதில் செயலாளர் சுஜீத் குமார் மிஸ்ரா கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குநர் பீயுஷ் பாண்டே, கொல்கத்தா காவல் ஆணையர் சுப்ரதிம் சர்க்கார் ஆகிய இருவரையும் பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.
புதிய தலைமை இயக்குநராக சித் நாத் குப்தாவும் கொல்கத்தா காவல் புதிய ஆணையராக அஜய் குமார் நந்த் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத் துமாறு மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இது போல மேலும் சில அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்
‘சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தயார் நிலை குறித்து ஆய்வு செய்த பின்னரே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பதவியில் இருந்து நீக்கப்பட்ட அதிகாரிகள், தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பணிகளிலும் பணியமர்த்தப்படக் கூடாது’ என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து திரிணமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து 16.3.2025 அன்று வெளிநடப்பு செய்தனர்.
“தலைமைச் செயலர், உள்துறைச் செயலரை நள்ளிரவில் பதவியில் இருந்து நீக்கியதை ஏற்க முடியாது’’ என்று அவர்கள் கூறினர். ‘‘தேர்தலை நியாயமாக நடத்த, தேர்தல் ஆணையம்உயர் அதிகாரிகளை மாற்றுவது வழக்கமான நடவடிக்கைதான்’’ என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
