அன்னை நாகம்மையார் படத்தைத் திறந்து வைப்பது ஏன்?
இளைஞர்களே, மகளிரே நம் கடமை என்ன?
தஞ்சை, மார்ச் 16- மிக மிகத் தேவையான ஒரு காலகட்டத்தில் நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாநில மாநாட்டில் அன்னை நாகம்மையார் அவர்களின் படத்தினை திறந்து வைக்கும் அரிய வாய்ப்பினை நல்கிய தமிழர் தலைவருக்கும், மாநாட்டுக் குழுவினருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்து உரையினைத் தொடங்குகிறேன்.
2026 பிப்ரவரி 21 இல் நடைபெறும் இந்த மாநில மாநாட்டில் 1933 மே மாதம் 11 இல் 93 ஆண்டுகளுக்கு முன் மறைந்த அன்னை நாகம்மையார் நினைவினைப் போற்றும் விதமாக அவர் படத்தினை நாம் ஏன் திறக்க வேண்டும்?
தன்னுடைய 13 ஆவது வயதிலேயே தன் பெற்றோர்களை எதிர்த்து, ‘‘ராமசாமியைத் தான் மணப்பேன் இல்லை யென்றால் உயிர் துறப்பேன்’’ என்று பிடிவாதம் செய்து தந்தை பெரியார் அவர்களை மணம் முடித்த அவருடைய இணையர் என்ற காரணத்தினாலா?
இல்லை தோழர்களே! அய்யா தந்தை பெரியார் அவர்கள் தமிழர்களின் உயர்வுக்காக, விடுதலைக்காக ஆற்றிய அரும்பணிகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு செயலாற்றிய நாகம்மையாரின் தொண்டறத் திற்காக!
அய்யா அவர்கள் காந்தியின் தலைமை ஏற்று காங்கிரஸில் இருந்த போது நடந்த ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக அந்நியப் பொருட்களை மறுத்து, கதரினைப் பரப்பிய காலகட்டத்தில் வசதி வாய்ப்பு இல்லாத வீட்டில் பிறந்து வளர்ந்திருந்த நாகம்மையார், மாமியார் தனக்கு தந்திருந்த பட்டாடை, நகை முதலிய அணிகளைத் துறந்து, கதர் ஆடை அணிந்து எளிமையை ஏற்றுக் கொண்டதால்!
காந்தியாரே பாராட்டினார்
அதே ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக கள்ளுக்கடை மறியல் செய்து அய்யா தந்தை பெரியார் அவர்கள் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் ஈரோடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்த பெண்களைத் திரட்டி காந்தியார் அவர்களே பாராட்டும் விதமாக ஆங்கிலேய அரசு விதித்திருந்த 144 தடைச் சட்டத்தை மீறி பெரிய அளவில் போராட்டம் செய்ததால்!
அடுத்து 1924இல் காந்தியார் விரும்பாவிட்டாலும் தமிழ்நாட்டிலிருந்து சென்று அய்யா அவர்கள் கலந்து கொண்டு இறுதியில் வெற்றியும் பெற்ற வைக்கம் போராட்டத்திலும் அய்யா அவர்கள் கைதானதற்கு பிறகு தொடர்ந்து அங்கு சென்று அங்கிருந்த பெண்களை எல்லாம் திரட்டி ஆட்சியாளர்களையும் காவலர்களையும் பார்ப்பனர்களையும் எதிர்த்து வீரங்காட்டியதால்!
‘குடிஅரசு’ பதிப்பாளர்
1925இல் காங்கிரசை விட்டு வெளியேறி வந்து அய்யா தொடங்கிய குடிஅரசு இதழுக்கு போராட்டக் காலங்களிலும் அய்யா சிறைப்பட்டிருந்த நேரங்களிலும், அய்யாவின் சுற்றுப்பயணக் காலங்களிலும் பதிப்பாளராக இருந்து குடிஅரசு இதழினைத் தொடர்ந்து வெளியிடுபவராக தொய்வற நடத்திச் சென்றதால்!
1929ஆம் ஆண்டில் அய்யா தந்தை பெரியார் அவர்களுடன் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடு களுக்குச் சுற்றுப்பயணம் சென்று ஒரு மாதம் தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கி இருந்து அங்குள்ள தோழர்களின் இயக்கச் செயல்பாடுகளை கண்டு மகிழ்ந்து ஊர் திரும்பும் போது, ‘‘உங்களுக்கு விருப்பமான இந்த மலேசியா நாட்டுப் பொருள்கள் எவை? நாங்கள் உங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறோம்’’ என்று கேட்ட தோழர்கள் இடத்தில் ‘‘நீங்கள் இங்கே சுயமரியாதை இயக்கத்தைப் பாடுபட்டு பரப்பி இருக்கிறீர்களே… அதுவே எனக்கு மிக அருமையான பரிசு’’ என்று கூறி அய்யா அவர்கள், அவர்களுடைய இயக்கம், அதிலுள்ள தோழர்கள் இவர்களைத் தவிர வேறு பொருள்களின் மீது பற்று இல்லாதவராக எளிமையானவராக இருந்ததால்!
மறுமணங்களை நடத்தி வைத்தவர்
இன்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே நிறைய ஜாதி மறுப்பு திருமணங்கள், மறுமணங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து நடத்தி வைத்து, அப்படி செய்து கொண்ட இணையர் பலருக்கு குறிப்பிட்ட காலம் அவர்களுடன் தங்கி இருந்து இல்லறத்தை நல்லறமாக நடத்தத் துணையாக இருந்ததால்!
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம், அவரு டைய படத்தினை நாம் ஏன் இங்கு திறக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை!
சரி! இப்படிப்பட்ட செய்திகளைத் தெரிந்து கொள்வ தால் நாம் கற்றுக்கொண்ட, கற்க வேண்டிய பாடங்கள் என்ன என்று சிந்தித்தால்…..
நகைப் பைத்தியம் ஒழிய வேண்டும்!
மகளிர் தோழர்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டி யது, நம் பெண் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் சொல்ல வேண்டியது, பிடிவாதம் செய்து காதல் திருமணம் செய்து கொள்வது மட்டுமல்ல. அந்த இணையர் மக்களுக்காக, சமுதாயத்திற்காகப் பணியாற்ற வரும் பொழுது நாமும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எப்படி கள்ளுக்கடை மறியலின் போது ஆங்கிலேய அரசின் தடைச் சட்டத்தினை எதிர்த்து நாகம்மையார் அவர்கள் போராடினார்களோ அதுபோல! வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்ட போது இங்கு சென்றால் பாம்பு கடிக்கும் என்று கூறிய பார்ப்பனரை எதிர்த்துப் பதில் கூறிய அந்த வீரம் நமக்கும் வரவேண்டும். கதர்பரப்பும் இயக்கத்தின்போது பிறந்த வீட்டில் அணிய வாய்ப்பில்லாத நகை, பட்டாடைகளை, அணிந்து ஆடம்பரத்தை அனுபவிக்கக் கிடைத்த வாய்ப்பை மறுத்த அம்மையார் போன்று நமக்கும் நகை, ஆடை மீதுள்ள பைத்தியம் ஒழிய வேண்டும்.
நம் உறவுகளிலும் ஊர்களிலும் ஜாதி மறுப்பு, மத மறுப்பு இணையேற்புகளை, மறுமணங்களை நடத்தும் வண்ணம் அப்படிச் செய்பவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்களாக நாம் மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைய இளைஞர்களுக்கு ஒரு கோரிக்கையாக, காதல் திருமணமோ அல்லது பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமோ தந்தை பெரியார் அவர்கள் நாகம்மையாரை அவருக்கு இருந்த கடவுள், விரதம், தாலி நகை விருப்பம் போன்றவற்றிலிருந்து கல்வி அறிவு பெறாத அந்தக் காலத்திலேயே விடுவிக்க எப்படி பக்குவமாகச் செய்திகளைக் கூறி அவரை மாற்றினார்களோ, அந்த முறையில் நீங்களும் உங்கள் இணையரை மாற்ற முயற்சிக்க வேண்டும். “நாங்கள் என்ன செய்வது, அவர்கள் மாற விரும்பவில்லை என்கிறார்கள்” என்று சாக்குச் சொல்லித் தப்பிக்க நினைக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கடவுள், மதம், மூடப் பழக்க வழக்கங்களால் தம் அறிவினை, விடுதலையை இழந்த பெண்களுக்கு வழிகாட்ட வேண்டியவர்களாக, ஆடம்பரம், கவர்ச்சி மாயைகளில் சிக்கிக் கொண்டு தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்வதுடன் மட்டுமல்லாமல் நம்மையும் நாட்டையும் பின்னோக்கி இழுக்கும் பிற்போக்குகளுக்கான வாய்ப்பாக அமைந்து விடாமல் இருக்க, வரும் சட்டமன்றத் தேர்தலில் சமூக நீதிக்கான சரித்திர நாயகரின் ‘திராவிட மாடல்’ அரசு தொடர மக்களை, குறிப்பாக பெண்களை நெறிப்படுத்தும் வகையில் நாம் பணிகளைச் செய்ய நமக்கு ஊக்கம் அளிக்கும் வீராங்கனையாக அன்று அவருடன் இணைந்து இயக்கத்தில் பயணித்த அனைத்து வீராங்கனைகளின் சார்பாக நாகம்மையார் அவர்களின் படத்தைத் திறந்து வைக்க எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி அமைகிறேன்.
