இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு? வண்ணங்களுக்குப் பின்னால் உள்ள வடுக்களை வெளிச்சமிட்ட ‘ஹோலி’

5 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

“இந்தியாவில் வண்ணங்களின் திருவிழா” என்ற பெயரில் உலகெங்கும் அண்மைக்காலத்தில் பெரும் விளம்பரம் பெற்றிருக்கிறது ஹோலி பண்டிகை. உலகின் பல நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்திருப்போர் தங்கள் நாட்டுப் பண்டிகை என்ற பெயரில்  ஹிந்து மதப் பண்டிகைகளான தீபாவளியையும், ஹோலியையும்,  ராக்கியையும் பல்வேறு நாடுகளின் தலையிலும் கட்டிவிட்டனர். மக்கள் தொகையில் கணிசமாக இந்தியர்கள் வாழும் பகுதிகளைச் சார்ந்த அரசியல்வாதிகளும் அதைக் கொண்டாடுவதும், வாழ்த்துச் சொல்வதுமாக வாக்குகளுக்கு அடித்தளம் போடுகின்றனர். இந்தப் பண்டிகைகளின் பின்புலம் தெரியாமல், ஏதோ மதப் பண்டிகை என்ற எண்ணத்தில் அவர்களும் கூட பங்கேற்கின்றனர்.

இந்த விளம்பரங்களை நம்பியும், வண்ணமயமான விளம்பரங்களிலும், ஹிந்தித் திரைப்படங்களிலும் அதிகம் காட்டப்படும் ஹோலியை இந்தியாவிலேயே வந்து ரசிக்கலாமே என்று கருதியும், கேமராவும், கையுமாக ரீல்ஸ் எடுக்கவும், பயண காட்சிப் பதிவுகள் போடவும் வெளிநாட்டுக்காரர்கள்  பலரும் கூட இங்கு குவிந்துவிடுகின்றனர்.

இந்தியா

இங்கு வந்து விழாக்களில் பங்கெடுக்கும்போதுதான், உண்மையான ஹோலி எப்படி நடக்கிறது? அதில் நடக்கும் விபரீதங்கள் என்னென்ன என்பது அவர்களுக் கெல்லாம் புரிகிறது.

ஹோலி என்பது பிரகலாதன் இரண்யகசிபு கதையின் ஒரு கிளைக்கதையாகவே வடநாடுகளில் பேசப்படுகிறது. பிரகலாதனின் ஹரி (விஷ்ணு) பக்தி பிடிக்காத இரண்யகசிபு, தன் சகோதரியான ஹோலிகா என்பவரின் மூலம், பிரகலாதனைக் கொன்று விட சதி செய்ததாகவும், தீயில் எரியாத ஹோலிகாவின் மந்திரப் போர்வை, விஷ்ணுவின் ஆசியால் பிரகலாதனைக் காப்பாற்றிவிட்டு, ஹோலிகாவைக் கைவிட்டுவிட்டதாகவும், மறைந்த ஹோலிகாவின் நினைவாகவே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் அந்தக் கதை சொல்கிறது. இன்னொரு கதை காமனை எரித்த சிவனோடு ஹோலியை முடிச்சுப் போடுகிறது. மற்றுமொரு கதை கிருஷ்ணன் தன் அத்தையுடன் காதலில் திளைப்பதை ஹோலி கொண்டாட்டம் குறிப்பதாகக் கூறுகிறது. இதில் உள்ள மூடநம்பிக்கைகள், சூழ்ச்சி, வஞ்சகம் போன்றவை எல்லாம் ஒரு புறம்.

