‘ஞானபீட விருது’ பெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவுக்குத் தமிழர் தலைவர் நேரில் வாழ்த்து!

2 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று ( 17.03.2026) காலை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை, அவருடைய (சென்னை பெசன்ட் நகர்) இல்லத்தில் சந் தித்து, ‘ஞானபீட விருது’ பெற்றமைக்காகப்  பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

‘‘தாங்கள் இல்லம் வந்து வாழ்த்துத் தெரிவித்ததை ‘ஞானபீட விருது’ பெற்றதன் பெரும் பலன்களில் ஒன்றாகக் கருதுகிறேன்’’ என்று உள்ளம் பூரித்து மகிழ்ந்து உரைத்தார்.

தமிழர் தலைவர் அவர்களை மகிழ்ச்சி பொங்க வரவேற்ற கவிப்பேரரசு வைரமுத்து, தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவிக்க முயன்றார். ‘விருது பெற்று தமிழினத்திற்குப் பெருமை சேர்த்திருக்கும் தங்களுக்கு, நாங்கள்தான் முதலில் சிறப்பு செய்ய வேண்டும்’ என்று தமிழர் தலைவர் பாசத்தோடு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழர் தலைவர் அவர்களுக்குக் கவிப்பேரரசு வைரமுத்து பொன்னாடை அணிவித்து அன்பை வெளிப்படுத்தினார்.

தேன் கலந்த தேநீர் அருந்தும்போது, தந்தை பெரியாரின் வாழ்க்கைச் சம்பவத்தை ஆசிரியர் விளக்க, இதுவும் ஒரு வாழ்வியல் சிந்தனை என்று பொருத்தமாகக் கூறி மகிழ்ந்தார் கவிப்பேரரசு.

புகழ் வரும்போது சேற்றை வாரி வீசும் பொறாமைக்காரர்களை நினைவு கூர்ந்து பாராட்டுகளையும், வசவுகளையும் தந்தை பெரியார் பொருட்படுத்தாமையை ஆசிரியர் விளக்கும்போது, கவிப்பேரரசு கைதட்டி ரசித்தார்.

‘தந்தை பெரியாரை முழுமையாக இன்னும் வாசிக்க வேண்டி இருக்கிறது’ என்றார் கவிஞர். ஆசிரியர், ‘நான் இன்னும் பெரியாரியல் மாணவன்தான்’ என்று அடக்கத்துடன் குறிப்பிட்டார்.

மணியம்மையார் பெரியார் –திருமணம், அண்ணாவின் பிரிவு, அன்னை மணியம்மையாரின் தியாகம் என்று திராவிட இயக்க வரலாற்றை ஆசிரியர் எடுத்துரைத்தபோது, ஒரு மாணவனைப் போல் கவிப்பேரரசு வைரமுத்து செவிமடுத்தார். ‘‘உங்களிடம் மட்டும்தான் சில விளக்கங்களைக் கேட்டுப் பெற முடியும்; நீங்கள் ‘வாழும் வரலாறாக’ இருக்கிறீர்கள்!’’ என்று கூறி சில அய்யங்களை தெளிவுபடுத்திக் கொண்டார்.

இனிப்புத் தடவிய 35 நிமிடங்கள் சடுதியில் ஓடின. கவிஞர்  வைரமுத்து அவர்களிடம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரை நிகழ்த்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் தமிழர் தலைவர் தெரிவிக்க, ‘தாங்கள் இல்லம் வந்து அழைக் கும்போது மறுப்பேனா? ஆணையாக ஏற்றுக் கொள்கிறேன்’ என்று சொன்ன பதிலில், அன்பு பிரவாகம் எடுத்தது.

விடைபெற்ற தமிழர் தலைவரை வாசல் வரை வந்து வழியனுப்பினார் கவிப்பேரரசு வைரமுத்து. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பேராசிரியர் நம். சீனிவாசன் உடன் ஆகியோர் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *