சென்னை, மார்ச் 17- குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வசதியாக தமிழ்நாடு அரசின் சார்பாக சிறப்பு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
முதலமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு பொறுப் பேற்றது முதல் பல்வேறு சிறப்புத் திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. அதேசமயம் தமிழ் மொழியின் பெருமையை உலகறியும் வண்ணம் பல வகைகளில் திட்டங்களை வகுத்து வருகிறது.
இப்படியான நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி திமுக பிரமுகர் மயிலை வேலு இல்ல திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து அவரின் பேச்சை சுட்டிக்காட்டி நிதின் சிற்றரசு என்ற இணைய பயனாளர் ஒருவர், “குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்து கொள்ள சரியான சமூக வலை தளங்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் தலைவரே!” என தெரிவித்திருந்தார்.
அவரது ட்வீட்டை மேற்கோள் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் – அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்!” என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ் பெயர்களுக்கு சிறப்பு இணையதளம்
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறு தியின்படி, குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை தேர்வு செய்யும் வகையில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், “அன்புக் குழந்தை களுக்கான அழகிய தமிழ்ப் பெயர்கள் மற்றும் அவற்றின் பொருள் அடங்கிய சிறப்பு இணையப் பக்கத்தைத் தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியுள்ளது.
நமது மழலைச் செல்வங்களுக்குச் சூட்டி மகிழ, தனித்துவமான தமிழ்ப் பெயர்களைத் தேடுபவர்கள் https://tamildigitallibrary.in/tamilnames இந்தத் தளத்தைப் பயன்படுத்தி பயன்பெறுவோம்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த வலைத்தளத்தில் ஆண், பெண் ஆகிய பாலினம் அடிப்படையிலும், அகர வரிசையில் இரண்டு பாலினமும் இணைந்த பெயர்களும் அதன் அர்த்தங்களுடன் இடம் பெற்றுள்ளது. இந்த இணைய தளத்தை தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
மேலும் 2 வலைத்தளங்கள்
அதோடு மட்டுமல்லாமல் அதிக எண்ணிக்கையிலான தமிழறிஞர்கள், எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நூல்களைப் பெருமளவில் வாசகர்களிடம் கொண்டுசேர்க்க தமிழ் வளர்ச்சித் துறை நிதிநல்கையுடன் ‘நாட்டு டைமை நூல்கள்’ சிறப்பு இணையப் பக்கம் (https://tamildigitallibrary.in/nationalisedbooks) உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு பண்பாட்டு மின் நிலவரை ஏடு (https://tamilculturalatlas.in) திட்டத்தில், முதல் கட்டமாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள கோயில்கள், தொல்லியல் தளங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், கைவினைக் கலைகள் முதலியவற்றின் விவரங்கள், ஒளிப்படங்கள், காணொலிகள் ஆகியவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
சுற்றுலாப் பயணிகளுக்கும் பண்பாட்டு ஆர்வலர்களுக்கும் பயன்படும் வகையில் இத்தளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
