ஓர் ஆய்வுக்களம் தேசத்தந்தை அண்ணல் காந்தி அடிகளும் ஸநாதனம் அவருக்குத் தந்த தேசிய அவமானமும்! (1)

9 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

1924இல் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான ராஜ்யம், முழுக்க முழுக்க ஹிந்து ஸநாதன முறைப்படியான மன்னராட்சியின் கீழ் இருந்தது.

அதனால் ஹிந்து-ஸநாதன தர்மப்படி, வைக்கம் என்ற ஊரில் உள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்கள் வழியே,  பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஹிந்துமத வர்ணதர்மப்படி கீழ் ஜாதியென்று முத்திரை குத்தப்பட்ட ஈழவ ஜாதியினர் (நம் மாநில நாடார்கள் – அன்றைக்கு சாணார் என்று அழைக்கப்பட்ட ஜாதியினரும்) அவர்களுக்குக் கீழ் படி நிலையில் ஜாதி வர்ண தர்மப்படி ஆக்கப்பட்ட அனுஷ்டானத்தில் இருந்த புலையர், தீயர் என்பவர்கள் உட்பட பல “கீழ் ஜாதியினரும்” அந்த கோயிலைச் சுற்றிய வீதிகளில் நடக்கவும் உரிமையற்றிருந்த நிலை கண்டு, மானிட நேயத்துடன் மனித உரிமை சத்தியாகிரகத்தைத் துவங்கி உள்ளூர்வாசிகளும் அந்த ராஜ்ய பிரமுகர்களும் நடத்தி, கைது செய்யப்பட்ட நிலையில், அந்த அரசின் அடக்குமுறையை எதிர்த்து, அச் சத்தியாகிரகத்தைத் தொடர, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று அழைக்கப்பட்ட தந்தை பெரியாரை கேட்டுக் கொண்ட நிலையில், அந்த சாத்வீக, சத்யாகிரகம் தொடர்ந்து வலிமை பெற்ற வரலாறு அறிவோம்.

கட்டுரை

தந்தை பெரியார் பெற்ற கொள்கை இலட்சிய வெற்றியில் அது மிகவும் சிறப்புக்கு உரிய ஒன்று.

அதை முடித்து வைப்பதற்கு வைக்கம் போராட்டத்தினை கடுமையாக எதிர்த்து, வைதீகத்தையும், வர்ணாசிரம தர்மத்தையும் காப்பாற்றிய உயர்ஜாதி பார்ப்பனர்களான நம்பூதிரிகளின் தலைவரோடு பேச ‘மஹாத்மா’ காந்தி திருவிதாங்கூர் ராஜ்யம் சென்று, சந்தித்து சமரசம் செய்து கொடுத்த ஏற்பாட்டில் எப்படி ஸநாதனம் காந்தி அடிகளை அவமானப்படுத்தியது என்ற வரலாற்றை “கோவில் நுழைவுப் போராட்டம்” என்ற 624 பக்கங்களைக் கொண்ட ஒரு வரலாற்றுச் சான்றாவணம் போன்று எழுத்தாளர் ராம் தங்கம் அவர்கள் எழுதிய நூலில் (சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்) “காந்தியின் வைக்கம் வருகை” என்கிற தலைப்பில் விவரமாக வெளியிட்டுள்ளார்!

காந்தியடிகள் தேசத் தந்தை என்று மதிக்கப்பட்டவர் இன்றும் கூட! (ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத் தவிர).

அவர் எத்தகைய அவமானத்திற்கு ஆளாகி, மானம் பாராத – பணியில் இறங்கினார் என்ற ஒரு வரலாற்றுத் துளி ஸநாதன தர்மம் மனிதாபிமானத்திற்கு – மனித கவுரவத்திற்கும் எப்படி எதிராக நடந்து கொண்டது என்பதை இன்று அறியும் நமக்கு அதிர்ச்சியாகவும் அவலமாகவும் தெரிகிறது.

குடிசெய்வார்க் கில்லை பருவம் – மடிசெய்து

மானம் கருதக் கெடும். (குறள் 1028)

இது தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்த பொதுத் தொண்டுக்கான குறள் விளக்கம்.

காந்தியடிகள் அவமானப்பட்டபோது அந்த வரலாற்றுத் துளி கண்டு சுயமரியாதை கொதித்து எழுகிறது!

அதையொட்டிப் பிறந்ததே இந்த பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்.

அந்நூலில் வரலாற்று நிகழ்வுகள் வெள்ளித் திரைக்காட்சி போல் ஓடுவதைப் படித்துப் பாருங்கள்:

கட்டுரை

– கி.வீரமணி

காந்தியின் வைக்கம் வருகை

காந்தியின் வைக்கம் வருகை உறுதியானதைத் தொடர்ந்து, பத்திரிகைகள் அவரது வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விதமாகக் கட்டுரைகளை எழுதின. 1925 மார்ச் 4 அன்று, டில்லியிலிருந்து புறப்பட்ட காந்தி, 7ஆம் தேதி மெட்ராஸுக்கு வந்தடைந்தார். அன்று, சிறீநிவாச அய்யங்காரின் வீட்டில் தங்கினார்.

மாலையில், திருவல்லிக்கேணிக் கடற்கரையில் அவர் பேசும்போது, வைக்கம் சத்தியாக்கிரகத்தையும் குறிப்பிட்டே பேசினார். வாய்ப்புக் கிடைத்தால் சத்தியாக்கிரக எதிர்ப்பாளர்களையும், அனுமதி கிடைத்தால் மகாராணியையும் திவானையும் சந்தித்துப் பேச இருப்பதாகவும் அங்கே தெரிவித்தார்.

கட்டுரை

அதன்பிறகு அன்று இரவு காந்தி, மெட்ராஸி லிருந்து ராஜாஜி, மகாதேவ தேசாய், ராமதாஸ் காந்தி ஆகியோருடன் வைக்கத்துக்கு ரயிலில் புறப்பட்டார். காட்பாடி, சேலம் வழியாகச் சென்ற ரயில், மறுநாள் அதிகாலை ஈரோடு வந்தபோது காந்தியை வரவேற்பதற்காகப் பெரியாரும், முக்கியப் பிரமுகர்களும் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார்கள். வழிநெடுக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இடையிடையே பலரும், வைக்கம் நிதிக்காக வசூலித்த தொகைகளை, காந்தியின் கரங்களில் ஒப்படைத்தனர். மார்ச் 8ஆம் தேதி அன்று மாலை 4 மணிக்கு எர்ணாகுளத்திற்கு ரயில் வந்து சேரும்போது. கொச்சி அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், முக்கியப் பிரமுகர்களும், காந்தியை வரவேற்க வந்திருந்தனர். எர்ணாகுளம் உயர்நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள ரயில் நிலையத்தில் காந்தி வந்திறங்கினார். அங்கு அவர் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

எர்ணாகுளம் நகராட்சியினர் கொடுத்த உற்சாக வரவேற்பைப் பெற்றுக்கொண்ட காந்தி, ‘நான் சமாதானம் உண்டு பண்ணுவதற்காக வந்த தூதுவன் என்றும், பொதுமக்களின் ஆதரவும் பிரார்த்தனையும், எனக்குப் பேருதவியாக இருக்கும்’ என்றும் தெரிவித்தார்.

கட்டுரை

பின்னர் காந்தி ஃபோர்ட் கொச்சிக்கு வந்து சேர்த்தார். அந்த நேரத்தில், ஃபோர்ட் கொச்சி ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தது. காத்தி பேசுவதற்காக, நாட்டுப் படகுகளின் மேல் ஒரு தற்காலிக மேடை கட்டப்பட்டது. பிரிட்டிஷ் கொச்சியின் காங்கிரஸ் தலைவரான கே.ஜே. பெர்லி இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். காந்தி, பரந்த கடற்கரையில் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்கள் முன் உரையாற்றினார்.

‘நமது மதத்தில் தீண்டாமை என்கிற கரும்புள்ளி உள்ளது. அதை நீக்கவேண்டும். அதோடு இங்கேயுள்ள அணுக முடியாத தன்மையை யும் சேர்க்க நான் வருந்துகிறேன். தீண்டாமை, அணுகாமை ஆகிய இரண்டுமே தீமையான வழக்கங்கள். அவை இந்து மதத்தின் பாகங்களாக இருக்க முடியாது. அதுபற்றி வைதீகர்களோடு விவாதிக்க முயற்சி செய்யலாம். வைக்கத்தில் மிகப்பெரிய முரண்பாடுகளுக்கு எதிராகப் போராடும் சத்தியாக்கிரகிகள் இந்து மதத்தை ஒழிப்பதற்காக வரவில்லை. அதைச் சீர்திருத்துவதே அவர்கள் நோக்கம் என்று. நான் அவர்களிடம் சொல்ல வந்துள்ளேன். இந்தப் போராட்டத்தின் அனைத்துத் தாக்கங்களையும் அவர்களிடம் சொல்ல வந்துள்ளேன். எனவே, உங்கள் ஆசீர்வாதங்களையும் உங்கள் அனுதாபத்தையும் என்னுடன் எடுத்துச் செல்வது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வறுமையின் சாபத்திலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்கான சிறந்த வழி, நாம் அனைவரும் கதர் ஆடை அணிவதே ஆகும்.’

அதன்பின் காந்தி, மட்டாஞ்சேரியில் வாழ்ந்து வந்த குஜராத்தியான, மதுராதாஸின் வீட்டில் தங்கினார். காந்தி உரையாற்றியபோது, அதனை மதுராதாஸ்தான் மொழிபெயர்த்தார்.

கட்டுரை

1925 மார்ச் 9ஆம் தேதி, மதியத்திற்குமேல் எர்ணாகுளத்திலிருந்து படகு மூலம் வைக்கத்திற்கு காந்தி சென்றார். அந்நேரம், சில படகுகளில் எதிரே வந்த வைக்கம் சத்தியாக்கிரகக் குழுவினர் வரவேற்பு கொடுத்தனர். அன்று இரவு, வைக்கம் வந்தடைந்த காந்தியை. கே. கேளப்பன், கதர் மாலையிட்டு வரவேற்றார். அப்போது காந்திக்கு, அங்கு வந்திருந்தவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அன்று திங்கட்கிழமை மவுன விரதம் என்பதால், காந்தி யாரிடமும் பேசவில்லை. பதிலுக்குப் புன்னகைத்தார்.

அதன்பிறகு, படகுத்துறைக்குக் கிழக்குப் பக்கம் போடப்பட்டிருந்த பந்தலுக்கு, காந்தியை அழைத்துச் சென்றனர். அங்கே ஊர்மக்கள் அவருக்கு வரவேற்புக் கொடுத்தனர். அப்போது அஞ்சல்துறை ஊழியர் ஒருவர், காந்தியின் பெயருக்குப் பதிவு செய்யப்பட்ட தபாலை அங்கே கொடுத்துச் சென்றார். வரவேற்பு நிகழ்வு முடிந்த பிறகு, நாகர்கோவில் டாக்டர் எம்.இ நாயுடுவின் அலங்கரிக்கப்பட்ட காரில், காந்தியைச் சத்தியாக்கிரக ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆசிரமத்தில் டி.கே. மாதவன் காந்தியை வரவேற்றார்.

சத்தியாக்கிரக ஆசிரமத்திற்கு வந்த திவான் பேஷ்கார் எம்.வி. சுப்பிரமணிய அய்யர், மகாராணியின் அழைப்பைத் தாங்கி, திவான் எழுதிய கடிதத்தைக் காந்தியிடம் கொடுத்தார். அதில் வர்கலாவில் தங்கியிருக்கும் மகாராணி, மார்ச் 12ஆம் தேதி காந்தியைச் சந்திக்க விரும்பிக் கேட்டிருந்தார். அதைப்போல, வர்கலாவில் இருந்த நாராயண குருவும் 13ஆம் தேதி காந்தியைச் சந்திக்கும்படிக் கேட்டிருந்தார். திங்கட்கிழமை காந்தியின் மவுன விரதம் என்பதால், அனைவருடனும் காந்தி நாளைக்குப் பேசுவார் என்று மன்னத்து பத்மநாபன் பிள்ளை தெரிவித்தார்.

1925 மார்ச் 10ஆம் தேதி அதிகாலையிலேயே எழுந்த காந்தி, 5 மணிக்குப் பிரார்த்தனையை முடித்த பிறகு, சத்தியாக்கிரகத் தொண்டர்களோடு பேசத் தொடங்கினார். அவர்களிடம் இந்தப் போராட்டம் வெற்றியடையும் வரை, நீங்கள் நிறுத்தக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். அதன்பிறகு மாவட்ட நீதிபதி பிராக்டனும், காவல்துறை ஆணையர் டபிள்யு.எச். பிட்டும் அவரைச் சந்தித்தனர்.

சத்தியாக்கிரகிகளின் நடவடிக்கைகள் குறித்து, காந்தி அவர்களிடம் விசாரித்தார். அவர்களும் ‘கடந்த ஆறு மாதங்களில் சத்தியாக்கிரகிகளின் நடத்தை நன்றாக இருக்கிறது’ எனத் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் சென்ற பிறகு மெட்ராஸ் மாகாணத்திலிருந்து வந்திருந்த வவேசு அய்யரும், மற்றவர்களும் காத்தியோடு வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

காத்திக்கு, எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளை விவாதித்து சத்தியாக்கிரகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே நோக்கமாக இருந்தது சத்தியாக்கிரகிகளின் கோரிக்கைகள் குறித்து வைக்கம் கோவில் நிர்வாகத் தலைவர் இந்தன்துருத்தி நீலகண்டன் நம்பியாத்திரியுடன் விவாதிக்க காந்தி விரும்பினார்.

இந்தன்துருத்தி நீலகண்டன் நம்பியாத்திரிக்கு யாரையும் சென்று பார்ப்பது வழக்கம் இல்லை என்றும். பார்க்க விரும்புபவர்கள் இந்தன் துருத்தி மனைக்கு வந்து பார்க்கலாம் என்றும், காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. மகாதேவ தேசாய், ராஜாஜி, டி.ஆர். கிருஷ்ண சாமி அய்யரோடு மதியத்திற்கு மேல், இந்தன்துருத்தி நீலகண்டன் நம்பியாத்திரியைச் சந்தித்துப் பேசுவதற்காகக் காந்தி சென்றார்.

வடக்கும்கூர் அரசக் குடும்பத்தின் கீழ். நாடுவழியின் பரம்பரை உரிமை கொண்ட நீலகண்டன் நம்பியாத்திரிதான் சத்தியாக் கிரகத்தை எதிர்த்து வந்தவர்களின் தலைவராக இருந்தார். அவர், வைக்கம் கோவில் அருகே இருந்த, 48 பிராமணக் குடும்பங்களின் ஆட்சி யாளராகவும் இருந்தார். அவர் கட்டளை யிடுவதுதான் வேத வாக்காக இருந்தது.

இந்தன்துருத்தி மனையில் நீலகண்டன் நம்பியாத்திரியோடு, வடக்கும்கூர் ராஜா, தெக்கும்கூர் ராஜா, வழுதன காட்டு ராஜா, எம்.கே. ராமன் பிள்ளை, பி.சி. கிருஷ்ண பிள்ளை, வக்கீல் வெங்கடராம அய்யர், வக்கீல் கணபதி அய்யர், கொச்சு மாடன் கோவிந்தப் பிள்ளை, திவான் பேஷ்கார் எம்.வி. சுப்பிரமணிய அய்யர், உதவி தேவசம் ஆணையர் பி. விஸ்வநாத அய்யர், உள்ளூர் தாசில்தார் சுப்ரமணிய அய்யர் எனப் பலரும் இருந்தனர்.

