நாட்டைப் பீடித்த நோய்களை ஒழித்துக் கட்டுவோம்!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், சுதந்திரம் அடைந்த நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதியால் பிணைக்கப்பட்டிருக்கும் நாட்டை சுதந்திர நாடாகக் கூற முடியுமா?  என்ற அர்த்தமுள்ள வினாவை உலகத் தலைவர் தந்தை பெரியார் தொலைநோக்குப் பார்வையுடன் மக்கள் மன்றத்தில் முன்வைத்தார்.

அவ்வகையில், இந்தியாவில் கடவுள், ஜாதி-மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், மூடநம் பிக்கைகள் ஆகியவற்றால் மக்கள் இறுக்கப் பிணைக் கப்பட்டிருப்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவே அமையும்.

எந்த ஒரு நாடும் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு சமத்துவ-சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அந்நாடு வளர்ந்த நாடாக, வளர்ச்சிபெற்ற நாடாக ஏற்றம்பெற இயலும் என்பது வரலாற்றுப் பேருண்மையாகும்.

ஜாதி-மதப் பாகுபாடு, ஆண்-பெண் பாகுபாடு என்பது பாமர மக்களிடையே மட்டுமன்றி, படித்தவர்களிடையேயும் மண்டிக்கிடப்பது வேதனைக்குரிய விடயமாகும். ஜாதி மதத்தால் சிக்குண்டு கிடக்கும் மக்களை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

எடுத்துக்காட்டாக, ஒடிசா மாநிலத்தில் நுவாகோன் கிராமத்தைச் சேர்ந்த சர்மிஸ்தா சேத்தி என்பவர் அங்கன்வாடி மய்யத்தில் சமையலராக நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். அப்பெண் தாழ்த்தப்பட்ட (தலித்) சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் சமைக்கும் உணவை தங்கள் குழந்தைகள் உண்ணக் கூடாது எனக்கூறி அவ்வூரில் உள்ள மற்ற பிரிவினர் கடந்த நான்கு மாதங்களாக குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர் எனும் செய்தி  மனிதகுலம் வெட்கிக் தலைகுணிய வேண்டிய வேதனை மிகுந்த செய்தியாகும்.

இதுகுறித்து மேற்கண்ட பட்டதாரிப் பெண் சாஸ்மிதா வேதனையுடன் கூறுகையில்;      நான் பணியில் சேர்ந்த நாள் முதல் கிராம மக்கள் எங்களை ஒதுக்கி வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் காலை ஏழு மணிக்கு சத்துணவு மய்யத்திற்குச் சென்று, பெருக்கிச் சுத்தம் செய்துவிட்டுக் குழந்தை களுக்காகக் காத்திருக்கிறேன்.

ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளைத் தவிர வேறு யாரும் வருவதில்லை. அங்கன்வாடி மூலம் வழங்கப்படும் சத்துணவுப் பொருட்களைக் கூட வாங்க மறுக்கின்றனர் என்று கண்ணீர் மல்கத் தெரிவித்திருப்பது, நம் நாட்டில் புரையோடிப் போயுள்ள ஜாதி எனும் நோயின் தாக்கம் மக்களை எவ்வாறு பிளவுபடுத்தி-வேறுபடுத்தி வைத்துள்ளது என்பதற்கு மேற்கண்ட இழிவான செயல்களே சிறந்த உதாரணமாகும்.

கல்வி கற்று வேலைவாய்ப்பைப் பெற்று, பொருளாதாரத்தில் ஏற்றம் கண்டு, வீட்டிற்கும் நாட்டிற்கும் பயன்பட வேண்டிய வருங்காலச் சிற்பிகளான மாணவச்  செல்வங்களின் பிஞ்சு நெஞ்சில் ஜாதி எனும் கொடிய நோயைப் புகுத்தி அவர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்துவது என்பது நாட்டின் வளர்ச்சியையும், முன்னேற் றத்தையும் முடக்கும் விபரீதப் போக்காகும்.

மேற்கண்ட அதிர்ச்சியூட்டும் தகவல் அண்மையில் (16.02.2026) பிரபல தமிழ்நாளேடு ஒன்றில் வெளிவந்ததை அறிந்த  சமூகநீதிச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், மனித நேயப் பண்பாளர்கள், கல்வியாளர்கள், சமூகநல ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள்-மாணவர்கள், மகளிர் உள்ளிட்டோர் செய்வதறியாது திகைத்து நின்று வேதனையால் வெம்பினர். நாம் நாகரிக உலகில்,  அறிவார்ந்த சமூகத்தில்தான் வாழ்கின் றோமா? எனும் அய்யப்பாடு அனைவர் மனதிலும் மேலோங்கி எழுந்தது.

இத்தகைய அவலநிலையை அறவே அகற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கில்;  ‘ஜாதி ஒழிப்பு வீரர்’ தந்தை பெரியார் கூறிய “நாட்டைப் பீடித்த நோய்களான” கடவுள், ஜாதி-மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், மூடநம்பிக்கைகள் உள்ளிட்டவற்றை நாட்டை விட்டே விரட்டி அடிக்க  நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள மக்களிடையே ஜாதி எனும் கொடிய நோயால் ஏற்படும் தீமைகளை, கேடுகளை, தொல்லைகளை, துயரங்களை எடுத்துக்கூறி அவர்களிடையே போதிய விழிப் புணர்வையும், புதிய எழுச்சியையும் ஏற்படுத் திடுவோம்!

தந்தை பெரியாரின் அன்னை மணியம்மையார் பணி  முடிக்கத் தமிழர் தலைவர் தலைமையில் கடமையாற்றுவோம்!

– சீ. இலட்சுமிபதி, தாம்பரம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *