மறுபடியும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் வரவேண்டும் என்பது…
எங்களுக்காக அல்ல; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக அல்ல!
மக்களாகிய உங்களுக்காக; உங்கள் சந்ததியினருக்காக;
அவர்களின் நல்வாழ்வுக்காக; சுயமரியாதைக்காக…!
திருக்கோவிலூர், மார்ச் 17 ‘‘ஏன் பிஜேபி வரக்கூடாது என்கிறோம்? தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறு செய்ய நாங்கள் வரவில்லை; யார் மீதும் கோபம் இல்லை; நம் மக்கள் படிக்க வேண்டாமா? உரிமை பெற வேண்டாமா? என்பதுதான் எங்கள் நிலைப்பாடு’’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தன்னிலை விளக்கம் அளித்து உரையாற்றினார்.
2026 தேர்தலும் நமது கடமையும்!
திருக்கோவிலூர் திராவிடர் கழகம் சார்பில், ‘அன்னை மணியம்மையார் நினைவு நாள்; 2026 தேர்தலும் நமது கடமையும்’ எனும் தலைப்பில், பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று (15.03.2026) மாலை 6 மணிக்கு திருக்கோவிலூர் பேருந்து நிலையம் எதிரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுக்குழு உறுப்பினர் தி.பாலன் தலைமை ஏற்க, ஒன்றியத் தலைவர் கருப்புச்சட்டை என்.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். மாவட்டக் காப்பாளர் ம.சுப்பராயன், பெரியார் மருத்துவக் குழுமச் செயலாளர் கோ.சா.குமார், மாவட்டச் செயலாளர் ச.சுந்தர்ராஜன், திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தா.தம்பி பிரபாகரன், திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர்
மு.இளமாறன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தி.மு.க. வழக்குரைஞர் எம்.தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
தமிழர் தலைவருக்குச்
சிறப்பான வரவேற்பு
பெரம்பலூரில் இருந்து திருக்கோவிலூர் கூட்ட நிகழ்வுக்கு சரியான நேரத்துக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வருகை தந்தார். மாவட்டம் சார்பில் அவருக்கு மிக எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது. கழகத் தலைவரின் வருகையின் போது, கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் உரையாற்றிக் கொண்டிருந்தார். மாவட்டத் தலைவர் கோ.சா.பாஸ்கர், சி.பி.அய். மாவட்டச் செயலாளர் கோ.சா.குமார், அ.சவுரிராஜன், விழுப்புரம் நகர திமுக செயலாளர் சர்க்கரை, விழுப்புரம் மாவட்டத் தலைவர் சே.வ.கோபண்ணா, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன், மாவட்ட மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன், ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் வாட்ச் வி.சேகர், மூங்கில்துறைப்பட்டு நகர தி.க. தலைவர் நூ.சலீம், மாநில மாணவர் கழகச் செயலாளர் செந்தூரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
தேர்தல் தேதி அறிவிப்பும்- கழகத்தின் முதல் கூட்டமும்!
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மறைமலை நகரில் அக்டோபர் 4 ஆம் நாளில் நடைபெற்ற, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டில் அறிவித்தபடி, அக்டோபர் 15 ஆம் தேதியிலிருந்தே, ‘‘இதுதான்
ஆர்.எஸ்.எஸ். – இதுதான் பி.ஜே.பி. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் 50–க்கும் மேற்பட்ட கூட்டங்களில், தமிழ்நாடு முழுவதும் பேசி, மக்கள் மத்தியில்
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் நேர்முக மற்றும் மறைமுகத் திட்டங்களை அம்பலப்படுத்தி இருக்கிறார்.
அந்த அடிக்கட்டுமானத்தின் மீது இப்போது, ‘‘2026 தேர்தலும் நமது கடமையும்” எனும் தலைப்பில் பேசி வருகிறார்.
தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் தம்தம் கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் நிலையில் தீவிரமாக இருக்கின்றன. இந்த சூழலில்தான், தேர்தல் ஆணையம் 15.03.2026 அன்று மாலை 4.30 மணிக்கு தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவிப்பு செய்தது. அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வது; இடங்களைத் தேர்வு செய்வது; வேட்பாளர்களை உறுதி செய்வது என்று பல்வேறு பணிகளுக்குப் பிறகுதான் பிரச்சாரத்திற்கு வருவார்கள்.