இந்தியா

இன்னொரு புறம், ஹோலி என்ற பெயரால் நடக்கும் அத்துமீறல்கள், வம்புகள், வன்கொடுமைகள் அளவுக்கதிகமாகப் போய்க் கொண்டிருப்பதை உலக ஊடகங்களும், சமூக ஊடகங்களும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘பாரத் மேட்ரிமோனி’ இணையதளம் தயாரித்த குறும்படம் ஒன்று இப்போதும் யுடியூப் போன்ற தளங்களில் காணக் கிடைக்கிறது. (youtu.be/watch?v=l_sjimjWKZY). மகளிர் நாள், ஹோலி என்றெல்லாம் என்று கொண்டாடும் இந்தியாவில், மகளிருக்கான பாதுகாப்பான இடம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி யதார்த்த நிலையைக் காட்டும் அக் குறும்படம் ஒரு கண்ணாடியை அமைதியாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

ஒரு வசனமும் இல்லாமல், அது வலிமிகுந்த பரிச்சயமான ஒரு கதையைச் சொல்கிறது, “பண்டிகை வேடிக்கை” என்று இயல்பாகக் காட்டப்படும் செயல்கள் எவ்வாறு அத்துமீறலில் திளைக்கின்றன என்பதைக் காட்டுகிறது படம்.

ஹோலி கொண்டாடிய வண்ணக் கலவை நிறைந்த முகத்துடன், ஒரு வாஷ்பேசினுக்கு முன்னால் வந்து நின்று, நீரை வாரி முகத்தில் இறைத்து, வண்ணங்களைக் களைகிறாள் ஒரு பெண். வண்ணங்கள் கலையக் கலைய முகத்தில் ஆங்காங்கே வடுக்கள் தென்படத் தொடங்குகின்றன. ஹோலி என்ற பெயரால் நிகழ்த்தப் பட்ட அத்துமீறல்களை மிக அழுத்தமாக, ஒரு வார்த்தையும் பேசாமல் பதிவு செய்தது அக் குறும்படம்.

வண்ணங்களின் திருவிழா பெரும்பாலும் துன்புறுத்தலுக்கான மறைப்பாக தவறாகப் பயன் படுத்தப்படுகிறது. தேவையற்ற அநாகரிகமான தொடுதல், கட்டாயப்படுத்திப் பூசப்படும் வண்ணம், அசவுகரியத்தை அமைதிப்படுத்தக் கோரும் அசட்டுச் சிரிப்பு. வண்ணங்கள் மங்கி, தெருக்கள் சுத்தமாக கழுவப்பட்ட பிறகும் நீண்ட காலம் நீடிக்கும் அதிர்ச்சி இவற்றின் காரணமாக மூன்றில் ஒரு பங்கு பெண்கள் ஹோலியின் போது கொண்டாட்டத்தில் ஈடுபடாமல், வீட்டிற்குள் இருக்க முடிவு செய்கிறார்கள் என்கிறது இக் குறும்படம்.

இந்த ஆண்டும் நேரடியாகத் தங்கள் அனுபவத்தைப் பல பெண்கள் காணொலிகளாகப் பகிர்ந்திருக்கிறார்கள். மதுராவில் ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்றது குறித்துக் காணொலியில் பேசிய ஒரு பெண், பண்டிகைகளின் போது பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார்.

பண்டிகைச் சூழல் சில ஆண்கள் பெண்களைத் துன்புறுத்துவதற்கான வாய்ப்பாக மாறியுள்ளது என்றும், பெண்களின் உதடுகள், மார்பகம், இடுப்பு, பின்புறம் உள்ளிட்ட இடங்களைக் குறிவைத்துத் தடவுவதாகவும், ஆபாசமான கருத்துகளை உதிர்ப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதை எதிர்த்துக் கேட்டால், “அப்படியானால் நீங்கள் ஏன் இங்கே வருகிறீர்கள்?” என்று மிரட்டப்படுவதாகவும் வேதனைப்பட்டுள்ளார். (https://www.instagram.com/reels/DVdX7AQifN7/) இது போல ஏராளமான காணொலிகள் கடந்த சில நாட்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இங்கிலாந்து நாட்டில் இருந்து ஹோலியில் பங்கேற்க வந்த டூயி என்ற இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் பெண்ணுக்கு நடந்த கொடுமையை அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட காணொலியில் விரிவாகக் கூறியுள்ளார். (https://t.co/zIK7n9foKv) தன்னுடைய தனி உடற்பாகங்கள் மீது அநாகரிகமாகத் தீண்டியதுடன், தன் உடைக்குள்ளும் கை நுழைத்து, (அவர் விரிவாகச் சொல்வதை நாம் தவிர்த்துள்ளோம்) மிக மோசமாக நடந்துகொண்டதாகக் கூறியுள்ள அவர் “இது விழா அல்ல; பாலியல் தொல்லை; குற்றம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்களை மிகவும் கேவலமாக நடத்தும் இவர்கள் காட்டுமிராண்டிக்கு ஒப்பானவர்கள், மார்பையும் இடுப்பையும் இவர்கள் தங்களது தாயின் உடலில் காணவில்லையா என்றும் கேள்வியெடுழுப்பி விட்டு தனது விசா காலம் முடியும் வரை நேபாளத்தில் சென்று தங்கியிருக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

2018-ஆம் ஆண்டு இத்தகைய நிகழ்வு ஒன்றைப் பதிவு செய்த பி.பி.சி, பெண்களின் மீது, விந்தணுக்கள் நிரப்பப்பட்ட பலூன்களைக் கொண்டு வந்து உடைத்து நனைத்தது உள்பட ஆபாசமும், சொல்லக் கூசும் நடவடிக்கைகளும் ஹோலி கொண்டாட்டத்தில் நிறைந்திருந்ததைப் பதிவு செய்தது.

வடநாட்டில் எங்கும் இதே நிலைமைதான். பாலியல் வன்கொடுமைகளுடன், ஜாதியத் தாக்குதல்கள் நடத்துவதற்கான வாய்ப்பாக அமைகின்றன. கடந்த ஆண்டு மதுராவில் ஜாட்டுகளும், தாக்கூர்களும் ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்கள் மீதும், குழந்தைகள் மீதும் நடத்திய பாலியல் தாக்குதல்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்திய கும்பல் கொலைவெறித் தாக்குதல் தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஹோலி வன்முறைகளை ரொமாண்டிசைஸ் செய்து படமெடுத்த பாலிவுட் வியாபாரிகள், மதத்தின் பெயரால் இதற்கு பெரும் விளம்பரமளித்த ஊடகங்கள், இவற்றைக் கொண்டு இந்தியாவின் அழுக்குகளை மறைக்கப் பார்த்த ஹிந்த்துத்துவாவினர் அனைவரும்தான் ஹோலி என்ற இந்தப் பலூனை ஊதிப் பெருக்க வைத்தவர்கள்.

இந்த அருவெறுக்கத்தக்க நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டுமல்ல அயல்நாடுகளிலும் தொடர் கின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்தகைய செயல்கள் மீது அருவெறுப்பு பட்டு, அந்நாட்டினர் பலர் கண்டன காட்சிப் பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.

ஹோலி குறித்து அல்ஜசீரா இணையதளத்தில் எழுதியுள்ள, ஊடகவியலாளர் வித்யா கிருஷ்னன், “நாம் கொண்டாட்டத்தை ஒரு காட்சிப் பொருளாகவும், காட்சியை நமது தோல்விகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் மாற்றுகிறோம்” என்று குறிப் பிட்டுள்ளார். அந்தக் கண்ணாடி, இந்தியாவில் மதத்தின் பெயரால் நிகழும் குரூரங்களை உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.

மக்கள் தொகையில் சரி பகுதியினரான பெண்களுக்குப் பாதுகாப்பன இடத்தை வழங்க வக்கில்லாத, பாதுகாப்பான கொண்டாட்டத்தை நடத்த வகையில்லாத இந்தக் காவிக் கலாச்சாரத்தை வைத்துக் கொண்டுதான் வாயளப்பார்கள் – ”பெண்களைத் தாயாக மதிக்கும் பாரதப் பண்பாடு!” என்று!

வாயை மூடுங்க சார்!

– சமா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *