இட ஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் உயர்ஜாதி மாணவர்கள் இடம்பிடித்தது எப்படி?
வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) நுழைவுத் தேர்வு முடிவுகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இட ஒதுக்கீடு முறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளும், தகுதியான மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியும் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
உயர் ஜாதிப் பிரிவைச் சேர்ந்த ரவிக்குமார் ரானா, பழங்குடியினச் சமூக பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளார்!
உயர்ஜாதி மாணவர் முறைகேடாக இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பிரிவுக்கு உரிய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இன்றி உயர்ஜாதி மாணவர் எப்படி எஸ்சி/எஸ்டி பிரிவில் சேர்க்கப்பட்டார்? இது தகுதியான மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் சதிச் செயல் அல்லவா?
பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த அலட்சியப்போக்கு, சமூக நீதிக்கு எதிரானது எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தகுதியான மாணவர்களுக்குச் சேர வேண்டிய இடங்களை முறைகேடாக மற்றவர்களுக்கு வழங்குவது – கல்வித்துறையில் பெரும் கறையை ஏற்படுத்தும் என மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச சார்நிலைச் சேவைகள் தேர்வு ஆணையம் சுகாதாரப் பணியாளர் (பெண்) பணிக்கான 9,212 காலியிடங்களுக்கு நடத்திய முதன்மைத் தேர்வின் இறுதித் தேர்வு முடிவுகளும் வகைவாரியான கட்–ஆஃப் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
பொதுப் பிரிவு (Unreserved) – 50; தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் (SC) – 35; பழங்குடியினர் (ST) – 13.75; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) – 42.50 உயர்ஜாதி ஏழைப் பார்ப்பனர்களுக்குக் கட்ஆஃப் மதிப்பெண் வெறும் 3 மட்டுமே!
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள்: 9.75 மதிப்பெண்கள்.
வட மாநிலங்களில் இடஒதுக்கீடு என்பது எந்தக் கோலத்தில் இருக்கிறது என்பதற்கு இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளே போதுமானவை!
உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு (EWS) இடஒதுக்கீடு என்பது வந்தாலும் வந்தது – பார்ப்பனர்கள் காட்டில் மழையோ மழைதான்!
வட மாநிலங்களிலும் தந்தை பெரியார் தேவைப்படுகிறார். வடமாநில சமூகநீதியாளர்கள் வெறும் அரசியலுக்கு மட்டும் இடஒதுக்கீட்டைக் கையில் எடுக்காமல், ‘அடிப்படை சிந்தனை மாற்றம்’ என்ற திசையில் பயணிப்பதுபற்றி சிந்திப்பார்களாக! செயல்படுவார்களாக!
