மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கண்டன உரையாற்றுகிறார்கள்
சென்னை, ஏப்.11- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், ஏப்ரல் 12 அன்று ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பதிலாக சைதை, தேரடி திடலில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டமாக நடைபெறும் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நாளை 12-4-2023 ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சார்பில் ஏற்கெனவே கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
நேற்று (10.4.2023) தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சர் – தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால், ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்நிலையில், நேற்று பிற்பகல் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், ‘ஆன்லைன் மீதான தடைச் சட்டத்திற்கு’ ஒப்புதல் அளித்துள்ளார். இது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி. எனினும், இன்னும் ஆளுநர் அவர்களால் கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததாலும், மேலும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்தும் மற்றும் சனாதன ஆதரவுப் பேச்சுக்கள் குறித்தும் எந்தவிதமான வருத்தமும் விளக்கமும் அளிக்காத காரணத்தினால், 12-4-2023 அன்று (நாளைய தினம்) மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டி ருந்த கண்டன ஆர்ப்பாட்டம், அதே 12-4-2023 (புதன்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டை, தேரடித் திடலில் “மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டமாக” நடைபெறும்.
தலைமை:
டி.ஆர்.பாலு, எம்.பி., (பொருளாளர் தி.மு.க.)
கண்டன உரையாற்றுபவர்கள்
ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
சு. திருநாவுக்கரசர் (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)
வைகோ (பொதுச் செயலாளர், ம.தி.மு.க.)
கே.பாலகிருஷ்ணன்
(செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்மாநிலக் குழு)
இரா. முத்தரசன்
(செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்மாநிலக் குழு)
கே.எம்.காதர்மொகிதீன்
(தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)
தொல். திருமாவளவன்
(தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)
எம்.எச்.ஜவாஹிருல்லா
(தலைவர், மனிதநேய மக்கள் கட்சி)
ஈ.ஆர். ஈஸ்வரன்
(பொதுச் செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி)
தி.வேல்முருகன்
(தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி)