புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி! வேட்புமனு தாக்கல் செய்யப் போதிய கால அவகாசம் இல்லை!

2 Min Read

 

புதுச்சேரி, மார்ச் 17– புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் திருவிழாவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் நாள் குறித்து விட்டது. 9.4.2026ஆம் தேதி புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும், ஓட்டு எண்ணிக்கை 4.5.2026ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்

ஆனால், மனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசத்தை இந்த முறை தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை. அதுவும் நேற்று 16ஆம் தேதி துவங்கி, 23ஆம் தேதிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அப்படி பார்த்தால், சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய குறுகிய நாட்களே உள்ளன.

மொத்தமே எட்டு நாட்கள் தான் உள்ளன. அதிலும் சனி (21ஆம் தேதி), ஞாயிறு (22ஆம் தேதி) என பார்த்தால், மொத்தமே வேட்பு மனு தாக்கல் செய்ய 6 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

அதிலும், 19ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பு உள்ளூர் விடுமுறையாக வருகிறது.

இதற்குள் தொகுதி பங்கீட்டையும், வேட்பாளர் களையும் கட்சிகள் அறிவிக்க வேண்டும்.

ஆனால், புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியை தவிர்த்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இதுவரை தொகுதி பங்கீட்டையும், வேட்பாளர்களையும் அறிவிக்கவில்லை.

எந்த முக்கியமான கட்சியும் தங்களது வேட்பாளர்களுக்கு சீட் உத்தரவாதம் கொடுக்கவில்லை.

உங்களுக்கு சீட் உறுதி. நீங்கள் போய் தொகுதியில் வேலையை பாருங்கள் என்று வாய்மொழியாக கூட யாருக்கும் சொல்லவில்லை.

இது அனைத்து கட்சிகளிலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் கனவுடன் தொகுதியில் பல கோடி பரிசுகளை கொடுத்து களம் இறங்கியுள்ள அனைத்து கட்சி பிரமுகர்கள் எப்போது கூட்டணி பிரச்சினை தீர்வது, நமக்கு எப்போது சீட் கிடைப்பது என்று கலக்கத்தில் உள்ளனர்.

கால அவகாசம்

ஆளும் கட்சியான தேசிய ஜனநாய கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 சீட்; பா.ஜ. கூட்டணிக்கு 14 என்று முடிவாகி இருந்தால் கூட போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகவில்லை.

முதலமைச்சர் ரங்கசாமி போட்ட மாநில தகுதி நிபந்தனையும் அப்படியே நிற்கிறது. இதேபோல் அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியிடும் இடங்கள், தொகுதிகள் குறித்தும் முடிவாகவில்லை.

இது ஒருபக்கம் இருக்க எதிர்க்கட்சியான தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணியோ தலைமை தாங்குவதில் உரசல் தொடர்வதால், சீட் பங்கீடு இறுதியாகவில்லை. அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு எப்படியாக இருந்தாலும், அதற்காக எப்படி ரூம்போட்டு பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருந்தாலும், கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள்மனு தாக்கலுக்கான கால அவகாசம் முடிந்து விடும்.

அந்த அளவிற்கு தேர்தலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டும் புதுச்சேரி அரசியல் கட்சிகளுக்கு ‘செக்’ வைத்துள்ளது.

இது போன்ற சூழ்நிலையில் கடைசி நேரம், கடைசி நாள் வரை தள்ளிபோட்டு வேட்பாளர்களை அரசியல் கட்சிகள்அறிவித்தால் எந்த வேட்பாளர்களும் வெற்றி என்பது சிக்கல் தான்.

அப்படி ஒரு இக்கட்டான சூழல், எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது ஏற்பட்டுள்ளது.

எனவே, முக்கியமான கட்சிகள் அனைத்தும் உடனடியாக தொகுதி பங்கீட்டினை முடித்துதங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் இறங்குவது நல்லது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *