புதுடில்லி, மார்ச் 16- தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங் களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்தியத் தேர்தல் ஆணையம், அய்ந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவித்ததும், அய்ந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள்படி, நேற்று (15.3.2026) முதல் தேர்தல் முடியும்வரை ஒருவர், தனது கையில் ரொக்கமாக ரூ. 50,000 வரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அதற்குமேல் ரொக்கம் கையில் வைத்திருந்தால், அதற்கான உரிய ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.
பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருக்கும் சுவர்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் உருவப்படம் உள்ளிட்டவை அகற்றப்படும். மேலும், தலைவர்களின் சிலைகள் துணிபோர்த்தி மூடி மறைக்கப்படும்.
ஆளும் கட்சி, அரசு இயந்தி ரத்தையோ, வாகனங் களையோ, அதிகாரிகளையோ தங்களது சொந்தப் பிரச்சாரத்திற்கு பயன் படுத்தக் கூடாது. வழிபாட்டுத் தலங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன் படுத்தக்கூடாது.
வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட வற்றைக் கொடுப்பது தடை செய்யப் படுகிறது. தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