ஆனால், ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட நிற்காத திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அறிவிப்பு செய்த 2 மணி நேரத்தில், திருக்கோவிலூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டார். இதுதான் தேர்தல் தேதி அறிவிப்பு செய்த பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஆகும்.
மேடை நிகழ்வுகளை கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் நெறி யாள்கை செய்தும், இயக்கப் புத்தகங்களை அறிமுகம் செய்தும் உரையாற்றினார். 1.‘‘வந்தே மாதரம் வாழ்த்து பாடலா? வசைப்படலா?’’ 2. ‘‘அறிஞர் அண்ணாவின் கடைசி கடிதம்’’ 3. ‘‘பெண்களின் முன்னேற்றத்திற்கு தந்தை பெரியார் செய்தது என்ன?’’ 4. ‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ 5. ‘‘முதல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் – வரலாற்றைத் திரிப்பது யார்?’’ ஆகிய 5 புத்தகங்கள் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன. ‘‘சிறப்புத் தள்ளுபடி போக, 100 ரூபாய்க்கு கழகத் தலைவரிடம் பெற்றுக் கொள்ளலாம்” என்று உரத்தநாடு இரா.குணசேகரன் அறிமுகம் செய்தார். அதையடுத்து, இயக்கம் சார்ந்தும், சாராமலும், பொதுமக்களும் ஏராளமானோர் வரிசையில் நின்று புத்தகங்களை பெற்றுக் கொண்டனர். புத்தகங்களைப் பெறும் போதே கழகத் தலைவருக்கு தோழர்கள் மரியாதை செய்து மகிழ்ந்தனர். நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
திருக்கோவிலூரில் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டிய கழகத் தலைவர், இந்தப் பகுதியில் அடி நாளில் இயக்கத்தை கட்டி எழுப்பிய தோழர்களான, ‘‘சோடா பேக்டரி பத்மநாதன், என்னுடைய ஆசிரியர் திராவிட மணிக்கு நெருக்கமான நண்பரான இன்னொரு பத்மநாபன், வழக்குரைஞர் மாதவன் – இவருடைய வீட்டில் தான் தந்தை பெரியார் வந்தால் தங்குவார். பிறகு அரகநல்லூர் மகாலிங்கம், பரசுராமன், கண்ணாச்சிபுரம் ராமலிங்கம் – ராமலிங்கத்தின் பிள்ளை இங்கே வந்திருக்கிறார்; இன்னொருவர் ராணுவத்தில் இருக்கிறார்’’ என்று, நினைவுக்குதிரிலிருந்து உதிர்த்துக் கொண்டே சென்றார். தொடர்ந்து, ‘‘அவர்கள் போட்ட மேடையில்தான் நாம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்; பெருமிதத்தோடு அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்’’ என்று பிரகடனம் செய்தார். பின்னர், ‘‘ஏன் இந்த இயக்கம் தேவைப்படுகிறது?’’ ‘‘ஏன் பெரியார் தேவைப்படுகிறார்?’’ ‘‘ஏன் திராவிடம் மாடல் ஆட்சி தேவைப்படுகிறது?’’ என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டுவிட்டு, ‘‘தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறு செய்ய நாம் வரவில்லை; யார் மீதும் நமக்கு கோபமும் இல்லை; நம் மக்கள் படிக்க வேண்டாமா? நம் மக்கள் உரிமை பெற வேண்டாமா? இது தான் எங்கள் கேள்வி’’ என்று குறிப்பிட்டார். தொடர்ந்து, ‘‘தி.மு.க. தலைமையிலான இந்தக் கூட்டணி தான் மக்களுக்கு தேவையான கொள்கையை உடைய கூட்டணி’’ என்றும் பதில் அளித்தார்.
திராவிட இயக்கத்தினுடைய கொள்கையை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை என்பதை, நீதிக் கட்சியில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம்; 9 ஆயிரம் ரூபாய் ஆண்டு வருமான வரம்பு ஆணை என்று வரலாறு நெடுக சமூக நீதிக்கு எதிராக இருந்த சக்திகளை எதிர்கொண்டு வீழ்த்திய வல்லமை இந்த கொள்கைக்கு உண்டு என்பதை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் மெய்ப்பித்தார். ‘2026 ஆம் ஆண்டு நடைபெற இருப்பது வெறும் தேர்தல் அல்ல; ஆரிய திராவிடப் போராட்டம்’ என்பதை குறிப்பிட்டு, ”அது மனுதர்மம் இந்திய அரசியல் சட்டம் ஆகியவற்றுக்கிடையே நடந்து கொண்டிருக்கிறது” என்பதை விவரித்தார். அதை மேலும் விளக்குவதற்காக, ‘‘மனு தர்மம் என்ன சொல்கிறது?‘‘ ‘உயர்ஜாதிக்காரர்கள்தான் படிக்க வேண்டும்’ என்று கூறுகிறது’ என்பதைச் சுட்டிக்காட்டி, நமது மானத்தை பறித்தார்கள். பின்னர் அறிவைத் தடுத்தார்கள். அதனால் தான், தந்தை பெரியார் ‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்றார்’’ அதை மீட்பதற்காக போராடி னார். இப்போது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர், மனுதர்மத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதை பச்சையாக செய்கிறார்கள். அனுபவ பூர்வமாகவும், நடைமுறையிலும் அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டார்கள் என்றும், நிகழ்ந்திருக்கும் ஆபத்தை அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக் காட்டினார்.
‘இந்து மதம் எங்கே போகிறது?’
மேலும் பேசிய அவர், ‘‘அதைத் தடுப்பதற்காகத்தான் திராவிடர் இயக்கம்; ‘திராவிட மாடல்’ அரசு போராடிக் கொண்டிருக்கிறது’’ என்று, ஆபத்தை தவிர்க்க முடியும் என்ற நம்பிக்கையையும் ஊட்டினார். தொடர்ந்து, அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்ற நூலில் மனுதர்மம் இந்தியாவுக்கு எப்படி வந்தது என்பதை எடுத்துக் காட்டி விட்டு, ஜாதியை ஒழிப்பதாக திராவிட மாடல் ஆட்சி பிரகடனம் செய்திருப்பதாக குறிப்பிட்டு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும் 2014 இல் ஆட்சிக்கு வந்த ஒன்றிய அரசின் வேதனைகளையும் ஒப்பிட்டுக் காட்டி, ‘‘கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரியக் கூடாது’’ என்று மக்களுக்கு அறிவுறுத்தி, ‘‘மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி தான் ஆட்சியில் அமரும்’’ என்பதை அழுத்தம் திருத்தமாக கூறி, ‘‘அது எங்களுக்காகவோ; முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்காகவோ அல்ல; உங்களுக்காக; உங்கள் சந்ததியின் எதிர்காலத்திற்காக; நல்வாழ்வுக்காக; சுயமரியாதைக்காக’’ என்று குறிப்பிட்டு, தமது உரையை நிறைவு செய்தார். நிறைவாக, கழக ஒன்றியச் செயலாளர் எம்.சேகர் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
அவருக்கு வயது, வெறும் 93! அவ்வளவுதான்!
எப்படி தமிழர்களின் சுயமரியாதை மீட்சிக்காகவே தம் வாழ்வை தந்தை பெரியார் அவர்கள் தாமாகவே ஒப்படைத்துக் கொண்டாரோ; அவருடைய வாழ்நாள் மாணவரான கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வும் அவ்வண்ணமே!
முதல் நாளில் திருக்குவளையில் ஆர்.ரங்கநாதன் படத்திறப்பு (14.3.2027). அடுத்து வேளாங்கண்ணியில் பிரணாம்பாள் படத்திறப்பு! அன்று மதியமே தஞ்சைக்குப் பயணமானார்.
15.03.2026, ஞாயிற்றுக்கிழமை அன்று 8.30 மணிக்கு பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டு, இரண்டு வெவ்வேறு இடங்களில் படத்திறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
முதலில், ஒரத்தநாடு ஒன்றியம் விளார் பகுதியில், ”புதிய பார்வை” இதழ் நிறுவன ஆசிரியர் ம.நடராசன் மற்றும் அவரது சகோதரர் சாமிநாதன் ஆகியோரின் படங்களுக்கு மரியாதை செய்து, அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இரண்டாவது, முனைவர் அதிரடி க.அன்பழகனின் மாமனார் நெடுவாக்கோட்டை தோ.தம்பிக்கண்ணு இல்லத்திற்குச் சென்று, அவரது படத்திற்கு மரியாதை செய்தார்.
மூன்றாவதாக ஊடகவியலாளர் த.பர்தின் – த.கலைவாணி ஆகியோரின் சுயமரியாதைத் திருமணம்.
நான்காவதாக, கொளுத்தும் வெயிலில் ஒன்றிய அரசைக் கண்டித்து தஞ்சை தலைமை அஞ்சலகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம். பின்னர் பெரம்பலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவரிடம் மாவட்டப் பொறுப்பாளர்கள் ‘பெரியார் உலக’த்திற்கான நிதியை வழங்கினர். பின்னர் 2.30 மணிக்கு மேல் மதிய உணவு.
அய்ந்தாவதாக திருக்கோவிலூரில், மாலை 6 மணிக்கு, ‘‘அன்னை மணியம்மையார் நினைவு நாள் – 2026 தேர்தலும் நமது கடமையும்” எனும் தலைப்பில் பொதுக்கூட்டம். அங்கேயும் 50 நிமிடங்களுக்கு மேல் சிறப்பாகப் பேசி முடித்தவுடன்,
ஆறாவதாக, தொலைக்காட்சி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
சென்னை வருகிற வழியில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் நின்று இரவு உணவு எடுத்துக் கொண்டு, உடன் வருகின்ற தோழர்களிடம் மலர்ந்த முகத்துடன், “எப்படிய்யா இருந்தது இன்றைய நிகழ்ச்சிகள்?” என்று ஆவலுடன் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.
காலை 8.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் பயணம் இரவு 10 மணியைத் தாண்டி விட்டது. இன்னும் ஏதாவது நிகழ்ச்சி இடையில் இருந்திருந்தால் கூட அதையும் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க சம்மதித்திருப்பார் போலிருந்தது அவரது கேள்வியில் இருந்த உற்சாகம்.
அந்த ஒரு நாள் பயணம் அத்துடன் முடியவில்லை. இரவில் சாலை மார்க்கமாகவே பயணம் செய்து நள்ளிரவு தாண்டி சென்னைக்கு இரவு ஒரு மணிக்குத் திரும்பினார்.
ஏறக்குறைய 16 மணி நேரம் அடர்த்தியான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அடுத்த நாள் நிகழ்ச்சிக்காக சில மணி நேரம் மட்டுமே தூங்கச் செல்கிறார்.
ஒரு நாளில் தஞ்சாவூர் வல்லத்தில் தொடங்கி, அடுக்கடுக்கான 6 நிகழ்ச்சிகள். அவருக்கு வயதோ, வெறும் 93! அவ்வளவுதான்!
பங்கேற்றோர்
நிகழ்வில், திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, செயலாளர் ப.அண்ணாதாசன், கழக இளைஞரணி மாவட்டத் தலைவர் எ.கரிகாலன், வாணாபுரம் ஒன்றியச் செயலாளர் அ.தமிழ்ச்செல்வன், ரிஷிவந்தியம் ஒன்றியம் தலைவர் அர.சண்முகம், திண்டிவனம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் செஞ்சி திருநாவுக்கரசு, திண்டிவனம் மாவட்டத் தலைவர் இரா.அன்பழகன், விழுப்புரம் நகரத் தலைவர் ராஜேந்திரன், பெரியார் பெருந்தொண்டர் வேட்டவலம் பட்டாபிராமன், ஆத்தூர் மாவட்டத் தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர், அனைத்து கட்சிகளையும் சேர்ந்த தோழர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரையை செவிமடுத்து பயன்பெற்றனர்.