காந்தியையும், அவரோடு சென்றவர்களையும் நீலகண்டன் நம்பியாத்திரி வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. அவர்கள் தீண்டத் தகாதவர்களோடு இருந்ததால், அவர்களையும் தீட்டானவர்களாகக் கருதி அனுமதிக்க மறுத்தார். அதனால், காந்தி முதலானவர்கள் வீட்டின் திண்ணையில் அமர வைக்கப்பட்டனர். முதலில், முந்தைய நாள் தனக்குக் கடிதம் எழுதியவர்களைக் குறித்து, காந்தி விசாரித்துத் தெரிந்து கொண்டார். அதன்பிறகே காந்தி பேசத் தொடங்கினார்.

‘நான் என்ன கருதுகிறேன் என்றால், இந்து மதத்தில் இது வரையிலான என் புரிதலின்படி அரசின் பொதுச் சாலையோ, தனியார் சாலையோ மக்கள் பயன்படுத்தும்போது, அதில் எந்தப் பாகுபாடும் இல்லை என்பது தான். எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பது, ஒரு விஷயமே இல்லை என்றுதான் நினைக்கிறேன். அவர்கள். சாலைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது. தடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அது சரி அல்ல. தடுக்கப்படுபவர்கள் எவராக இருப்பினும், அதுவும் சரி அல்ல. இந்தத் தடைக்கு எந்த ஆதாரத்தையும், அது என்ன காரணமாக இருந்தாலும், எந்தச் சாஸ்திரமாக இருந்தாலும், என்னால் ஏற்க இயலவில்லை. இது என் முதல் அம்சம்.

நான் தொடர்வதற்கு முன்னால் எல்லா அம்சங்களையும், மொத்தமாகப் பேசி விடுவதைவிட, ஒவ்வோர் அம்சமாக விவாதித்தால் ஒவ்வொன்றையும் நன்றாக நாம் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றுகிறது’ என்றார் காந்தி.

தாழ்த்தப்பட்டவர்கள், பொதுச் சாலைகளைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் குறித்து காந்தி கேட்ட கேள்விக்கு, பிராமணர்களின் நீண்டகால உரிமைகளைக் குறிப்பிட்டுப் பேசிய நீலகண்டன் நம்பியாத்திரி, ‘தாழ்த்தப்பட்ட ஜாதியினர் ஒடுக்கப்படுவது அவர்களின் கர்மா.’ என்று பதிலளித்தார்.

‘ஏன் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் ஒடுக்கப்படு கிறார்கள்?’ என்று காந்தி கேட்டார். நீலகண்டன் நம்பியாத்திரியும், அவரது குழுவினரும் காந்தியின் வாதங்களைத் தர்ம சாஸ்திரங்கள் மற்றும் பிறவற்றை மேற்கோள் காட்டி எதிர்த்தனர். பொது வாக்கெடுப்பு, இரு தரப்பு விசாரணை, பரீட்சை சோதனை எனக் காந்தி அவர்களுக்கு மூன்று வாய்ப்புகளை வழங்கினார். நீலகண்டன் நம்பியாத்திரிக்கும் காந்திக்கும் இடையே நடந்த மூன்று மணி நேர விவாதத்தில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை காந்தி அங்கிருந்து கிளம்பிய உடனேயே, அவர் அமர்ந்திருந்த பகுதிகளில் ‘தீட்டு’ சுத்தம் செய்தனர்.

அன்று மாலையில் வைக்கத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காந்தி பேசினார். அப்போதும், அவருக்குப் பலரும் வரவேற்பு அளித்தனர். முந்தைய நாள் கிடைத்த வரவேற்புக்கும். இன்று கொடுக்கும் வரவேற்புக்கும், சேர்த்துப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய காந்தி’சத்தியாக்கிரகம் என்பது உண்மையை, அகிம்சையை அடித்தளமாகக் கொண்டது. சத்தியாக்கிரகிகள், நன்னெறிகளிலிருந்து பிரிந்தால், அவர்களிடமிருந்து தான் விலகி விடுவதாகவும் தீண்டாமை. அணுகாமையை சாஸ்திரங்கள் கூறவில்லை. மாறாக இந்தச் சமுதாயத்தில் அவை இருப்பது இந்து மதத்திற்கு ஒரு கறை’ என்று விரிவாகப் பேசினார்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *